December 27, 2024
  • December 27, 2024
Breaking News
December 5, 2024

புஷ்பா 2 திரைப்பட விமர்சனம்

By 0 107 Views

புஷ்பா முதல் பாகம், அவன் எப்படி செம்மர கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி ஆகிறான் என்று சொன்னது. இந்த இரண்டாவது பாகம் அந்த சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்ன – அது இந்திய அரசியலில் எவ்வளவு தூரம் வியாபித்து நிற்கிறது என்று சொல்கிறது. 

முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இது எந்த மாதிரியான படம் என்று தெரிந்திருக்கும். எனவே, அதனுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் ரசிக்கும்படி இருக்கிறதா? என்பதுதான் கேள்வியே தவிர கதை – கத்திரிக்காய், லாஜிக் – விஷயங்கள் எல்லாம் பார்க்க வேண்டியதே இல்லை.

ஆனாலும் இந்த இரண்டாவது பாக புஷ்பா மிரட்டி இருக்கிறான் மிரட்டி…

அவனே சொல்வது போல் அவன் வெறும் ஃபயர் அல்ல – வைல்ட் ஃபயர்..!

இந்தப் படத்தில் புஷ்பாவுக்கு எதிராக இருக்கும் சவால் அவனைத் தூக்கியே ஆவேன் என்று சபதம் எடுத்து சுத்திக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி பகத் பாசில் முகத்தில் கரியைப் பூச வேண்டும் – இந்த விஷயம் முதல் படத்தினுடைய தொடர்ச்சிதான். 

ஆனால் இது மட்டுமே முழுப் படத்துக்கு போதாது என்று நினைத்த இயக்குனர் சுகுமார் இன்னும் பல பல மசாலாப் பொட்டலங்களை உள்ளே வைத்திருக்கிறார்.

இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா என்று போகிறது திரைக்கதை. 

புஷ்பாவின் ஆட்களை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில்  அடைத்திருக்கிறது. அவர்களை மீட்க வரும் புஷ்பாவிடம் அங்கு இருக்கும் காவலர்கள் சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். உடனே புஷ்பா செய்யும் வேலை என்ன தெரியுமா..? அத்தனை போலீஸ்காரர்களையும் அதே இடத்தில் ரிசைன் பண்ண வைத்து அவர்கள் வாழ்நாளுக்கும் சம்பாதிக்கக்கூடிய (மாமூல் உட்பட) தொகையை அங்கேயே கொடுத்து அப்படியே தன்னுடன் கூட்டிக்கொண்டு போவதுதான்.

அரை மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் காலியாகிறது.

அது மட்டுமா..? முதலமைச்சரைப் பார்க்க புஷ்பா கிளம்பும்போது அவருடைய மனைவி ராஷ்மிகா, “சிஎம்முடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு வாருங்கள் வீட்டில் மாட்ட வேண்டும்..” என்று சொல்லி அனுப்புகிறார்.

ஆனால் போன இடத்தில் “உன்னை மாதிரி ஒரு ரவுடி கூட எல்லாம் நான் படம் எடுத்துக் கொள்ள முடியாது..!” என்கிறார் சி.எம் நரேன். அவர் அலுவலக வாசலிலேயே உட்கார்ந்து எம்பியாக இருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த ராவ் ரமேஷை சிஎம் ஆக்க முடிவு செய்யும்  புஷ்பா, வெளியில் வரும்போது செய்தியாளர்களிடம் ‘அடுத்த மாதம் 24 ஆம் தேதி சிஎம் தன்னுடைய வீட்டுக்கு சாப்பிட வருகிறார்’ என்று மெசேஜ் சொல்லிவிட்டு போகிறார். 

அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் நரேன் ஆட்சியைக் கவிழ்த்து ராவ் ரமேஷை முதல்வராக்கித் தன் வீட்டுக்குக் கூட்டிப் போவதுதான் அவரது திட்டம். இதெல்லாம் நடக்கிற காரியமா என்கிறீர்களா..? நடத்திக் காட்டி இருக்கிறார் சுகுமார். 

இப்படியே நம்மை மிரள வைத்து மிரள வைத்து தறிகெட்டு ஓடும் திரைக்கதை, முக்கால்வாசிப் படத்துக்கு மேல் கொஞ்சம் சென்டிமென்ட் பாதையைத் தேர்வு செய்து முடிகிறது. 

ஆனால் இந்த புஷ்பா இரண்டாம் பாகத்திறகு டபுள் டூட்டியில் வேலை பார்த்திருக்கிறார் நாயகன் அல்லு அர்ஜுன். முதல் பாகத்தை விட இதில் உருட்டல் மிரட்டலும் ஆட்டமும், பாட்டும் பாய்ச்சலும் இரண்டு மடங்கு. ஒரு கட்டத்தில் இப்படி ஒரு கமர்சியல் ஹீரோ தமிழில் இருக்கிறாரா என்று நம்மைக் கேள்வி கேட்க வைத்து விடுகிறார்.

“ஐயா… சாமி…” என்று முதல் பாகத்தில் ஆட்டம் போட்ட ரஷ்மிகா இந்த படத்தில் அதை மிஞ்சும் வகையில் அல்லு அர்ஜுனன் சேர்ந்து இதில் போட்டிருக்கும் ஒரு ஆட்டம் ’10 மடங்கு ஐயா… சாமி…’ என்ற அளவில்… கெட்ட ஆட்டம்..!

அத்துடன் புஷ்பா தீண்டும் போதெல்லாம் பீலிங்ஸ் வந்து அவரை படுக்கையறைக்குள் தள்ளிக் கொண்டு போய் பஞ்சர் ஆக்கி அனுப்புவதெல்லாம் அதிரி புதிரி..!

நரம்பு தெறிக்க வேலை பார்த்திருக்கும் வில்லன் பகத் பாசிலின் நடிப்புப் பசிக்கு முதல் பாதிப் படம் நல்ல தீனி. ஆனால் இரண்டாவது பாதியில் அவரது முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. 

மூன்றாவது பாகத்தில் தீக்காயத்துடன் வந்துவிடுவார் என்று நம்பலாம். 

முதல் பாகத்தில் சமந்தா போட்ட ஆட்டம் போல் இதில் ஸ்ரீ லீலா ஒரு சூப்பர் குத்து போட்டு இருக்கிறார். 

முன்னதில் கலக்கிய சுனிலுக்கு இதில் அவ்வளவு வேலை இல்லை. ஆனால் புஷ்பாவின் ஒவ்வொரு செயலுக்கும் முன்னோட்டம் காட்டிக்கொண்டே இருக்கிறார். 

உலகில் இத்தனை வண்ணங்களா என்று மலைக்கும் அளவுக்கு ஒளிப்பதிவாளரின் ‘கலர் டேஸ்ட்’ கலக்கியிருக்கிறது. 

இந்தப் படத்தில் இப்படி வெளுத்து வாங்கி இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இங்கே இந்த வேலை பார்த்ததால்தான் கங்குவாவில் கவிழ்த்து விட்டாரோ என்று நினைக்க வைக்கிறார். பின்னணி இசையும் டபுள் ஸ்ட்ராங் மிரட்டல். 

ஆனால் ஒட்டுமொத்த தெலுங்கு பட வில்லத்தனத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் ஜெகபதி பாபு உள்ளே வந்ததும் படம் கொஞ்சம் படுக்க ஆரம்பிக்கிறது. இவரை விட்டால் வேறு வில்லனே இல்லையா ஆந்திரா வாலாக்களா..?

அதேபோல் முதல் பட முடிவில் பகத் பாசிலை காட்டி நம்மை டெம்ப்ட் செய்தது போல் இந்த பாக முடிவில் ஒருவர் முதுகைக் காட்டுகிறார்கள் – ஆனால் முகத்தைக் காட்டவில்லை. எனவே நமக்கு பெப்’ இல்லாமல் இந்த இரண்டாவது பாகம் முடிகிறது. 

மூன்றாவது பாகத்தில்தான் அந்த வில்லனைத் தெரிந்து கொள்ள முடியுமாம்.

மொத்தத்தில் ஒரு இடத்தில் ரஷ்மிகா சொல்வது போல் ‘புஷ்பா என்பது வெறும் பெயர் அல்ல ஒரு பிராண்ட்…’

புஷ்பா 2 – டபுள் இம்பேக்ட்..!

– வேணுஜி