November 28, 2023
  • November 28, 2023
Breaking News
April 28, 2018

சேவைக் கட்டணம் வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – ராமதாஸ்

By 0 870 Views

இந்தியாவில் அனைத்து வங்கி சேவைக்ளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்து வருவதாக வந்த செய்தியை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள், அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்தினால் அது வணிக வங்கிகளின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இப்போது இலவசமாக வழங்கிவரும் இச்சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும்படி கட்டாயப்படுத்துவதே மத்திய அரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

பற்று அட்டைகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.100 வரை வசூலிக்கப்படும் போதிலும், சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கிகளின் பணம் வழங்கும் மையங்களில் மாதத்திற்கு 3 முறையும் இலவசமாக பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியும். ஆனால், இந்த சேவைகள் அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.

காசோலைகள், பற்று அட்டைகள் மற்றும் அவை சார்ந்த சேவைகளுக்கு சேவை வரி வசூலிக்கும் அரசின் முடிவும், அதைக் காரணம் காட்டி அச்சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகளின் முடிவும் தவறானவை; ஏற்க முடியாதவையாகும்.

பொருட்கள் மற்றும் சேவை வரி இயக்குனரகம் கோருவதைப் போன்று வங்கிகள் பின்தேதியிட்டு சேவை வரி செலுத்துவதாக இருந்தால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியிருக்கும். இந்த தொகை முழுவதும் வாடிக்கையாளர்களின் தலையில் தான் செலுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு இதுபெரும் சுமையாக அமையும். இதற்கு அஞ்சி வாடிக்கையாளர்கள் வங்கி முறையில் இருந்து வெளியேற நினைத்தால் அது வங்கிகளுக்கு பெரும் இழப்பாக அமையும்.

எனவே, வங்கிகள் வழங்கும் காசோலைகள், பற்று அட்டைகள் மற்றும் அவை சார்ந்த சேவைகள் அனைத்தையும் இலவச சேவைகளாகக் கருதாமல் வாடிக்கையாளர்களின் உரிமைகளாக கருத வேண்டும். இதற்காக வரி வசூலிக்கும் முடிவை மத்திய அரசும், கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகளும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்..!”