சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக ‘பச்சை விளக்கு’ படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்துள்ளார் டாக்டர் மாறன்.
‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் ‘வேதம் புதிது’ தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார். இப்போது ‘பச்சை விளக்கு’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் அவர்.
இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர்.
கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க, மேலும் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘மெட்ராஸ்’ புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குனர் சிவசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பாடல்களை பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் எழுத, சிவசங்கர், சந்திரிகா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள்ளார். எஸ்.வி.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘டேஞ்சர் மணி’ சண்டைப் பயிற்சி அளிக்க, கே.நடராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னை அருகே உள்ள பிரபலமான பல்கலைக் கழகத்திலும், திருப்போரூர், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
“வெறும் சாலை பாதுகாப்பு என்றில்லாமல் அதைப்போலவே கட்டுப்பாடில்லாத காதலும் கரை சேராது…’ என்று ஒரு காதல் கதையையும் உள்ளே வைத்திருக்கிறேன். படம் அடுத்த மாதம் திரைக்கு வரும்..!” என தெரிவித்துள்ளார் இயக்குநர் டாக்டர் மாறன்.
‘கிரீன் சிக்னல்’ போட்டு வரவேற்க வேண்டிய படம்தான்..!