மலையாள சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹாசிம் மரிக்கர், தன் மரிக்கர் ஆர்ட்ஸ் சார்பாக இயக்குநராகவும் தமிழில் தடம் பதிக்கும் படம் ‘உன் காதல் இருந்தால்’.
ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் நாயகனாகும் இப்படத்தில் அவருடன் சந்திரிகா ரவி, லெனா, காயத்ரி மற்றும் மம்முட்டியின் சகோதரர் மகன் மபுள் சல்மான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மன்சூர் அஹமது இசைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.
கிட்டத்தட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் வந்திருந்த நிகழ்வில் சிரப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் பேசியதுதான் அதிரி புதிரியாக அமைந்தது. அவர் பேச்சிலிருந்து…
“மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு வந்து இரு மொழிகளிலும் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாசிம் மரிகர். மம்முட்டி குடும்பத்திலிருந்து அவரது மகனும் மற்றும் தம்பி மகனும் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். அதுபோல் அனைத்துத் துறைகளில் இருப்பவர்களும் சினிமாவிற்கு வரவேண்டும். விவசாயம் செய்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சினிமா என்பது மொழி, இலக்கியம், நாடு ஆகியவற்றைக் கடந்த ஒன்று. அந்த வகையில் கோடி கணக்கில் பணம் செலவழித்து ஒரு படம் எடுத்திருக்கும் இவர்கள் கில்டில் உறுப்பினராக இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுக்கு ‘கில்டி’ல் இருப்பவர்கள் வரவேண்டும். ஒருவரும் வராமல் இருப்பது மனக் குறைவாக இருக்கிறது.
பெரிய நடிகர்களின் படங்களால் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. இருந்தும் மக்களுக்கு சினிமா மீது இருக்கும் மோகத்தால் படங்களை பார்க்கத் தொடர்ந்து வருகிறார்கள். பெரிய படங்களுக்கு விடியற்காலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி என்று எதற்கு போடுகிறார்கள். அதிலும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்த விலை என்ன?
இனி எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, எத்தனை கோடி செலவழித்து எடுத்த படமாக இருந்தாலும் சரி ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன். என் ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து டிக்கெட்டிற்கு பணம் வசூலிப்பவரை சும்மாவிட மாட்டேன். இதற்கு அறவழி உதவாது. உதைவழிதான் உதவும்.
அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்காக வசூலித்துக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் எதிர்க்கிறேன். ரூ.10க்கு மேல் வசூலிக்கக்கூடாது. அரசியல் அரியாசனத்தில் அமர்ந்திருப்பவர்களின் தேவையைத் தீர்ப்பதல்ல சினிமா. சாமான்ய மக்களின் சட்டைப் பையில் இருக்கும் சிறிய தொகையில் சந்தோஷத்தைக் கொடுப்பதுதான் சினிமா.
இன்று டாஸ்மாக் இல்லாமல் அரசாங்கம் இல்லை. அந்த டாஸ்மாக்கில் ரூ.115க்கு விற்கப்படும் சரக்கை ரூ.200க்கு விற்றால் சும்மா விடுவார்களா? அதேபோல் டிக்கெட் விலையும் ரூ.160க்கு மேல் விற்கக்கூடாது. எந்தத் திரையரங்கமாக இருந்தாலும் சரி இதை மீறி வசூலித்தால் என்னிடம் கூறுங்கள், நான் அவர்களை தண்டிக்கிறேன்.
உச்சத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் இதற்கு கோரிக்கை விடுக்க வேண்டும். ரஜினி சொன்னால் கேட்காமலா போய்விடுவார்கள்
ஈழத்தமிழர்கள் 40 நாடுகளில் 20 லட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவோக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் படங்களைப் பார்ப்பதால் தான் இன்று பத்து கோடிக்கு மேல் வசூல் வருகிறது. ஆகையால், யாரெல்லாம் அதிக விலைக்கு விற்கிறார்களோ அவர்கள் என் மீது FIR போட்டாலும் பரவாயில்லை. அவர்களை அடிப்பேன் என்று சவால் விடுகிறேன், அடி உதவுவது போல் யாரும் உதவமாட்டார்கள்.
தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தி மக்களுக்கு சினிமா மீது போதையை உண்டாக்குகிறார்கள். மக்களும் எப்போது படம் வெளியாகும் என்று பணம் கையில் இல்லாமல் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்த நாடு முதல்வரை கொலை செய்துள்ளது. பிரதமர் மார்வாடிக்கும், குஜராத்திக்கும் நாட்டை விற்று விட்டார். என் மக்களுக்காக நான் எதையும் செய்வேன்.!”