September 16, 2024
  • September 16, 2024
Breaking News
January 5, 2024

கும்பாரி திரைப்பட விமர்சனம்

By 0 138 Views

தமிழ் சினிமாவில் என்றைக்கும் அழிக்க முடியாத நட்பையும், காதலையும் போற்றும் படம்.

குமரி மாவட்டத்தைக் களமாகக் கொண்டு நடக்கும் கதை. அங்கு நட்புக்கு இலக்கணமாக கேபிள் டிவி ஆபரேட்டர் விஜய் விஷ்வாவும், மீன் பிடி தொழிலைச் செய்து வரும் நலீப் ஜியாவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் நலீப் ஜியா காணாமல் போக, நீதிமன்றத்தில் வைத்து தங்கள் முன் கதையை விஜய் விஷ்வா சொல்வதில் இருந்து தொடங்குகிறது படம்.

நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர, விஜய் விஷ்வாவின் பாதையில் வம்புடன் வரும் நாயகி மஹானா அடுத்தடுத்த சந்திப்புகளில் அவரது காதலியாக ஆகிறார்.

நண்பன் காதலிப்பது கேட்டு மகிழ்ந்து போன நலீப் ஜியா,  இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து பதிவாளர் அலுவலகம் போனால் தான் தெரிகிறது, மஹானாவுக்கு  திருமண வயது எட்ட இன்னும் சில நாள்கள் காத்திருக்க வேண்டும் என்பது.

அதுவரை இருவரையும் மஹானாவின் ரவுடி அண்ணன் ஜான் விஜய் கண்ணில் படாமல் மறைந்து வாழ வைத்து, இருவரின் திருமண வாழ்வுக்குப் பொருள் தேடும் முகமாக, மீன் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கும் ஜியா, அங்கிருந்து காணாமல் போகிறார்.

அவர் ஜான் விஜய்யால் கொல்லப்பட்டதாக நம்பப்பட, என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.

கும்பாரி வேடத்துக்கு விஜய் விஷ்வா பொருத்தமாக இருக்கிறார். செயற்கைத தனம் தெரியாமல் இயல்பாக நடிக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும. அவர் கேபிள் ஆபரேட்டராக இருப்பது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

நல்ல உடல் கட்டுடன் வரும் நலீப் ஜியாவும், நண்பன் வேடத்தில் ‘ நச் ‘சென்று பொருந்துகிறார். அவர் கேரக்டருக்கு படத்தில் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

முன்பு அஹானா என்றொரு அழகிய நடிகை இருந்தார். அவரைப் போலவே நாயகி மஹானாவும் நல்ல நிறத்துடன் அழகாக இருக்கிறார். நல்ல பாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் முன்னேறலாம்.

ஜான் விஜய் வழக்கம்போல். ஆனால், அவர் எதுவும் பெரிதாக செய்து விட மாட்டார் என்பது சாம்ஸ் உள்ளிட்ட அவரது காமெடி அல்லக் கைகளைப் பார்த்தாலே தெரிகிறது. அவர்கள் அனைவருமே ஜான் விஜய்க்கு நேர்ந்த அல்லல் கைகள்..!

சாம்ஸ் நம்மைச் சிரிக்க வைத்துவிட செய்யும் முயற்சிகளைப் பார்த்தால்தான் சிரிப்புதான் வருகிறது. 

பெண்பால் நகைச்சுவை வேடத்தில் வரும் மதுமிதாவும் அப்படியே.

இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், செந்தி, காதல் சுகுமார் என்று பலரும் நம்மைச் சிரிக்க வைக்க போட்டி போட்டு முயற்சி செய்கிறார்கள்.

குமரியின் அழகுடன், கதைக் களத்தையும் அழகுற காட்சிப் படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகம். 

ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்வியின் இசையும் காதுகளை உறுத்தாமல் ஒலிக்கிறது. நட்பின் புகழைச் சொல்லும் கும்பாரி பாடல் கவனிக்க வைக்கிறது.

மற்ற கலைஞர்களும் பட்ஜெட்டுக்கு பாதகம்  இல்லாமல் உழைத்திருக்கிறார்கள்.

கும்பாரி – குமரி நட்பு..!