May 18, 2024
  • May 18, 2024
Breaking News
September 2, 2023

தி ஈக்வலைசர் 3 திரைப்பட விமர்சனம்

By 0 212 Views

இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் Denzel Washington மற்றும் இயக்குனர், Antonie Fuqua இணைந்து 2014 இல் The Equalizer என்கிற ஒரு படத்தை, ஒரு தொலைக்காட்சி தொடரின் திரைவடிவமாக உருவாக்கி வெற்றிகண்டார்கள்.

மீண்டும், 2018 இல், இதே கூட்டணி The Equalizer 2 வில் இணைந்து மீண்டும் பெரு வெற்றிகண்டது!

இப்போது வெளியாகியிருப்பது The Equalizer படத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி பாகம். இந்த மூன்று பாகங்களிலுமே இருவரும் இணை பிரியாமல் பயணித்திருப்பது பாராட்டுக்குரியது.

Robert McCall என்ற பாத்திரம் ஏற்கும் டென்சில் வாஷிங்டன் எதிர்பாராத தாக்குதலில் நினைவிழந்து, கண் விழிக்கும் போது இத்தாலியில் இருக்கிறார்.

அவரது உறைவிடத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்திலிருந்து செயல்பட்டு வரும் ஒரு மாபியா கும்பல், இப்பகுதியில் வாழும் மக்களை அச்சுருத்தி தண்டல் வசூலித்து வருகிறது!

தனது ஓய்வு நிலையிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு முறை அதிரடி வாழ்க்கைக்கு திரும்பவேண்டிய தருணம் வந்து விட்டது என்பதை உணர்ந்த டென்சில் வாஷிங்டன  (Robert) மீண்டும் கோதாவில் இறங்குகிறார்!

தமிழில் 72 வயதாகும் ரஜினிகாந்த் ஆக்சன் படங்களில் அதிரடி காட்டுவது போல 71 வயதாகும் டென்சில் வாஷிங்டன் ஹாலிவுட் படங்களில் ஆக்சன் காட்டி வருகிறார்.

ஆனால் ஈக்குவலைசர் சீரிசை பொருத்த அளவில் இதன் சண்டைக் காட்சிகள் மணிக்கணக்கில் நீடிப்பவை அல்ல. டென்சில் வாஷிங்டனின் அதிரடி தாக்குதல் மற்றும் கிடுக்கி பிடியில் எதிராளிகளை சில நிமிடங்களில் வசப்படுத்தி விடுவது வித்தியாசமான அணுகுமுறை.

படத்தின் வசனங்கள் கவனிக்கத் தகுந்தவை.

மணிரத்தினத்தின் நாயகன் படத்தில் கமலைப் பார்த்து ஒரு சிறுவன், “நீங்கள் நல்லவரா கெட்டவரா..?” என்று கேட்க, அவர் “தெரியலை..!” என்பார். அதே வசனம் இந்தப் படத்தில் வருகிறது. ஆனால் டென்சில் வாஷிங்டன் செல்லும் “தெரியலை…” என்ற பதிலுக்கு ஒரு அர்த்தம் இதில் கற்பிக்கப்படுகிறது.

தன் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் வீட்டில் அவர் கால்பந்து விளையாடும் படங்கள் இடம் பெற்று இருக்க, “நீங்கள் நன்றாக கால்பந்து விளையாடுவீர்களா.?” என்று டாக்டரைக் கேட்கிறார் டென்சில்.

அதற்கு டாக்டர், “சரியாக விளையாடாத காரணத்தால்தான் நான் டாக்டராகி விட்டேன்..!” என்பது இயல்பான நகைச்சுவை.

டென்சில் வாஷிங்டனின் தோற்றமும் நடிப்பும் அபாரமாக இருக்கிறது. வன்முறை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் டென்சிலின் அமைதியான அணுகுமுறை அதைத் தணித்து விடுகிறது

கதை நடைபெறும் இத்தாலியின் அந்த சின்னஞ்சிறு ஊரில் Robert Richardson னின் நேர்த்தியான ஒளிப்பதிவு கொள்ளை கொள்கிறது. படம் முழுவதும் ஒரு இருட்டான டோனை அவர் பயன்படுத்தி இருப்பது பய உணர்வைக் கொடுத்திருக்கிறது.

Marcelo Zarvos இன் பின்னணி இசை அமைப்பும் படத்துக்கு பலமான நேர்த்தியைக் கொடுத்திருக்கிறது.

காரில் வைக்கப்பட்டிருக்கும் குண்டு வெடிக்கும் காட்சி அற்புதமானது. படத்தின் ஹைலைட்டான காட்சி அது.

மூன்றாவது பாகத்தையும் கூட தன் வழக்கப்படியே ஆர்பாட்டமோ ஆரவாரமோ இன்றி அமைதியான பாணியில் திரைக்கதையைக் கொண்டுசென்று ரசிக்க வைத்ததுள்ள இயக்குனர் Antonie Fuqua வை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இப்படத்தை சோனி பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிட்டு இருக்கிறது.

தி ஈக்வலைசர் 3 – நிறைவான படம் – மனதுக்கும் கூட..!