‘காதலர்களுக்குள் பிரிவு வருவது பெரும்பாலும் அவர்களது ஈகோவால்தான் இருக்கும். அந்தக் காதல் ஜெயிக்க வேண்டும் என்றால் விட்டுக் கொடுத்தல் முக்கியம்… ‘ என்கிற லைனை இன்றைய இளைஞர்களின் மனநிலைக்கேற்ப இளமை ததும்பத் தந்து இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
வாரிசுகள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இன்றைய சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இதில் நாயகனாகி இருக்கிறார்.
இளமை, அழகு, துள்ளல் எல்லாம் ஒன்று சேர, நடிப்பும் அவருக்கு எளிதாகக் கை வந்திருக்கிறது. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவில் ஒரு முன்னணி ஹீரோவுக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்தி இருக்கிறது ருத்ராவுக்கு.
இன்றைய ட்ரெண்டின் படியே பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வேலை தேடும் பருவம் என்று மூன்று பருவங்களை அவர் ஏற்று நடித்திருக்கிறார். மூன்று பருவங்களிலும் மூன்று காதல்களைக் கடந்து வந்திருக்கும் அவர், கடைசிக் காதலில் ஈகோவால் பிரிந்திருக்கும் நிலையில், இப்போது இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார்.
விஷ்ணு விஷால் நடிகராகவே வர, அவருக்குக் கதை சொல்லும் ருத்ரா, விஷ்ணுவை நடிக்க கேட்டு இரண்டு கதைகளைச் சொல்கிறார். இரண்டிலும் விஷ்ணுவுக்குத் திருப்தி ஏற்படாமல் போக, வேறு கதை கைவசம் இல்லாததால், தான் காதல்களையே கதையைத் தொகுத்துச் சொல்ல, அந்தக் கதை விஷ்ணுவுக்குப் பிடித்திருக்கிறது.
ஆனால், அரைகுறையாக நிற்கும் கதைக்குள் கற்பனை முடிவு ஒத்து வராது என்பதால், அந்தக் காதலை நிஜமாகவே முடித்து வரச் சொல்லிக் கேட்கிறார் விஷ்ணு. அப்படியானால் தன் ஈகோவை ருத்ரா விட்டுக் கொடுக்க வேண்டும்.
அப்படி ருத்ரா தான் ஈகோவை விட்டுக் கொடுத்தாரா, அவரது விட்ட காதல் என்ன ஆயிற்று, அது அவருக்குப் பட வாய்ப்பைப் பெற்றுத் தந்ததா என்பதுதான் மீதிக் கதை.
ருத்ரா சொல்லும் காதல்கள் காட்சிகள் வடிவில் நமக்குக் காட்டப்படுவது சுவாரசியம். அதிலும் அவரது பள்ளிப்பருவ முதல் காதல், முதல் முத்தம் வேறு லெவல்.
முதல் காதலி திவ்யா அழகும் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. ருத்ராவை பல வழிகளிலும் அவர் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் கழற்றி விடுவது அநியாயம். அதுவரை ருத்ரா கொண்டிருந்த காதல் மீதான நம்பிக்கை அங்கே தவிடு பொடியாகிறது.
அடுத்த காதலை சொல்வதற்கு முன் அவர் மூன்றாவது காதலுக்கு தாவுவதும், அதன் இடையே இரண்டாவது காதல் வந்து போவதும், அதற்கு அவர் தரும் விளக்கமும் கூட அட்டகாசமான நகர்த்தல்.
மூன்றாவது மற்றும் உண்மைக் காதலுக்கு சொந்தக்காரியான மிதிலா பால்கர் சேம கியூட். தந்தை இல்லாமல் வளரும் அவர் கொடுமைக்கார மாமாவின் கோபத்தை ருத்ராவிடம் கண்டு மருகுவதும் அதை மாற்றிக் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதும் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவரது காதல் வென்று விட வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்கிறது.
தன்னுடைய உண்மையான கேரக்டரை அப்படியே வடித்துக் கொண்டு வந்து நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அவரது அறிமுகக் காட்சியிலேயே நடிகர் சூரியிடம் இருந்து அவருக்கு ஸ்வீட் வருவது செம கலாய்.
அப்படியே தன்னுடைய தோற்றுப்போன நிஜ வாழ்க்கை காதலையும் அவர் எந்த தயக்கமும் இன்றி சொல்லிக் கொள்வது நேர்மையின் உச்சம். காதலைப் பற்றி அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் முத்து.
ருத்ராவின் அப்பாவாக அட… நம்ம விஜயசாரதி..! அம்மாவாக கஸ்தூரி… சண்டையிட்டுக் கொண்டாலும் சரியான ஜோடி.
சித்தப்பாவாக வரும் கருணாகரனும் நல்ல தேர்வு. காமெடிதான் என்று இல்லை… நல்ல குணசித்திர பாத்திரமும் தனக்கு ஒத்துவரும் என்று நிரூபித்து இருக்கிறார் கருணா.
ருத்ரா பயிற்சி பெறும் இயக்குனராக வரும் இயக்குனர் மிஷ்கின் தன் கேரக்டரையே மனதில் வைத்து நடித்திருக்கிறார். தன் ரசிகரான கருணாகரனின் சொல்படியே அவர் காட்சிகளை இயக்குவது அட்டகாசம்.
ருத்ராவின் பள்ளி நண்பராக வரும் நிர்மல் பிள்ளை சந்தானத்தின் சாயலையொத்து நடித்தாலும் ரசிக்க வைக்கிறார்.
விஷ்ணுவின் மேனேஜராக வரும் ரெடி கிங்ஸ்லியும் அங்கங்க காமெடி வெடி வெடிக்கிறார்.
இந்த இனிமையான காதல் கதைக்கு ஜென்மார்ட்டின் இசை ஜீவனாகி இருக்கிறது.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் கூட வானவில் ஜாலம் காட்டியிருக்கிறது. பிரணவ்வின் படத்தொகுப்பும் பரபரக்கிறது
சிறந்த படங்களாகத் தரும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பாக வந்திருக்கும் இந்தப் படம் இளைஞர்களுக்கு இனிமையான ட்ரீட் ஆக இருக்கும்.
ஓஹோ எந்தன் பேபி – அதிகாலை ஃபில்டர் காபி..!
– வேணுஜி