முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அப்படி நாயகனுக்கு முத்தத்துடன் நேர்ந்த முதல் காதல் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை.
குடும்பமே சிங்கப்பூரில் செட்டில் ஆகி செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வந்தவுடன் நேராக சிதிலமடைந்த ஒரு வீட்டைப் போய் பார்க்கையில் நமக்கே புரிந்து போகிறது அது அவருடைய காதலியின் வீடு என்று.
அவள் வேறு இடத்தில் திருமணம் ஆகிப் போய் விட, கவலையில் இருக்கும் அவரை மீட்க அவரது உயிர் நண்பன் தன் தங்கையை மணமுடித்து கொடுக்கிறான்.
இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் நண்பனின் தங்கையும் விரும்பிய படியே அந்தத் திருமணம் நடந்து, அவளும் வயிற்றில் குழந்தையை சுமக்க… முதல் காதலியைப் பற்றிய ஒரு உண்மை ஆதித் சிலம்பரசனுக்கு தெரிய வருகிறது.
அதற்குப் பின் வாழ்வில் எல்லாமே முரணாகிப் போக அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
ஆதித் சிலம்பரசன் இரு வேறு வயது வித்தியாசங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ரொம்பவும் மெனக்கெடவில்லை. சிறு வயதுக்கு கொஞ்சம் அதிகமாக அவரும் நண்பர்களும் முடி வைத்திருக்கிறார்கள் கொஞ்சம் முதிர்ந்த கேரக்டர்களுக்கு அந்த முடியின் மேல் அங்கங்கே வெள்ளை தடவிக் கொள்கின்றார்கள்.
ஆனால் நடிப்பதில் நிறைய ஆர்வம் உள்ளவர் ஆதித் சிலம்பரசன் என்பது புரிகிறது. நண்பர்களே வெறுக்கும் மாடு மேய்க்கும் பெண் காயத்ரியின் நல்ல குணம் அறிந்து காதலிக்கும் போதும், நண்பனின் தங்கைக்கு தன்னைவிட மிகவும் குறைவான வயது என்பதால் நல்லுள்ளத்துடன் அதை மறுக்கும் போதும், முதல் காதலி காயத்ரிக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடையும் போதும் நன்றாக நடித்திருக்கிறார்.
காயத்ரியின் நிறத்துக்கும், அழகுக்கும் அவரை மாடு மேய்க்கும் பெண்ணாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. “சின்ன கவுண்டரில் சுகன்யாவை ஆடு மேய்க்கும் பெண்ணாக ஒத்துக் கொள்ளவில்லையா..?” என்ற நியாயமான கேள்வியை முன் வைத்தால் இதையும் ஒத்துக் கொள்ளலாம்.
ஆதித் சிலம்பரசனின் நல்ல மனதை புரிந்து வைத்திருக்கும் நயமான காதலியாக வரும் காயத்ரி, காதலுக்கு இலக்கணம் ஆகிறார்.
ஆதித்தை விரும்பி மணக்கும் இரண்டாவது நாயகி இளமை வசீகரிக்கிறது. அசப்பில் வரலட்சுமி சரத்குமார் போல இருப்பவர் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்தால் ஒரு ரவுண்டு வரலாம்.
உயிர் நண்பனாக நடித்திருக்கும் ஒரு ஹீரோவுக்குரிய லட்சணத்துடன் இருக்கிறார் உடற்கட்டை பேணினால் அவரும் ஒரு ரவுண்டு வர முடியும்.
மற்ற எல்லா பாத்திரங்களிலும் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக நமக்கு அறிமுகமானவர்களாக இல்லாவிட்டாலும் இயல்பான கதையோட்டத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டைசன் ராஜுக்கு இதுதான் முதல் படமாக இருக்கக்கூடும். ஆனால் இந்த படத்திலேயே ‘இசை தளபதி’ என்று டைட்டிலுடன் கெத்தாக வருகிறார். அவரது இசையில் பாடல்கள் “பரவாயில்லை..!” ரகம். பின்னணி இசையில் இன்னும் தேர்ச்சி அடைய வேண்டும்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் ஏ. பி. ராஜீவ் இயக்குனர் பாலாவின் பரம ரசிகர் போல் இருக்கிறது. பாலா படம் நினைவுக்கு வரும்படியாக கிளைமாக்ஸ்சை அமைத்திருக்கிறார்.
நம்பிய காதலியை நட்டாற்றில் விட்டு விட்டு அவர் என் சிங்கப்பூர் போய் செட்டில் ஆனார் என்பதற்கு பதில் இல்லை.
ஏற்கனவே அவர் காதல் பற்றி அறிந்து அந்தக் காதலின் விளைவான ஒரு அதிர்ச்சி உண்மை தெரிந்தும், அவருக்காக தன் உடன் பிறந்த அண்ணனை இழந்தும், வயது வித்தியாசம் அதிகம் இருந்தும் தன் தங்கையை அவருக்கு மணமுடித்து தரும் அளவுக்கு அவரது நண்பருக்கு என்ன தேவை என்பதும் புரியவில்லை.
இதுபோன்று படம் நெடுக எழும் கேள்விகளை திரைக்கதை எழுதும் போது கேட்டுத் தெளிந்து இருந்தால் நெகிழ்ச்சியான ஒரு படமாக இருந்திருக்கும்.
இருந்தாலும் புதியவர்களின் புதிய முயற்சியை வாழ்த்தி வரவேற்கலாம்.
ராஜா வீட்டு கன்னு குட்டி – எங்கே செல்லும் இந்தப் பாதை..?
– வேணுஜி