ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு தீர்ப்பு வழக்கப்பட்டது. அதில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறியது நீதிமன்றம்.
மேலும் கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் ஷங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை.
இதையடுத்து எழும்பூர் பெருநகர 2வது மாஜிஸ்திரேட் இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி முதல் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related