April 27, 2024
  • April 27, 2024
Breaking News
September 14, 2020

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் – ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் கடிதம்

By 0 477 Views
கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையில மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று நேற்று நீட் தேர்வை நடத்தியது.
 
தேர்வில் அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது.
 
இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.
 
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
 
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்…’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதுதொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். அத்துடன் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என 6 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ‘‘நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை.
 
4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
 
சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்.
 
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை’’ எனத் தெரிவித்துள்ளனர்.