எல்லா மதங்களிலும் கடவுள் வழிபாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாக இருக்கிறது. அதில் கிறிஸ்தவ மதத்தில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் வழிபாடு என்கிற ஒன்று இருப்பதாக இந்தப் பட இயக்குனர் ஹரி கே.சுதன் சொல்லி இருக்கிறார்.
படத்தின் கதை இதுதான்..!
விடுமுறைக்காக கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணான சாய்ஸ்ரீ பிரபாகரன், தனது சகோதரி முறை கொண்ட சிது குமரேசன் தங்கியிருக்கும் வீட்டுக்கு வருகிறார்.
அங்கே சிதுவோ விக்னேஷ் ரவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்வின் உறவில் வாழ்ந்து வருகிறார். அதேபோன்று இன்னொரு ஜோடியும் அதே வீட்டில் தங்கி இருக்கிறது.
அங்கே அவர்களுக்குள் இருக்கும் உடலியல் ரீதியான காம இச்சைகளைக் காண நேரும் சாய் ஶ்ரீ, கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து இயல்பான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைக்கிறார்.
ஆனால் அது அவ்வளவு சாத்தியமானதாக இருக்கவில்லை. பெற்ற தாயே அவரை வீட்டை விட்டுத் துரத்துகிறார். இதனால் மத நம்பிக்கையிலிருந்து வெளியேறி அதற்கு எதிர் கருத்துள்ள சாத்தான் வழிபாட்டுக் குழுவில் இணைகிறார். அது அவரது வாழ்க்கையை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
நாயகி மரியாவாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரனின் தைரியம் பாராட்ட வைக்கிறது. தங்கையின் பாலியல் உறவுகளை அவர்களது முனகல் சத்தத்தின் வாயிலாக அறிந்து விரகதாபத்தில் சுய இன்பம் செய்து கொள்ளும் வேடத்தில் நடிப்பது என்பது ஒரு பெண்ணுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. அதுமட்டுமில்லாமல் உலகமெங்கும் வியாபித்து நிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துடைய படத்தில் கதை நாயகியாக நடிப்பதற்கும் பெரிய ‘தில்’ வேண்டும்.
சிது குமரேசன் வேடமும் அப்படியே. தனது காதலன் விக்னேஷ் ரவியுடன் தினமும் உறவு கொள்ளும் வேடத்தில் அந்த இன்பத்தை முக்கல், முனகலுடன் தைரியமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
இதுவரை நாம் அதிகம் அறிந்திறாத சாத்தான் வழிபாட்டுக் குழுவை நிர்வகிக்கும் பாவல் நவகீதன், ஏற்றிருக்கும் வேடமும் புதிதானது. அவர் பேசும் கருத்துக்கள் எல்லாமே ஏற்புள்ள வையாக இருப்பதால் அவர் மீது எந்தக் கோபமும் நமக்கு வருவதில்லை.
திருமணம் ஆகாமலேயே தினமும் உடலுறவு வைத்துக் கொள்ள ஒரு பெண் கிடைத்தும் கன்னியாஸ்திரியான அவளது சகோதரி மீது மையல் கொள்ளும் விக்னேஷ் ரவி மலைக்க வைக்கிறார். அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது.
இவர்களுடன் பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இயல்பாக நகரும் இந்தப் படத்தில் இசை இருந்ததா என்றே யோசிக்க வைக்கும் அளவில் இயல்பான இசையை தந்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன்.
ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜியின் பணியும் இயல்பான வாழ்க்கையை பார்ப்பது போன்ற அனுபவத்தை தந்திருக்கிறது.
சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் அதை கவனிக்க வைக்க இப்படிப்பட்ட சர்ச்சையான கருத்துகள்தான் சரியான மார்க்கம் என்று புரிந்து கொண்டு செயல்பட்டு இருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஹரி கே.சுதன்.
ஒரு மதத்தின் மூட நம்பிக்கைகளை விமர்சிப்பது தவறில்லை. ஆனால் அதற்கு அடிநாதமாக பாலியல் விஷயங்களை வைத்து கதையை நகர்த்தி இருப்பது நெருடலாக இருக்கிறது.
கன்னியாஸ்திரி தங்கி இருக்கும் வீட்டில் பக்கத்து அறையில் தினமும் சல்லாபத்தை மேற்கொள்ள ஒரு சகோதரி துணிவாளா என்பது தெரியவில்லை. அப்படி அவளது காம இச்சையை தூண்டி விட்டு, அதன் விளைவாக அவளை வீட்டை விட்டு துரத்துவது எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் இல்லை.
மரியாவின் நியாயமான காதலைச் சொல்லி இருந்தால் அவளை எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
அதைவிடுத்து கன்னியாஸ்திரி மரியாவை காமப் பிசாசாக காட்டி இருப்பதில் ஒரு மதத்தின் கோட்பாடுகளை அத்துமீறி விமர்சிப்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.
மரியா – செய்தது சரியா..?
– வேணுஜி