எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் அதற்குத் தகுதியான கைதிகள் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால அவர்களை விடுவிக்க ஆலோசனை நடந்து வருகிறது.
2000 ஆம் ஆண்டு இவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட தர்மபுரி பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய மாணவிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் மூவருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதி மன்றத்தில் மனுச்செய்தனர்.
அதனை விசாரித்த உச்ச நீதி மன்றம் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இப்போது அவர்கள் 18 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறையுடன் தமிழக அரசு பல்வேறு மட்டங்களில் ஆலோசித்து வருகிறது.
அதேபோல் 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலைவழக்கில் அதே அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அவருடன் படித்த மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.