இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாலிகிராமத்தில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.
அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வருகிறது.
நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சந்தித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஆனால், இந்த சந்திப்பில் கொஞ்சம் கூட அரசியல் இல்லையென்றும், தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது முதலில் வந்து நலம் விசாரித்தவர் விஜயகாந்த் என்பதால் அவர் நலமடைந்து வந்ததும் அவரை நலம் விசாரிக்க தான் வந்ததாக ரஜினி தெரிவித்தார்.
விஜயகாந்த் இல்லத்திலிருந்து வந்த செய்தியில் விஜயகாந்தை ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறியிருக்கின்றனர்.
ரஜினியைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்தை வந்து சந்தித்துச் சென்றிருக்கிறார்.
எந்த சந்திப்பிலும் அரசியல் இல்லையென்று கூறப்பட்டாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்றே கூறத் தோன்றுகிறது. இதன் விளைவுகள் விரைவில் தெரிய வரும்.
அதுவரை இதெல்லாம் அரசியல் சந்திப்புகள் இல்லயென்றே நாம் நம்பலாம்..!