தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது உலகறிந்த விஷயம். ஒரு சிறந்த இயக்குனராகவும் தான் அறியப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன் நடிப்பில் அமைந்த இந்த 50ஆவது படத்தைத் தானே இயக்கியும் இருக்கிறார்.
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து இரண்டு தம்பிகள், கைக் குழந்தையான தங்கையோடு தலைநகரம் வந்து சேரும் தனுஷ் தன் தம்பிகள் தங்கையை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லும் கதைக்களம்.
வாலிப வயது வரையான கதையை புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டு, அனைவரும் வளர்ந்த பின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் தனுஷ்.
தம்பிகள் இருவரில் சந்தீப் கிஷன் ஒரு முரடனாகவும் ரவுடியாகவும் வளர இன்னொரு தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் அவரும் அடிதடி பேர்வழி தான். இவர்கள் தலையிடும் பிரச்சனைகளுக்கு எல்லாம் பஞ்சாயத்துக்காக போய் வருவாது அண்ணன் தனுஷின் வேலையாக இருக்கிறது.
அது வளர்ந்து கொலைகள் அளவுக்குப் போக தனுஷ் எந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்பது ரத்தமும், ரௌத்திரமும் ஆக சொல்லப் பட்டிருக்கிறது.
படம் முழுதும் ஆக்கிரமித்திருப்பது நடிகர் தனுஷ் தான் அசுரனுக்குப் பிறகு தன் கெட்டப்பில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைத் தந்து நடித்திருக்கும் அவர் தம்பிகள், தங்கை மீதான பாசத்தில் நெகிழ வைத்து விடுகிறார்.
“தம்பியை அனுப்பு… இல்லையென்றால் உன் குடும்பத்தையே காலி செய்து விடுவேன்..!” என்று மிரட்டும் தாதா சரவணன் கோஷ்டியை ஒற்றை ஆளாகப் போய் ஓய்த்து விட்டு வருவது அவரது ரௌத்திரத்தின் ஆரம்பம்.
அவரது கெட்டப்பும் சரி அதிகம் பேசாத இறுக்கமான அந்த முகமும் சரி அவரது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை காட்டுகிறது. எழுத்து இயக்கம் தனுஷ் என்று போட்டுக் கொள்வதில் அவருக்கு ஆசை இருக்கலாம் ஆனால் நம்மை அதிகம் கவருவது இந்த நடிகர் தனுஷ் தான்.
தனுஷின் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் உடல் மொழியிலேயே ஒரு ரவுடி என்பதை காட்டிவிடுகிறார். அந்த ரவுடிக்குள் ஒரு காதலும் இருப்பதையும் நம்மால் ரசிக்க முடிகிறது.
இன்னொரு தம்பியான காளிதாஸ் ஜெயராம், கல்லூரி மாணவனாக பொருத்தமாக இருக்கிறார்.
தனுஷின் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், தனக்கு நேர்த்த கொடுமையை விட தன் அண்ணனுக்கு நேர்ந்த கொடுமையை பெரிதாக நினைத்து அதற்கு பழிவாங்க துடித்து வீரத்தின் விளைநிலமாக நிற்கிறார்.
முக்கிய தாதாக்களாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும், சரவணன் கனக்கச்சிதம். பார்வைக்கு பாகவதர் போல தெரியும் சரவணன் விட எஸ்.ஜே சூர்யாவின் நக்கல் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அவரை வெகு உயரத்துக்கு கொண்டு சென்றன. அதற்கு நன்றி கடனாகவோ என்னவோ ஒரு முக்கிய பாத்திரத்தில் அண்ணன் செல்வராக உன்னை நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.
காவல் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் வரும் அறிமுகம் அகலம் ஆனால் அவர் பெரிதாக ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமே செய்யவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான்,
இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், திலீபன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள். அதில் அபர்ணா பாலமுரளியின் அளப்பறை கொஞ்சம் ஓவர் தான்.
பாடல்களை விட பின்னணி இசை மூலம் கவனம் ஈர்க்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்,
ஓம் பிரகாஷின் ஒழிப்பதிவு தனித்துவம் பெறுகிறது. ரத்தம் மட்டுமில்லாமல் காட்சிகளையே செவ்வண்ண நிறத்தில் படமாக்கி இருக்கிறார்.
முதல் பாதி அற்புதமான வந்திருக்கிறது. இரண்டாவது பாதையில் வரும் திடீர் திருப்பம் படத்தின் பலத்தை கொஞ்சம் அசைத்து பார்க்கிறது. ஆனால் இதுதான் இந்த கதையில் வித்தியாசம் என்று தனுஷ் நினைத்திருப்பதால் அதை தவிர்த்து இருக்க வாய்ப்பே இல்லை.
லாஜிக்குகளில் அங்கங்கே குறைகள் தெரிந்தாலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருப்பதில் வென்று இரக்கிறார் இயக்குனர் தனுஷ்.
இந்த செல்போன் யுகத்தில் எத்தனை கொலைகள் ஒரே ஏரியாவில் நடந்து கொண்டிருந்தால் அது உலகம் முழுக்க போய் சேர்ந்திருக்குமே..? இத்தனை கொலைகள் நடந்திருந்தும் அதனை கண்டும் காணாமல் இருக்கும் பிரகாஷ்ராஜ் மீது எந்த நடவடிக்கையும் அவரது மேல் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லையா என்பது போன்ற கேள்விகள் நிறையவே எழுகின்றன.
ராயன் – அண்ணனுக்கு ஜே..!