December 2, 2024
  • December 2, 2024
Breaking News
June 23, 2023

தண்டட்டி திரைப்பட விமர்சனம்

By 0 580 Views

“அழுத்தித் தேயுடா விளக்கெண்ண… அவனுக்கு வலிச்சா உனக்கென்ன..?” என்கிற கதையாக சுயநலம் பிடித்த கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடக்கிறது இந்தப் படத்தின் கதை.

போலீஸ் என்றாலே இந்தக் கிராமத்துக்கும் கிடாரிப்பட்டி என்றாலே போலீசுக்கும் ஒவ்வாமை என்பதை ஓப்பனிங்கிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

அந்த கிராமத்தில் வாழ்ந்த பாம்பட மூதாட்டி ஒருவர் பாவம் பட்டுத் தொலைந்து போக, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு விரைவில் ஓய்வு பெறவிருக்கும் காவலர் சுப்பிரமணியிடம் வந்து சேருகிறது.

அவரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள்ளும், வீட்டில் திரிகிற கரப்பானை கவட்டைக்குள்ளும்  வைத்துக் கொண்டு திரிகிற ஆசாமி. லிமிட்டுக்கு மீறி எக்குத் தப்பான காரியங்கள் செய்துவிட்டு அன்லிமிடெட் ஆகத் திட்டு வாங்குகிற தினவெடுத்த பார்ட்டியான அவரை கிடாரிப்பட்டி கேசுக்கு ஆஜராக வேண்டாம் என்று விஷயம் தெரிந்தவர்கள் ‘வார்னிங்’ விடுக்கிறார்கள்.

ஆனாலும் அதுதானே அவருக்கு அல்வா..? அங்கே கிளம்புகிறார் தில்லா…

அலைந்து ஓய்ந்து திரும்பும் நேரத்தில் அவர் கண்ணில் அப்பத்தா பட்டு அதற்கு அடுத்த காட்சியில் இறந்து போகிறார். பா(ட்)டியை ஒப்படைக்க கிடாரிப்பட்டி போகும் இடத்தில், அந்த குடும்பமே சுயநலத்தில் சடாரி தூக்கிக்கொண்டு சாமியாட, இறந்து போன பாட்டியின் தண்டட்டியும் அடுத்தடுத்த காட்சிகளில் காணாமல் போகிறது.

“அதை நாங்க பார்த்துக்கிறோம்… நீ கிளம்பு…” என்று ஊர் மக்கள் அவரை விரட்ட, “தண்டட்டியை கண்டுபிடித்து கொடுத்தால்தான் வாசல்படி தாண்டலாம்..!” என்று அப்பத்தாவின் மகன் அரிவாள் சகிதம் எச்சரிக்க… அடங்காத குடும்பத்தின் ஆட்டம் அதிகமாக, கிழவி அடக்கம் ஆகும் வரை அவர் அங்கேயே இருக்க நேர்கிறது.

தண்டட்டி கிடைத்ததா… தகராறு தீர்ந்ததா… திருடன் யார்… திருந்தியவன் யார் போன்ற எல்லா கேள்விகளுக்கும் மீதிப் படம் விடை சொல்கிறது.

தேனி பக்கத்து கிராமத்தின் நேட்டிவிட்டியை இத்தனை அழகாகச் சொல்லி இருக்கும் இயக்குனர் ராம் சங்கையாவுக்கு வெள்ளியில் ஒரு வெற்றிலைப் பெட்டியைப் பரிசளிக்கலாம்.

அத்தனை தண்டட்டிக் கிழவிகளையும் எங்கே இருந்துதான் பிடித்தார்களோ, அவர்களது அடுக்குத் தொடர் சொலவடையும், அழுகை அற்ற ஒப்பாரியும், லவட்டி அடிக்கும் லந்துகளும் பாக்யராஜ் படங்களுக்கே ‘டஃப்’ கொடுக்கும் ரகம்.

அதிலும் பசுபதியின் காணாமல் போன தொப்பியை சப்ஜாடாக மாட்டிக்கொண்டு சவடால் பேசும் அந்த ‘கோளாறு’ பாட்டியை ஜெனரேஷன் கேப்பில்லாமல் ‘லைக்’கலாம்.

நிஜத்தில் குடித்தால் கூட இத்தனை மப்பாக முடியுமா? என்று கண்டுபிடிக்க முடியவில்லை விவேக் பிரசன்னாவின் நடிப்பில். ஊருக்கே சாபம் விடும் தவளை வாயன் நாக்கை அவர் அறுப்பது… ஆனாலும் கொஞ்சம் ஓவர்தான்.

ஒரு படத்தின் அத்தனைப் பாத்திரங்களையும் ரசிக்க முடிந்தால் மட்டுமே அது வெற்றிப் படத்துக்கான சாத்தியமாகிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் நினைத்து நினைத்து ரசிக்க முடியும்.

தண்டட்டிக் கிழவியாக வரும் ரோகிணி தன் தங்கமான பங்கை குண்டுமணி குறையாமல் செய்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. “ரெண்டு நாளா சாப்பிடலை…” என்று கேட்டு டிபன் வாங்கி வருவதற்குள் உயிரைவிடும் அவரது பாத்திரம் நெகிழ வைக்கிறது.

போலீஸ் காவலர் சுப்பிரமணியாக வரும் பசுபதி அளவெடுத்து எல்லாம் தைக்காமல் எப்படி அந்தக் கசங்கிய காக்கிச்சட்டைக்குள் தன்னை அடக்கி கொள்கிறாரோ அப்படியே தன் பாத்திரத்தின் அகல நீளங்கள் தெரிந்து அங்கங்கே அடக்கியும் நீட்டியும் வாசிக்கிறார்.

ஒரு குடிகாரன் பேச்சுக்கு பயந்து அவர் தண்டட்டியைக் கண்டுபிடிக்க வேண்டுமா, அடித்து உதைத்து விசாரணை செய்யாமல் ஏன் அன்புடன் அந்த விசாரணைகளை நடத்துகிறார், அப்படி அடங்கி போகிறவர் கடைசியில் கிழவியின் உடலை எடுக்க விடாமல் சலம்பும் ஆறடி உயர வில்லனையும் அவன் அடியாட்களையும் எந்த தைரியத்தில் அடித்து உதைத்து விரட்டுகிறார் என்றெல்லாம் படம் பார்க்கும்போது நமக்குத் தோன்றவில்லைதான்.

ஆனால் இடரும் அத்தனை விஷயங்களுக்கும் கிளைமாக்சில் வைத்து பதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். அந்த கிளைமாக்ஸ் நாம் சற்றும் எதிர்பாராதது.

ரோகிணியின் மகள்களாக வரும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் உள்ளிட்டோரின் நடிப்பும் மிரட்டல். அதிலும் கனபாடியாக கட்டி உருளும் தீபா சங்கர் சற்றே டாப் நாட்ச்.

இப்படிப்பட்ட அராத்து குடும்பத்தில் பிறந்த ஒரே அமைதியான பேரன் ‘மண்டேலா’ முகேஷின் பாத்திரம் நல்ல வார்ப்பு. அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பசுபதி நடந்து கொள்வதும் லாஜிக் மீறாத சேர்ப்பு..!

பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும் அம்மு அபிராமி மின்னலாய் வந்து மறைகிறார்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவும், கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் உறுத்தல் இல்லாத பின்னணி இசையும் செம்மண் நீராய் படத்துடன் கலந்து வெளிப்படுகிறது.

ஒரே இடத்தில் கதை ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அலுப்பு ஏற்படாமல் நேட்டிவிட்டி மற்றும் சுவாரசியத்துடன் படத்தை ரசிக்க வைத்திருக்கும் ராம் சங்கையாவுக்கு முதல் நிலை ஹீரோக்களின் கதவுகள் சீக்கிரமே திறக்கும்.

கிளைமாக்சில் மட்டும் சில கேள்விகள் எழுந்தாலும் ஒரு கிராமத்துக் கதையை கமர்ஷியலாக சொல்லிக் காவியமாய் முடித்திருக்கிறார் அவர்.

தண்டட்டி – உரு(க்)கும் ‘தங்கம்..!’

– வேணுஜி