November 29, 2021
  • November 29, 2021
Breaking News
October 21, 2021

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

By 0 76 Views

ஐந்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் முப்பது கோடி ரூபாய் வசூலித்த வெற்றிப்படம் பெல்லி சூப்புலு…

இது போதாதா இதனைத் தமிழில் தயாரிக்க..? ஆனால் ஐந்து வருட இடைவெளியில் இப்போது இங்கே இந்தத் தலைப்பில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

எல்லா காலத்திலும் வெற்றி பெறக்கூடிய மெல்லிய காதல் லைன்தான் இதிலும். இன்ஜினியரிங் படித்து எதற்கும் லாயக்கு இல்லாமல் இருக்கும் நாயகன் திருமணத்தில் வரும் வரதட்சனையை வைத்து வாழலாம் நினைக்க, இன்னொரு பக்கம் நாயகி திருமணத்தில் நாட்டம் இலலாமல் வெளிநாடு செல்லும் ஆர்வத்தில் இருக்கிறாள்.

ஒரு பெண் பார்க்கும் படலத்தில் ‘ ஆண் பாவ ‘மாக இடம் மாறி அவர்கள் சந்தித்து அறிமுகம் ஏற்படுகிறது. இருவருக்கும் முன்னாள் காதல்கள் வேறு இருக்க இந்த முரண்பாடுகளை தாண்டி எப்படி இணைந்தார்கள் என்பதே கதை.

ஆனால் ஐந்து வருடத்துக்கு முந்தைய நிகழ்வுகளை அந்தப்படத்தில் சொல்லியிருந்தது போல் இப்போதும் அதன் ஜெராக்ஸ் காப்பியாக சொல்லியிருப்பது அறிவியல் பிழை ஆகியிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் எஃப்எம் ரேடியோ உச்சத்தில் இருந்தது. இன்றைக்கு இருப்பது போல் சமையல் யூடியூப் நிகழ்ச்சிகள் முன்னுக்கு வராமல் இருந்தன. ஆனால் இன்றைக்கு எல்லாமே நேர்மாறாகி உச்சத்தில் இருப்பது சமையல் யூடியூப் நிகழ்ச்சிகள்தான். ஆனால் இந்தப்படத்தில் சமையல் யூடியூப் நிகழ்ச்சிகள் எல்லாம் சரியாக போகாதவை என்றும் அதற்கு ஒரு 500 ரூபாய் வருமானம் வந்தாலே பெரிய விஷயம் என்பதும் முக்கிய காட்சியாக வருகிறது. கடைசியில் ஒரு எஃப்எம் ரேடியோ நேர்காணலில் இருவரும் இணைவதும் அரை மாமாங்க பழசு.

படத்தின் பலம் நடிக நடிகையர் தேர்வு. பளிச்சென்று ஓங்கு தாங்காக இருக்கிறார்கள் நாயகன் ஹரிஷ் கல்யாணும், நாயகி பிரியா பவானி சங்கரும். போதாக்குறைக்கு இன்றைய இளசுகளின் கனவு நாயகனாக இருக்கும் அஸ்வினும் இரண்டாவது நாயகன் பாத்திரத்தில் வருகிறார்.

மூவருமே அவரவர் பாத்திரங்களை உணர்ந்து அதற்கேற்ற அளவுகளில் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதே போதுமானதாக இருக்கிறது.

காமெடிக்கு என்று பெரிய பட்ஜெட்டில் நடிகர்களை தேடாமல் அன்புதாசன், அபிஷேக் குமாரை ஹரிஷின் நண்பர்களாக வைத்து காமெடியை ஒப்பேற்றி இருக்கிறார்கள். அதுவும் நிறைவாகவே இருக்கிறது. 

ஹரிஷ் மற்றும் ப்ரியாவின் அப்பாக்கள் ஆக வரும் வேணு அரவிந்த், கே எஸ் ஜி வெங்கடேஷ் இருவரும் டிவி சீரியல்களை நினைவு படுத்துகிறார்கள்.

பரபரப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை ஒரு இளமை விருந்தாக இருக்கப்போகிறது என்று நினைக்க வைக்கிறது. ஆனால், ஹரிஷ், பிரியா இருவரும் மாறி மாறி தங்கள் பிளேஷ் பேக்குகளை ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அது நீட்டிக் கொண்டே போக சீக்கிரம் சொல்லி முடிங்கப்பா என்கிற அலுப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதுதான் நடக்கவும் செய்கிறது. அதில் எந்த திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் இல்லை.

அதேபோல் முதல் பாதி கதையிலேயே படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட இரண்டாவது பாதியை ஜவ்வு போல் இழுத்து இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேராமல் போவதற்கான எந்த காரணமும் வலுவாக இல்லாத பட்சத்தில் இருவரும் சேர்வதில் எது தடையாக இருக்கிறது என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தன் மகளுக்கு கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிற கே எஸ் ஜி வெங்கடேஷும், கல்யாணம் ஆனால்தான் மகன் உருப்படுவான் என்று உறுதியாக நம்பும் வேணு  அரவிந்தும் ஹரிஷும், பிரியாவும் ஒன்று சேர்ந்து சொந்த தொழிலில் வெற்றி பெற்றதுடன் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை வைத்து அவர்களைத் திருமண பந்தத்திலும் இணைக்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும்.

அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இது தெரிய ஆனாலும் இரண்டு குடும்பத்தினரும் ஏன் அதை யோசிக்காமல் வேறு வேறு இடங்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

கூகுள் மேப் உலவும் இந்த ஆண்டிராய்டு, ஆப்பிள் சூழ் உலகத்தில் ஒரு விலாசத்தை கையில் வைத்துக்கொண்டு தப்பான வீட்டில் போய் பெண் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் அரதப்பழசான கற்பனை. குறைந்தபட்சம் மணப்பெண் அல்லது மணமகன் புகைப்படத்தை கூடவா இருவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை..?

அந்த கொட்டாவி இடங்களை எல்லாம் விஷால் சந்திரசேகர் தன் பின்னணி இசையால் இட்டு நிரப்பியிருக்கிறார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவிலும் இளமை துள்ளுகிறது.

இளமையான நாயகர்கள், நாயகியும் நேர்த்தியான ஒளிப்பதிவு, இனிமையான இசையும் அமைந்து விடுவதால் தோல்வியில் இருந்து தப்பித்து பார்வையாளர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருகிறது படம்.

ஓ மணப்பெண்ணே – ஓடிடிக்கு ஓகே..!