எல்லா தலைமுறையிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் இருக்கும் முரண்தான் இந்தப் படத்தின் கதைக்களம்.
தன் விருப்பப்படி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது மகனின் விருப்பம். ஆனால் தன் ஒரே மகன் விருப்பப்படி போய் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறார் தந்தை.
அப்படி என்ன ஆபத்தான லட்சியம் மகனுக்கு..?
சிறிய வயதிலிருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரனாக வேண்டும் என்பது அவனது ஆசை. அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சும் தந்தை எல்லோரையும் போல் அவர் ஒரு வேலைக்குப் போய் மனைவி, மக்கள் என்று வாழ வேண்டும் என்று விரும்ப, முடிவு என்ன ஆனது என்பதுதான் கிளைமேக்ஸ்.
நாயகனாக அகில சந்தோஷ். ஹீரோவுக்கு ஏற்ற தோற்றத்துடன் இருப்பதோடு, ஒரு ரேசர் எப்படி இருப்பாரோ அந்தப் பாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார். அப்பாவின் சொல்லைத் தட்ட முடியாமலும், அதே நேரம் தன் லட்சியத்தில் அவருக்குத் தெரியாமல் முன்னேறுவதில் முனைப்பும் காட்டுவதில் சரியாகச் சொல்லி இருக்கிறார்.
தொடக்கத்தில் தோல்வியைச் சந்திக்கும்போது இயலாமையையும் பொருத்தமாக வெளிக்காட்டி இருக்கிறார்.
நாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா. தொலைக் காட்சித் தொடரில் நடிக்க வரும் முன்னரே ஒத்துக் கொண்ட படமாம். காதலிக்கத் தோதாக அழகாக இருக்கிறார் லவ்வபிள் லாவண்யா.
அப்பாவின் சொல் கேட்பதா, அல்லது லட்சியத்தில் வெல்வதா என்ற குழப்பம் அகில் சந்தோஷுக்கு வரும்போது அவர் விருப்பப் படியே முடிவெடுக்க மோட்டிவேட் செய்யும்போது லாவண்யா பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
மகனை வழிக்குக் கொண்டு வந்து விட முடியும் என்று நம்பும் வேடத்தில் அமைதியாக ஆனால் அழுத்தமாக நடித்திருக்கிறார் அகிலின் அப்பாவாக நடித்திருக்கும் சுப்பிரமணியன்.
கதாநாயகனின் அம்மாவாக பார்வதி, நண்பர்களாக சரத், நிர்மல், சதீஷ், ரேஸுக்கான பைக் உருவாக்கித் தருவதில் எக்ஸ்பர்ட்டாக பைக் மெக்கானிக்காக ஆறுபாலா, பைக் ரேஸ் பயிற்சியாளர் அனீஸ், வில்லனாக அரவிந்த் என அத்தனை பாத்திரங்களும் சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
அகிலின் சிறு வயதுப் பையனும் பொருத்தமாகவும், நடிப்புத் திறன் கொண்டும் தெரிகிறான்.
ரேஸ் காட்சிகளை நம்பகத் தன்மையுடன் படமாக்கி இருப்பதில் இயக்குநர் சட்ஸ் ரெக்ஸின் திறமை தெரிகிறது. அத்துடன் பைக் ரேஸ் பற்றிய தரவுகளைத் திரட்டி இருப்பதில் அவரது உழைப்பும் தெரிகிறது.
பிரபாகரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். பரத்தின் இசையும் பொருத்தம்.
ரேஸ் பிரியர்கள் ரசிப்பார்கள். பட ரேசில் முந்துகிறதா பார்ப்போம்..!