‘நடிகையர் திலகம்’ என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பட்டப் பெயரிலேயே வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிக்கிறது.
நாக் அஷ்வின் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகிறார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் அஷ்வின், நடிகை கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“தொடரி’ படத்தில் நான் நடித்ததைப் பார்த்துதான் இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தாக இயக்குனர் நாக் அஷ்வின் சொன்னார். ‘தொடரி’ படத்தில் நடிக்கும் போது அந்தப் படம் எனக்கு ஏதாவது நல்லது செய்யும் என்று எதிர்பார்த்தேன். படம் வெளிவந்த பின் பலர் கிண்டல் செய்தார்கள், பலர் பாராட்டினார்கள். ஆனால், ‘தொடரி’ மூலம்தான் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் பட வாய்ப்பு என்னைத் தேடி வந்த போது நான் சம்மதிக்கவில்லை. நானே வளர்ந்து வரும் நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதையும் மீறி, சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பலருக்கும் தெரியும். அதை நடித்துக் காட்டும் போது ஏதும் பிரச்சினை வருமா என்றும் சந்தேகம் இருந்தது.
நாக் அஷ்வின் இந்தப் படத்திற்காக மூணு மணி நேரம் என்னிடம் கதை சொன்னார். உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்போகிறேன் என்றார். அப்போதுதான் இப்படம் பற்றிய நம்பிக்கை எனக்கு வந்தது. படத்தில் சின்ன பெண்ணாக, அப்புறம் வளர்ந்த வயது, அப்புறம் குண்டாக இருப்பது போல், கடைசியில் ஒல்லியாக இருக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு இருக்கிறது.
படத்தில் எனக்கு 120 காஸ்ட்டியூம்ஸ் இருக்கிறது. சாவித்திரி அம்மா என்ன மாதிரியான நகைகள் அணிந்திருந்தார்களோ, அது போலவே நகைகள் உருவாக்கி அணிந்து நடித்தேன். ஒவ்வொரு நாளும் அவரது புகைப்படங்களைப் பார்த்து அதன்படி தோற்றத்தை மாற்றி நடித்தேன். ஆர்ட் வேலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்திற்காக நான் குண்டாகவில்லை, அதற்காக நான்கு மணி நேரம் புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்தேன். வாயைத் திறக்கக் கூட முடியாது, அதனால் சரியாக சாப்பிடக் கூட முடியாது, அந்த சமயத்தில் ஏழு மணி நேரம் வரை கூட நடித்திருக்கிறேன். தினமும் இரண்டரை மணி நேரம் செலவழித்து அந்தத் தோற்றத்தைக் கொண்டு வந்தோம்.
இதுவரை வந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்..!”