November 22, 2024
  • November 22, 2024
Breaking News
September 20, 2018

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

By 0 1382 Views

தலைப்பை வைத்து இது எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அப்படியே ‘மர்டர் மிஸ்டரி’யான இந்தக் கதையின் முடிவையும் யாராலும் கண்டுபிடிப்பது கடினம்.

‘ராஜா’ என்கிற காஸ்டபிள் ‘ரங்குஸ்கி’ என்ற பெண் எழுத்தாளினியிடம் காதல் வயப்பட்டு, அவளது காதலைப்பெற பல வழிகளிலும் முயல்கிறார். அதில் ஒன்று, இன்னொரு கேரக்டர் ரங்குஸ்கி மீது காதல் வயப்படு ராஜாவை விட்டுவிடச்சொல்லி மிரட்டுவது போல் போனில் குரலை மாற்றிப் பேசுவது.

‘வேண்டாம்’ என்றால் பெண்களுக்கு ‘வேண்டும்’ என்பதுதானே..? அந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகி ராஜாவை ரங்குஸ்கி காதலிக்க, எதிர்பாராத திருப்பமாக ராஜா உருவாக்கிய அந்தக் கற்பனைக் குரல் ஒரு கேரக்டராக மாறி ராஜாவையே மிரட்டி ஒரு கொலையில் அல்ல… பல கொலைகளில் சிக்க வைக்கிறது.

அது யார்..? எதற்காக..? என்பதை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.

‘ராஜா’வாக மெட்ரோ சிரிஷும், ‘ரங்குஸ்கி’யாக சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். 

சிரிஷுக்கு இது இரண்டாவது படம். அவரது அதிர்ஷ்டம் அவருக்கு ரொம்பவும் மெனக்கெட்டு எக்‌ஷ்பிரஷன்கள் காட்ட வேண்டிய அவசியமில்லாத கேரக்டர்களாக அமைவது. இந்தப்படத்தில் கொஞ்சம் அப்பாவியான வேடம் என்பதால் அதற்கு ரொம்பவே பாந்தமாக இருக்கிறார்.

சாந்தினியின் கரியரில் இந்தப்படம் அவருக்கு ஒரு ‘லேண்ட்மார்க்’காக இருக்கும். இத்தனை அழுத்தமான கேரக்டர்களில் நயன்தாரா போன்ற நடிக்கத் தெடிந்த நடிகைகள்தான் பரிமளிக்க முடியும் என்கிற நிலையில் அதற்கு ஒப்பாக இதில் சாந்தினி பளிச்சிட்டிருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலத்தை இந்தப்பட கேரக்டர் உருவாக்கித் தரக்கடவது…

மற்றபடி படத்தில் பளிச்சென்று அடையாளம் தெரிபவர்கள் இன்ஸ்பெக்டராக வரும் விஜய் சத்யாவும், ஹீரோவின் நண்பனாக வரும் கல்லூரி வினோத்தும். கல்லூரி வினோத் வரும் இடங்களில் எல்லாம் கலகலப்பாகிறது தியேட்டர்.

அங்கங்கே தொய்வடையும் கதை நம்மைச் சோர்வடைய வைக்கிறது. வசனங்கள் ஒன்று இலக்கியத்தரமாக இருக்க வேண்டும் அல்லது இயல்பாக இருக்க வேண்டும். நிகழ்வின் உணர்வை இட்டுச் செல்லாத வசனங்கள் பலவீனமாக இருக்கின்றன. 

“சரி… அதென்ன ரங்குஸ்கி..?” என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவதுதான். ‘எந்திரனி’ல் எழுத்தாளர் சுஜாதா ஒரு கொசுவுக்கு வைத்த பெயர் அது என்பது பெரும்பாலும் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். 

சாந்தினி ‘ரங்குஸ்கி’யாக இருக்க, சிரிஷ் எதற்காக எழுத்தாளர் சுஜாதா படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் சுஜாதாவின் ரசிகராக இருக்கும் அளவில் ‘ரங்குஸ்கி’ என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறாரா இல்லையா என்றுகூட அறிந்து வைத்திருக்க மாட்டாரா..?

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு பலமாகியிருக்கிறது. யுவாவின் ஓளிப்பதிவும் அருமை. ராபர்ட்டின் நடனமும், பாடலும் உற்சாகமாக இருக்கிறது. 

முதல் பாதியில் பெரிய நம்பிக்கை வைக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் பெரிய குறைகள் எதுவுமில்லை.

ராஜா ரங்குஸ்கி – ஒன்ஸ் பார்க்கலாம்..!

– வேணுஜி