April 28, 2024
  • April 28, 2024
Breaking News
January 3, 2024

ரூட் நம்பர் 17 திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

ஹாரர் படமோ என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்…

முதல் காட்சியில் காட்டுக்குள் வரும் ஒரு கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகிறது.

பின்னர் காட்டுக்குள் துரத்தப்படும் ஒரு இளம்பெண் ஒரு சக்தியால் தாக்கப்படுகிறார். அதே போல் காவல் அதிகாரி ஒருவரும் அதே காட்டுக்குள் அதே சக்தியால் தாக்கப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து அருகில் உள்ள அந்தக் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வரும் ஒரு காதல் ஜோடி அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குகின்றனர்.

அப்போதும் அதே சக்தி அவர்களைத் தாக்க அடுத்த காட்சியில் இருவரும் ஓரிடத்தில் அடைக்கப்பட்டது தெரிந்ததும்தான் அதுவரை தாக்கியது அமானுஷ்ய சக்தி அல்ல… மனுஷ சக்திதான் என்று நமக்கு புரிகிறது.

அவர்களை அடைத்து வைத்திருப்பவர்  ஜித்தன் ரமேஷ்தான். ஆனால் நீள முடியுடன் கொடுமையான கெட்டப்பில் வரும் அவர், ஏன் அப்படி அவர்களைப் பிடித்து வைக்கிறார்..?

காணாமல் போன அவர்களைத் தேடி போலீஸ் வர, அவர்கள் மீட்கப்பட்டனரா  என்பதெல்லாம்தான் ரூட் நம்பர் 17 படத்தின் மீதிக் கதை.

இந்த படத்தில் ஜித்தன் ரமேஷுடன் அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பெராடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அவுசேப்பச்சன் இசையமைக்க பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் உருவான இந்தப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உள்ளது. ஒரு த்ரில்லர் படத்திற்கு ஏற்றவாறு பிரஷாந்தின் ஒளிப்பதிவும்  அவு சேப்பச்சனின் பின்னணி இசையும் அமைந்துள்ளன.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜித்தன் ரமேஷ் இரண்டு வேடங்களில் வருகிறார். அதில் ஒன்று இதுவரை இல்லாத வகையில் ஒரு வித்தியாசமான மேக்கப்புடன் வருபவர், அதில் வித்தியாசமாக நடிக்க முயற்சியும் எடுத்திருக்கிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அஞ்சு பாண்டியா அரைகுறை ஆடையுடன் முழுவதுமாக வருவது கிளாமர் பகுதிக்கு உதவுகிறது. ஆனால் அவர் படம் முழுவதும் அழுது கொண்டே வருவது நம்பகமாக இல்லை.

அரசியல்வாதியாக வரும் ஹரிஷ் பெராடி, தன் வழக்கப்படி கண்களால் நடித்து விட்டுப் போகிறார். ஆனால், ஒருசில காட்சிகள் மட்டும்தான் அவருக்கு ஒதுக்கட்டிருக்கிறது. போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மற்றும் அருவி மதன் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

வழக்கம்போல் அருவி மதன் திடீரென்று வில்லனாவார் என்று எதிர்பார்த்து ஏமாருகிறோம்.

படத்தின் முதல் பாதி அதிரடியாக சென்றாலும், இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. ஜாக்கி ஜான்சனின் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

படத்தில் வரும் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது. 

ரூட் நம்பர் 17 – எங்கே செல்லும் இந்தப் பாதை..?