March 1, 2024
  • March 1, 2024
Breaking News
August 31, 2023

பரம்பொருள் திரைப்பட விமர்சனம்

By 0 233 Views

இந்த சுற்று சரத்குமாருக்கு வெற்றிகரமான சுற்றாக ஆகியிருக்கிறது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்த போர்த்தொழில் இன்னும் ஓடிக்கொண்டிருக்க, அவரது கேமியோ ரோலில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.

கதையின் ஆணிவேர் என்ன என்பது முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. விவசாயி ஒருவர் குழி தோண்டும் போது அதில் ஆயிரம் வருடம் பழமையான ஐம்பொன் சிலை கிடைக்க அதை விற்றுக் காசாக்க நினைக்கும் போது அவர் பலியாகிறார்.

இதைத்தொடர்ந்து இரண்டு இணையான கதைகள் சொல்லப்படுகின்றன. முதல் கதையில் காவல் அதிகாரியான சரத்குமார் மனைவி, மகளை விட்டுப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தவறு செய்தாவது வாழ்க்கையில் சிறப்பாக செட்டில் ஆக வேண்டும் என்பது அவரது கொள்கையாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் நடுத்தர வர்க்க வாழ்க்கையில் வேலையில்லாமல் இருப்பதுடன் நோய்வாய்ப்பட்ட தங்கைக்கு சிகிச்சைக்காக பெரும்பணம் தேவைப்பட, சின்னச் சின்ன சிலைத் திருட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கிறார் அமிதாஷ். இவரே கதை நாயகனாகவும் இருக்கிறார்.

ஓவிய மற்றும் சிற்பக் கலைஞரான காஷ்மிரா பர்தேஷியிடம் நட்பு கொள்ள நினைத்து அவரை அமிதாஷ் அணுகும் முயற்சியும் காண்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் சரத்குமார் வீட்டுக்கு திருடப் போன அமிதாஷ், அவரிடம் மாட்டிக் கொள்கிறார். ஏற்கனவே ஐம்பொன் சிலை களவு போன விஷயம் கேள்விப்பட்டிருக்கும் சரத்குமார் சிலை பரிவர்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமிதாஷ் கையில் அகப்பட்ட நிலையில் அவரை வைத்து அந்த ஐம்பொன் சிலையைக் கைப்பற்றி பெரும்பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

அது நடந்ததா என்பதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகவும் ஆக்ஷன் களத்திலும் பரபரப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சி.அரவிந்த்ராஜ்.

அமைதியான பார்வை ஆனால் கொடூர குணம் என்ற பாத்திரத்தில் அறிமுகமாகும் காட்சி முதலே ஆட்சி செலுத்துகிறார் சரத்குமார். போலீசை எதிர்த்துப் பேசிய குற்றத்துக்காக கஞ்சா கடத்தல் கேசில் சாமானியனை உள்ளே தள்ளும் அவரது அறிமுகமே மிரள வைக்கிறது.

அப்படிப்பட்டவருக்கு அமிதாஷ் மூலம் கோடிக்கணக்கான பணம் வர இருக்க அந்த வாய்ப்பை விட்டு விடுவாரா அவர்? அதற்காக அவர் அமிதாஷை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்பதை அடுக்கடுக்காக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல் அப்பாவித்தனமான… ஆனால் துணிச்சலான இளைஞனாக அமிதாஷ் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். ஆரம்பத்தில் சிலை பேரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாமல் சரத்குமாரிடமிருந்து தப்பிக்கப் போராடும்போது அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

ஆனால் தங்கையின் ஆரோக்கியம் சீராக வேண்டுமானால் அதற்கு பெரும்பணம் தேவைப்பட வேறு வழியில்லாமல் அதை ஒத்துக் கொள்வதும் இது சரியா தவறா என்று குழம்பும் மன நிலையிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் அமிதாஷ்.

சிலை வடிக்கும் சிலையாக வருகிறார் காஷ்மீரா பர்தேஷி. இரண்டு மூன்று பார்வையிலேயே அமிதாஷ் தன்னைக் காதலித்து விடுவார் என்பதைப் புரிந்து கொண்டவர், அவரைத் தவிர்க்கும் நோக்கத்துடன் நடந்து கொள்ளும் காட்சிகள் இது காதலுக்குதான் இட்டுச் செல்லும் என்பதைப் புரிய வைத்து விடுகிறது.

இருந்தாலும் அதுவே கதையாகி விடாமல் அந்த காதல் இழையை திறம்பட கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.

சர்வதேச சிலைக் கடத்தலின் ஏஜென்ட்களாக இருக்கும் பாலகிருஷ்ணனும் வின்சென்ட் அசோகனும் உடல் மொழியிலேயே தவறானவர்கள் என்பதைப் புரிய வைத்து விடுகிறார்கள். 

அவர்கள் இருவரையும் சந்திக்க முயன்று சிலை பற்றிய பேரத்தை ஆரம்பித்து அதை முடிக்கும் கட்டம் வரை சரியான வேக விகிதத்தில் காட்சிகளை கோர்த்து இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் பத்தில் ஒரு பங்கு காட்சியில் வந்தாலும் படத்தின் உயிர் நாடி ஆகியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவரது நடிப்பு பத்திரத்தில் பதிந்த எழுத்தாக இருக்கிறது.

சரித்திரப் பேராசிரியரான அவரிடம் தன் சிலை பற்றி சான்றிதழுக்காக சரத்குமார் பேசிக் கொண்டிருக்க… அதற்கு சம்பந்தமே இல்லாமல் தன் நிலத்தை ஒருவனிடம் ஏமாந்து இழந்த கதையை அவர் அடுத்தடுத்து சொல்லும் காட்சி தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது.

அமிதாஷின் நோயாளி தங்கையாக வரும் சுவாதிகா நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்.

பிற பாத்திரங்களில் வரும் சார்லஸ் வினோத், டி.சிவா, ரவி வெங்கட் உள்ளிட்டோரும் நிறைவாக செய்திருக்கிறார்கள் என்றால், மிகச் சிறப்பாக வேலையை வாங்கிய இயக்குனருக்கே பாராட்டுக்கள் போய்ச் சேர வேண்டும்.

முதல் பாதையில் கதை பரபரப்பாக நகர்ந்தாலும் ஒரே இடத்தில் சுற்றி வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது. ஆனால் இரண்டாவது பாதியில் கிளைமாக்ஸ் நோக்கி நகர்கையில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் நம் முதுகெலும்பை நிமிர்த்தி விடுகிறது.

இந்த அற்புதமான கதை சொல்லும் நேர்த்தியே படத்தின் வெற்றியை உறுதி செய்து விடுகிறது.

எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு இரவையும் பகலையும் எழிலுடன் காட்டி இருக்கிறது. 

யுவன் சங்கர் ராஜாவின் இசையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. படத்தின் தீம் மியூசிக் படம் முடிந்து நெடுநேரம் ஆகியும் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

முயலுக்கும் ஆமைக்கும் பந்தயம் விட்டால் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்விக்கு யார் புத்திசாலியோ அவர்கள்தான் என்பதே சரியான பதிலாக இருக்கும். அதைத்தான் சொல்ல வருகிறது படம்.

பரம்பொருள் – படம் வாங்கியவர்களுக்கு  அருள்..!