July 27, 2024
  • July 27, 2024
Breaking News
April 13, 2020

இன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்

By 0 1262 Views

தமிழ்சினிமாவின்  ‘பாட்டுக்கோட்டை ‘ என்று வர்ணிக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று…

13 ஏப்ரல் 1930 செங்கப்படுத்தான் காட்டில் பிறந்த அவர் முப்பது வயதுக்குள் செய்த சாதனைகள் மகததானவை.

பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பகுத்தறிவு மிகுந்தும் சமூகத்துக்கு நல்ல செய்தி சொல்லியும் இருந்ததால் இன்றளவும் அவரது பாடல்களுக்கு இணையாக வேறு பாடல்கள் இல்லை என்ற அளவுக்கு புகழப்படுகின்றன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது.

விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர் , நடனக்காரர், கவிஞர் என்று பன் முகம் கொண்டவர் பட்டுக்கோட்டை யார். 

“உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” – பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம்.

உடனே பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார்.

பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள்.

கூடவே வந்த நிருபர், “கவிஞரே, வாழ்க்கை வரலாறு…” என்று நினைவூட்டி இருக்கிறார்.

உடனே பட்டுக்கோட்டையார், “முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?” என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

என்றும் மறக்காத அவரது புகழ்பெற்ற பாடல்களில் நினைவு கொள்ளத்தக்க ஒன்று…

” சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா – நான்

சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா… நீயும் எண்ணிப் பாரடா….

(சின்னப் பயலே…)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி உன்னைஆசையோடு
ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி…

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா வளர்ந்து வரும்
உலகத்துக்கே-நீ வலது கையடா-நீ வலது கையடா

தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா! (தனி)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம் பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே-நீ வெம்பி விடாதே..!..”