December 2, 2024
  • December 2, 2024
Breaking News
June 21, 2023

பானி பூரி வெப் சீரிஸ் விமர்சனம்

By 0 1089 Views

ஹீரோ ஹீரோயின்களின் பெயர்களிலிருந்து அந்த படைப்பின் தலைப்பைப் பிடிப்பது வழக்கமாக இருக்கும் ஒரு யுக்திதான் ஆனால் இத்தனை இளமையாக – புதுமையாக ஒரு தலைப்பை பிடிக்க முடியும் என்பதுடன் இயல்பான கதை ஓட்டத்துடன் ஒரு அழகான காதலையும் சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

அப்பாவின் பெயரான தண்டபாணியை தன் பெயரில் கொண்டிருப்பதால் நாயகன் லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் நாயகி சம்பிகா பூரி ஆகிறார்.

இருவருக்கும் காதல் ஓடிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் சம்பிகாவின் தோழி திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிய அதே பிரச்சனை தங்களுக்கும் வந்துவிடக் கூடாது என்று முதலிலேயே காதலனைப் பிரிந்துவிட முடிவு செய்கிறார் சம்பிகா.

அது மட்டும் அல்லாமல் சம்பிகாவின் பெற்றோரும் விவாகரத்து பெற்று வாழ்ந்து வருபவர்கள்தான். ஆனால் நல்ல மனம் கொண்ட சம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேல் தலையிட்டு இருவரையும் ஒரு வார காலத்திற்கு லிவ் இன் முறையில் வாழ்ந்து பார்த்து பின்னர் முடிவெடுக்க சொல்கிறார்.

அந்த ஒரு வாரம் எப்படிப் போனது – அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.

பாணியாக நடித்திருக்கும் லிங்காவின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. இதுபோன்ற சீரிஸ்களுக்கு கூப்பிடு லிங்காவை என்று ஆகிவிட்டது.

ஆனால், எல்லா விஷயத்துக்கும் பூரியுடன் ஒத்துப் போகும் அவர், பூரியின் அப்பாவை உடன் வைத்துக் கொள்வதற்கு எதற்காக அப்படி பொங்குகிறார் என்பது புரியவில்லை.

இதற்கும் பூரியை விட அவரது அப்பாதான் பாணியுடன் மிகவும் ஒத்துப் போகிறார் என்பதோடு இந்த லிவ் இன் மேட்டருக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் என்பதால் அந்த இடம் சறுக்குகிறது.

குலாப் ஜாமூன் போல கொழுக்கு மொழுக்கு என்று இருக்கும் சம்பிகாவுக்கு நடிக்கவும் தெரிவது நல்ல விஷயம். உணர்ச்சிகளைக் காட்டுவதற்கு அவரது முகமும் நன்றாக ஒத்துழைக்கிறது. எங்கோ ஓரிடத்தில் நயன்தாராவின் சாயல் இருக்கும் சம்பிகா நன்றாக இளைத்தால் அந்த சாயலை வெளிக்கொண்டுவர முடியும்.

நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா, அடுக்குமாடி குடியிருப்பு சங்க செயலாளர் கோபால் மற்றும் அனைத்து  கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
 
பாணியின் நண்பனாக வினோத் சாகர் தன் கொழுந்தனைப் பற்றி விசாரிக்கும்  கனிகாவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் காட்சிகள் கலகலப்பானவை.
 
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவும், இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரும் இந்த சீரிஸ்க்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.
 
நறுக்குத் தெறித்தாற்போல் ஒன்றரை மணி நேரப் படத்தை வெட்டிவிட்டால் ஒரு வெற்றிகரமான திரைப்படமாகவும் மாறக்கூடிய சாத்தியமுள்ள ஸ்கிரிப்ட். 
 
சீரிஸ் என்றாலே வக்கிரமான சிந்தனைகளும் வண்டை வண்டையான வசனங்ளும் தான் என்பதைத் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ரசனையான காதல் கதையை தந்ததற்கு “வெல்டன் பாலாஜி வேணுகோபால்…”
 
பானி பூரி – டேஸ்ட்டி..!