கட்டுப்பாடற்ற ஆதிக்க மனம் கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறை இருக்காது என்று சொல்லலாம்.
அப்படி பாதிக்கப்படும் பெண்கள் அழுது புலம்புவதை விடுத்து சதிகாரர்களுக்கு எதிராக சதிராட வேண்டும் என்று சொல்கிற படம்.
அப்படிப் பழி தீர்க்கும் வேடத்தில் ஸ்ரீஜா என்ற நாயகியாக இதில் நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த் – படத்திலும் அவர் நடிகைதான். பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டு தன்னை சந்திக்க வந்தவர், வரம்பு மீறிப் போய் தன்னுடன் உறவு கொள்ள அழைக்க கொதித்தெழும் யாஷிகா அவரை அடித்துத் துவைத்து கட்டிப்போட்டு விடுகிறார். பின்பு தான் தெரிகிறது அவரைத் திட்டம் போட்டே யாஷிகா அங்கே வரவழைத்து இருக்கிறார் என்பது.
யாஷிகா விரித்த வலையில் வசமாக சிக்கிக் கொண்ட அந்த நபர் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் எம்.எல்.எ. ஒருவரின் வலது கை அல்லது இடது கை. பொதுவில் ஒரு அல்லக்கை.
எம்எல்ஏவாலும் இந்த அல்லக்கையாலும் பல பெண்கள் கையாளப்பட்டிருப்பது தெரிய வரும்போது அதிர்ச்சி அடைய நேர்கிறது.
அவர்களைத் திட்டமிட்டு தண்டிக்கத்தான் யாஷிகா ஆனந்த் இப்படி ஒரு வலை பின்னி இருக்கிறார். ஆனால் ஆதிக்க சக்திகள் அவ்வளவு எளிதாக சிக்கி விடுமா..? யாஷிகாவின் திட்டம் வெற்றி பெற்றதா அவர் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை எல்லாம் பரபரப்பான திரை கதையாக்கி இயக்கியிருக்கிறார் செல்வம் மாதப்பன்.
நடிகையாகவே வரும் யாஷிகா ஆனந்தின் இளமையும் அழகும் அவரது பாத்திரத்தை நூறு சதவிகிதம் நியாயப்படுத்துகின்றன. அத்துடன் அவருக்கு இந்தப் படத்தில் ஆக்சன் ஹீரோயின் ஆகவும் பிரமோஷன் கிடைத்து இருக்கிறது.
யாஷிகாவிடம் நாம் மிகச்சிறந்த நடிப்பை எதிர்பார்த்து எல்லாம் போவதில்லை அவரிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் குறைவின்றி படத்தில் இடம்பெற்று இரக்கின்றன.
வஞ்சிக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகும் யாஷிகாவின் தங்கையாக வரும் தர்ஷினியின் அழகும் யாஷிகாவுக்குக் குறைவில்லாமல் இருக்கிறது.
காதல் என்ற மந்திரத்தால் அவர் வீழ்த்தப்பட்டு காதலனாலேயே பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் போது நம் மனத்தைக் கலங்க அடித்து விடுகிறார்..
படத்தின் போஸ்டர்களில் பிரஜனைப் பார்த்ததும் அவர்தான் படத்தின் நாயகனாக இருப்பார் என்று நாம் நினைக்கிறோம். அவரும் அப்படித்தான் நினைத்து ஒத்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. ஆனால், அவருக்கு ஏதும் மிச்சம் வைக்காமல் யாஷிகாவே முடித்து விட, தன் காக்கிச் சட்டைக்கு ஏதும் பிரயோஜன் இல்லாமல் நேர்மை தவறாத காவல் அதிகாரியாக வந்துவிட்டுப் போகிறார் பிரஜன்
எம்.எல்.ஏ.வின் அத்தனை அராஜகச் செயல்களுக்கும் உடன் இருக்கிற அல்லக்கை முத்துக்குமாரைப் பார்த்தாலே நமக்கு பற்றிக் கொண்டு வருகிறது அதுவே அந்த கேரக்டருக்கான நியாயம்.
இந்தப் படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில்தான் பரபரப்பை கிளப்பினார் வைரமுத்து. இந்தப் படத்தில் அவர் எழுதியிருக்கும் ‘சரக்கு அதில் என்ன இருக்கு’ என்ற பாடலும் சரச சரக்கோடு ஒலிக்கிறது.
பாடலுக்கான குத்தாட்டமும் ” பலே ” என்பதாக இருக்க இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இந்த படத்திற்குக் கிடைத்திருக்கும் ஸ்பெஷல் கிப்ட் என்று சொல்ல வைக்கிறார்.
படத்தின் தன்மைக்கேற்ற ஒளிப்பதிவும், பரபரப்புககேற்ற படத்தொகுப்பும் நன்றாகவே கை கொடுத்திருக்கின்றன.
காலம் காலமாக நாம் புரட்டிப் புரட்டி படித்துக் கொண்டிருக்கின்ற கதையின் பக்கங்கள்தான் இந்த படத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் அதில் நாம் படிக்காமல் விட்டிருக்கிற பக்கங்களாக இதைச் சொல்கிறார் இயக்குனர்.
அப்படி படம் பார்ப்பவர்களும் உணர்ந்தால் இதுவும் ஒரு வெற்றிப் படம்தான்..!