March 1, 2021
  • March 1, 2021
Breaking News
June 20, 2019

பக்கிரி திரைப்பட விமர்சனம்

By 0 402 Views

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சூழ்நிலையும், வாய்ப்புகளுமே ஒருவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தத்துவார்த்தமான கதை.

தத்துவம் என்றால்தான் தனுஷுக்கு தர்பீஸ் சாப்பிடுவது போன்றதாயிற்றே..? அதிலும் இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படமென்பதால் டபுள் ஓகே சொல்லி ஒத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோம், லிபியா என்று பலநாடுகளிலும் பயணப்பட்ட கதையுடன் அவரும் பயணப்பட்டிருக்கிறார்.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழாக்கம்தான் ‘பக்கிரி’. ‘ரொமைன் பெர்டோலாஸ்’ எழுதிய கதையை ‘கென் ஸ்காட்’ இயக்கியிருக்கிறார்.

வட இந்தியாவில் சிறைக்குச் செல்லவிருக்கும் சிறுவர்களுக்கான கவுன்சிலராக இருக்கும் தனுஷ் அப்படி மூன்று சிறுவர்களிடம் பாடமாகத் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்க, பிளாஷ்பேக்கில் விரிகிறது படம்.

அப்பா யாரென்று தெரியாமல் அம்மாவிடம் வளரும் தனுஷ், அவளின் ஆசைப்படி பாரிஸ் செல்லும் ஆசையிலிருக்கிறார். அதற்காக தான் கற்றுக்கொண்ட தந்திர மேஜிக் வேலைகளில் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், தேவையான பணத்தைச் சேர்ப்பதற்குள் அம்மா இறக்க, அவள் பாரிஸ் செல்ல ஆசை கொண்டது அங்கிருக்கும் தன் கணவனைக் காணத்தான் என்று அறிந்துகொண்டு, தன் மேஜிக்கை நம்பி அப்பாவைக் காண பாரிஸ் பயணப்படுகிறார்.

பிரான்ஸில் கால் வைத்ததும் அவருக்குக் காதல் ஒன்றும் முளைக்க, கையில் காசில்லாத அவரை சூழ்நிலை காதலைக்கூட சொல்ல விடாமல் நாடு விட்டு நாடு துரத்துகிறது. இறுதியில் அவர் அப்பாவைச் சந்தித்தாரா, காதலியிடம் காதலைச் சொன்னாரா என்பது கதை.

தனுஷுக்கு இதில் அமைந்த வேடம் தமிழ்ப்படங்களைவிட அற்புதமாகப் பொருந்துகிறது. அந்த அப்பாவி முகமும், வெள்ளந்திப் பார்வையும் அவரை மற்றப் பாத்திரங்களுடன் எளிதாக ஒன்ற வைக்கிறது. என்ன ஒன்று… அவரது வெற்றிப் படங்களின் வரிசையில் வர, இந்தப்படத்தின் திரைக்கதை சுவாரஸ்யப்படுத்தவில்லை.

இது ஆங்கிலப்படமாக வெளிநாடுகளில் கவர்வதைவிட இந்தியாவில்தான் அதிகம் எடுபடும் என்று இயக்குநர் ‘கென் ஸ்காட்’ நம்பியிருப்பார் போல. அதற்காகவே இரண்டு பாடல்களும் இருக்கின்றன படத்தில். இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள். நல்லவேளை டூயட் எதுவும் இல்லை.

இரண்டு நாயகிகளுமே நம் ஊர் ஆங்கிலோ இந்தியப் பெண்களைவிடவும் ரொம்ப சுமாராகவே இருக்கிறார்கள். அதிலும் நடிகையாக வரும் ‘பெரிநைஸ் பெஜோ’வைவிட, தனுஷின் காதலியாக வரும் ‘எரின் மொரியார்ட்டி’ ஓரளவுக்குத் தேவலாம். இந்தக் கடினமான பெயர்களை விடவும் அந்த நடிகைகளின் வனப்பு (!) மிகக் கடினமாக இருக்கிறது.

முன்பே சொன்னதைப் போல் இயக்குநர் இந்தியர்களைக் கவர்வதற்காகவே சென்டிமென்ட் காட்சிகளையும் அதிகமாகவே நம்பியிருக்கிறார். அம்மாவின் அஸ்தியை பாரிஸ் கொண்டு சென்று அப்பாவினிடத்தில் சேர்ப்பது அதில் ஒன்று…

அப்பாவைக் காண அம்மா பாரிஸ் செல்ல முடியவில்லை என்ற ஆரம்பமும் பாரிஸில் கிடைத்த காதலி தனுஷைக் காண இந்தியா வந்து சேரும் இறுதிக் காட்சியும் இனிய கதைப்பின்னல். கோடீஸ்வரனாக சந்தர்ப்பம் கிடைத்தும், கையிலிருக்கும் அபரிமிதமான பணத்தை லிபியாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்தவர்களுக்குக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் தனுஷ் ஆழ்த்துவதும் இந்திய சினிமாவை ஒத்த காட்சி. (ரஜினியின் மருமகனா கொக்கா..?)

அதேபோல், பாஸ்போர்ட் இல்லாமல், பீரோ, மரப்பெட்டியில் ஒளிந்து கொண்டு, நாடு நாடாக சுத்துவதெல்லாம் காதில் சுத்திய பூவாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் தப்பில்லை. ஆனால், அதை டைரக்டர் யோசித்திருக்க மாட்டாரா..?

கடைசியில் “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையா..?” என்று சிறுவர் காவல் கூடத்தில் ஒரு காவலர் தனுஷிடம் கேட்க, “இந்தச் சிறுவர்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் பரவாயில்லை என்று கொஞ்சம் அடித்து விட்டேன்..!” என்று அவர் பதில் சொல்வதுடன் படம் முடிகிறது.

சும்மா அடித்து விடுவதுதான் கதை என்றாகிவிட்ட பிறகு சுவாரஸ்யமாக, இன்னும் ஜாலியாக ஆக்‌ஷன் கதையாகவே சொல்லி அடித்து விட்டிருக்கலாமே டைரக்டர் ஸ்காட்..?

பக்கிரி – ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்து விட்டதற்காக தனுஷ் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் – ஓரு தமிழ் நடிகன் ஆங்கிலப் படத்தில் நடித்ததற்காக நாமும்..!