பிரபுதேவா இயக்கிய தமிழ், இந்திப் படங்களில் இணை இயக்குநர், கதை ஆசிரியராக பணியாற்றியவர் இயக்குநர் எ.சி.முகில் செல்லப்பன். தற்போது அவரை வைத்து ‘பொன் மாணிக்கவேல்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படம் பற்றி கேட்டப் போது ,
“சிவாஜிகணேசனுக்கு ‘தங்கப்பதக்கம்’, ரஜினிக்கு ‘மூன்றுமுகம்’ கமல்ஹாசனுக்கு ‘காக்கிச்சட்டை’ விஜயகாந்த்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ தொடங்கி பலப் படங்கள், விஜய்க்கு ‘போக்கிரி’, சூர்யாவோட ‘சிங்கம்’ இப்படி இங்கே உள்ள முக்கிய நடிகர்கள் பலரோட சினிமா வாழ்க்கையில் போலீஸ் கதைகள் அவங்களுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கு.
அந்த வரிசையில பிரபுதேவாவுக்கு இந்தப் படம் அமையணும்கிற எண்ணத்தோடத்தான் எல்லோருமே கடின உழைப்பை வழங்கி இருக்கோம்’’ என்கிறார், இயக்குநர் எ.சி.முகில் செல்லப்பன்.
அப்படீன்னா இது பிரபுதேவாவுக்காகவே உருவாக் கப்பட்ட கதையா? – அப்படீன்னு கேட்டப் போது ‘என்னோட அப்பா சினிமாவை ரொம்ப நேசிக்கக் கூடிய ஒரு மனிதர். அவர்கிட்ட அப்பப்போ மனசுல தோணும் கதைகளை சொல்வது வழக்கம். ‘போக்கிரி’ படத்துல நான் இணை இயக்குநர். அந்தப் படம் ரிலீஸானப்போ அப்பாவோட போய் படம் பார்த்தேன். படம் முடிஞ்சு வெளியே வந் தப்போ, ‘இந்த மாதிரி ஒரு படம் பண் ணுடா?’ன்னு சொன்னார். அதுக்கு பிறகு அப்படியே ஓடிக்கிட்டே இருந்தேன். இடை யில் நிறையப் போராட்டங்களையும் சந்தித்தேன்.
ஒருநாள் ‘பொன்மனச் செல்வன்’ படத் தோட லைன் மனசுல வந்து விழுந்துச்சு. அதை அப்படியே வந்து பிரபுதேவா சார்கிட்ட சொன்னேன். ’ரொம்ப நல்லா இருக்கு முகில்’னு சொன்னார். நீங்கதான் ‘பொன் மாணிக்கவேல்’னு சொன்னேன். ஒரு சின்ன சிரிப்போட, ‘ஆரம்பிச்சிடலாம்’னு சொன்னார்.
இப்போ படப்பிடிப்பில் அப் படியே பொன் மாணிக்கவேலாகவே உருமாறிவிட்டார் சார். படம் எதிர்பார்த்த மாதிரியே நல்லா வளர்ந்துக்கிட்டிருக்கு. சமீபத்தில் வெளியான போஸ்டர் அப்படி ஒரு ரீச். அதைப் பார்த்த என் அப்பாவுக்கும் அவ்வளவு சந்தோஷம். சரியா சொல்லணும்னா இது என் தந்தையோட கனவுப் படம்.
அது சரி இந்த‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் கதை என்ன?-ன்னு கேட்டா ‘சேலம்தான் எங்க ஊர். சில வருஷங்களுக்கு முன்னே அங்கே காவல்துறை உயர் அதிகாரி பொன் மாணிக்கவேல் பொறுப்பில் இருந்தார். அவரோட நேர்மை, உழைப்பு, தனித்துவம் எல்லாமும் எங்க பகுதியில் ரொம்பவும் பேசப்பட்டுச்சு. அந்தப் பாதிப்புதான் இந்த கதைக்கான விதை.
ரிட்டயர்ட் ஆன பொறகும் இப்போ கூட சிலை கடத்தல் விஷயத்தில் அவர் மேல் சின்னச் சின்னதா விமர்சனம் வந்துக்கிட்டிருக்கு. எப்பவுமே உண்மையா உழைக்கிறவங்க நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவருக்கும் இதை எதிர்கொள்கிற மனப்பக்குவம் உண்டு.
அதை நான் அந்த காலகட்டத்துலயே பார்த்திருக்கேன். அதை இந்தப் படத்தில் ஃபீல் பண்ணலாம் ‘ என்றார்.