ஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள்.
அதன் பின்னர் தற்போதைய நிகழ்வில் சத்தியமூர்த்தி, கோபி, சுதாகர் மற்றும் தனது நண்பர்களுடன் வசித்து வர. அவர்களில் இரண்டு பேர் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் யாஷிகா ஆனந்த்தும், ஹரிஜாவும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். மூன்றாவதாக குடிகாரர் கிரேன் மனோகர் தன் மனைவியின் தொல்லைக்கு பயந்து இரவெல்லாம் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார். நான்காவதாக பரீட்சைக்கு படிக்கப் போகிறேன் என்கிற பெயரில் பலான படம் பார்க்க நண்பர்கள் மூவர் திட்டமிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் வந்து சேர்வது மேற்படி அமானுஷ்யம் நடந்து முடிந்த அந்தத் தியேட்டருக்குதான். கிளுகிளுப்பாக ஆரம்பிக்கும் படம் ஒரு கட்டத்தில் கொடூரமான படமாக மாற, அதில் பயந்து அனைவரும் தியேட்டரை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்
ஆனால் அது முடியவில்லை. அமானுஷ்ய நிகழ்வுகளால் மீண்டும் தியேட்டருக்கு உள்ளேயே வர நேர, அவர்களுக்கு உயிர் பயம் வர, அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் இந்தப் படக்கதை.
இதைத் தன்னாலான பாணியில் காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கும் இயக்குனர் ரமேஷ் வெங்கட், அதற்கு யூடியூபர்களை நம்பி இந்த படத்தை எடுத்துள்ளார்.
அப்படி கோபி, சுதாகர், விஜய், ஷாரா, அப்துல், சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன் போன்ற யூடியூப் பிரபலங்களுடன் சத்யமூர்த்தி, யாஷிகா ஆனந்த், ரித்விகா, முனிஷ்காந்த, கிரேன் மனோகர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட நாம் அறிந்த நடிகர்களும் தங்களது ஊதியத்துக்கும் உழைப்புக்கும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஆனாலும், முனிஷ்காந்த், ஜாங்கிரி மதுமிதா, விஜே ஆஷிக், கிரேன் மனோகர், ஆகியோரின் காமெடிக்கு முன்னால் கோபி சுதாகரின் காமெடி ஏனோ எடுபடவில்லை.
பழைய திரையரங்கம் ஒன்றைப் பிடித்து கிட்டத்தட்ட முழு படத்தையும் அங்கேயே கொஞ்சம் பயமுறுத்தியும் சிரிக்க வைத்தும் நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ரமேஷ் வெங்கட்.
வழக்கமான பாணியில் இருந்தாலும், அதைச் சொல்வதற்கு முதலில் மெனக் கெட்டவர் என்ற அளவில் அவரை பாராட்டலாம்.
ஜோஸ்வா ஜே பெரிஸின் ஒளிப்பதிவும், கெளசிக் கிரிஷின் இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.
‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – பயப்படாமல் பார்க்கலாம்..!