ரஜினி எப்போதும் உச்சத்தில்தான் இருக்கிறார். ஆனாலும், அவரது ‘டை ஹார்ட்’ ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களும் அவரின் மீது ஈர்ப்பாக இருந்த கால கட்டத்தில்… அவரும் முழு ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருந்த போதே அவருக்காகவே ‘முதல்வன்’ கதையை எழுதினார் இயக்குநர் ஷங்கர்.
அதில் ரஜினி மட்டும் நடித்திருந்து கட்சியை அறிவித்து அதற்கடுத்து வந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ‘ஷ்யூர் ஷாட்’டாக அப்போதே தமிழக முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், அதற்கான தைரியம் அவருக்கு அப்போது வராமல் போக, அந்த வாய்ப்பைக் ‘கோட்டை’ விட்டார்.
இப்போது “அரசியல் எனக்கு ஆகவே ஆகாது…” என்ற கமல்ஹாசனே அரசியலுக்கு வந்து 5 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெறும் நிலையில் ரஜினிக்கு அரசியல் ஆசை வந்திருக்கிறது.
ஆனால், அவரது பிரச்சினை என்னவென்றால் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலை எதிர்கொண்டால் நேரே சிஎம் ஆகிவிட வேண்டும். இப்படி 5, 10 சதவிகித ஓட்டுடன் திருப்தி கொண்டு “இது இப்பதான் நடக்க ஆரம்பித்திருக்கும் குழந்தை…” என்றெல்லாம் ஸ்டேட்மென்ட் விட்டு கட்சியைக் கட்டிக் காப்பாற்ற முடியாது.
அதனாலேயே இன்னும் அரசியல் கட்சியை அறிவிக்காமல் இருக்கிறார். எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிடும் சாத்தியம் இருக்கிறது. ஆனால், சிஎம் ஆகி விட முடியுமா..?
அதற்குதான் அவர் மீண்டும் சினிமாவை நம்புகிறார். மீண்டும் ஷங்கரிடம் சென்று ‘முதல்வன் 2’ எடுக்கக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், அதைவிடவும் ஃப்ரெஷ்ஷாக இந்தியாவை பாகுபலியால் ஆட்டிபடைத்த எஸ்.எஸ்.ராஜமௌலியை வைத்து அவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்தால் அகில இந்தியாவின் பார்வையையும் தன் அரசியல் பக்கம் திருப்பி விடலாம் என்பது அவர் திட்டமாக இருக்கிறதாம்.
இதன் ஒரு கட்டப் பேச்சு முடிந்து விட்டதாம். ‘சன் பிக்சர்ஸ்’ படத்தில் ரஜினி நடித்து முடித்தபின் இந்த ராஜமௌலியின் படம் தொடங்கும் என்கிறார்கள்.
ராஜமௌலிக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே அவர் ரஜினியை ஆட்சியில் அமர்த்தும் அளவில் ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம்.
அப்ப ரஜினி கட்சிக்கு அவர்தான் கொ.ப.செ..?