நடிகர் அதர்வா எந்த புகாருக்கும் சிக்காத நடிகராக இதுவரை இருந்து வருகிறார். அத்துடன் ‘இயக்குநர்களின் நடிகர்’ என்ற அளவில் கிரியேட்டிவ் விஷயங்களிலும் நல்ல பெயரெடுத்த ஹீரோ.
ஆனால், அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்ததில் முளைத்தது பிரச்சினை. அவரது ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘செம்ம போத ஆகாதே’ என்ற படத்தைத் தயாரித்தார்கள். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை.
‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பாளரான வி.மதியழகன்தான் இன்று போலீஸ் கமிஷனரைச் சந்தித்து அதர்வா மீது புகார் கொடுத்திருக்கிறார்.
என்ன பிரச்சினை..?
மேற்படி படத்தைத் தயாரித்துக் கொடுக்க ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’டுக்கு மதியழகன் 5 கோடியே 50 லட்சம் பணத்தைக் கொடுத்து இருவரும் ‘அவுட்ரைட் அக்ரிமென்ட்’ போட்டுக் கொண்டார்களாம்.
ஆனால், குறிப்பிட்ட காலக் கட்டத்தில் படத்தை அதர்வாவால் முடித்துக் கொடுக்க முடியாததால், வினியோகஸ்தர்களிடம் அவுட்ரைட் ஒப்பந்தம் காலாவதியாகிப்போய் வினியோக ஒப்பந்தமானதில் படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டத்துக்காக இழப்பீடு தர வேண்டி நேர, சதவிகித அடிப்படையில் மதியழகனே அதைத் தீர்த்து விட்டாராம்.
இது தொடர்பாக ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ டிடம் பேசியபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லையென்று தயாரிப்பாளர் சங்கத்தை நாடியிருக்கிறார் மதியழகன். அங்கே அவர்கள் செய்து கொடுத்த உடன்பாட்டின்படி இன்னொரு படம் மதியழகன் தயாரித்தால் அதில் அதர்வா நடித்துக் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
அதற்கு ஒத்துக்கொண்ட மதியழகன் அந்தப் படத்துக்கு அதர்வாவின் சம்பளமாக ஒரு கோடி பேசி, அதில் 45 லட்சம் முன்பணமாகக் கொடுத்தாராம். அத்துடன் அதர்வாவே தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் அத்ற்கான தொகையாக 74 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்திருக்கிறார். ஆக மொத்தம் ஒரு கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்திருக்கிறார்.
அதையும் மதித்து அதர்வா நடிக்க வரவில்லையாம். ஆனால, தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணத்தைத் திரும்பத்தருவதாக ஒத்துக்கொள்ள அதர்வாவும் வாங்கிய முன்பணத்தில் 15 லட்சம் திருப்பித் தந்தாராம். அதில் மீதமிருக்கும் 30 லட்சத்தைத் தராமல் மூன்று மாதங்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
ஆக, முந்தைய படம், இந்தப் படம் ஆகியவற்றால் 6 கோடியே 10 லட்சம் நஷ்டமானதில் பண மோசடி நம்பிக்கை மோசடி செய்த அதர்வா மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி மதியழகன் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
அதர்வா இது குறித்து என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பார்க்கலாம்..!