தமிழ்நாடு எப்போதும் அமைதிப் பூங்காதான். இங்கே எந்த விதத்தில் பிரிவினையையோ, வன்முறையையோ விதைக்க நினைத்தாலும் அதன் விளைவு பூஜ்யமாகத்தான் இருக்கும் என்று ‘அடித்து’ச் சொல்கிற கதை.
அதில் காதல் முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
ஆக்ஷன் கதையா என்றால் “ஆமாம்…” என்று சொல்லலாம். காதல் கதையா என்று கேட்டால் அதற்கும் “ஆமாம்..!” என்றுதான் சொல்ல வேண்டும்.
சாதி மத பூசல்களால் தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்ட சர்வதேச சக்திகள் ஆயுதப் புழக்கத்தின் மூலமாக இங்கே அமைதியைக் குலைக்க நினைக்கிறார்கள். அதன்படி கண்டெய்னர் கண்டெய்னராக துப்பாக்கிகள் தமிழ்நாட்டுக்குள் வருகின்றன.
இதை மோப்பம் பிடித்து விடும் தேசிய பாதுகாப்பு படை பிஜு மேனன் தலைமையில் ஒரு டீமை அனுப்புவதில் தமிழ்நாட்டில் அந்த கண்டெய்னர்கள் நுழைவதற்குள் தடுக்கப் பார்க்கிறார்கள்
ஆனாலும், அசகாய சூரர்களான ஆயுதக் கடத்தல் மன்னன்கள் வித்யூத் ஜம்வால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் எதிர் வினை புரிவதில் துப்பாக்கிகள் தமிழ்நாட்டுக்குள் புகுந்து மறைத்து வைக்கப்படுகின்றன.
அவை மக்களிடத்தில் புழங்குவதற்குள் அதை தடுக்க வேண்டும். அத்துடன் வித்யூத்தையும் ஷபீரையும் கைது செய்ய வேண்டும் என்கிற ‘டாஸ்க்’ குடன் விழி பிதுங்கி நிற்கிறார் பிஜு மேனன்.
இதே மதராசில் இன்னொரு பக்கம் தன் காதல் தோல்விக்காக தற்கொலை செய்து கொள்ள முயலும் சிவகார்த்திகேயன், தன் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியடைகிறார்
துப்பாக்கிகள் பதுக்கப்பட்டு இருக்கும் இடம் தெரிய வர, அவற்றை அங்கேயே அழிக்க வேண்டும் என்றால் அதற்கு தன் உயிரை துச்சம் என மதிக்கும் ஒரு தற்கொலை படை வீரர் வேண்டும் என்ற பிஜு மேனனிடம் தற்கொலை பண்ணிக்கொண்டு செத்தாக வேண்டும் என்கிற சிவகார்த்திகேயன் சிக்க இருவருக்குள்ளும் ஏற்படும் கெமிஸ்ட்ரியின் விளைவு என்ன என்பதுதான் கதை.
விளையாட்டாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயனின் பாத்திரம் அவர் யார் என்று தெரிய வரும் போது நெகிழ வைக்கிறது. ஆபத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு உயிரையும் தன்னுடைய உறவினர்களாகவே நினைத்து உதவி செய்யப் போகும் சிவா மனதைக் கவர்கிறார். அந்த பாத்திரப்படைப்பு தமிழ் சினிமாவுக்குப் புதுசு.
அத்தனை உறவாகவும் காதலி ஒருத்தியே வந்து சேர, அந்தக் காதலிக்காக எந்த சக்தியையும் அடித்து நொறுக்கத் தயாராகும் சிவாவைக் காதலிக்கலாம்.
அமரன் படத்திலிருந்து ஆக்க்ஷனுக்கும் தயாராகி இருக்கும் அவர், நடனம் ஆடுவதற்கோ நடிப்பதற்கோ எந்தக் கஷ்டமும் படாத அளவில் முழு ஹீரோவாகப் பக்காவாக தயாராகி விட்டார்.
அழகான ருக்மணி வசந்தின் முகத்தில் இயல்பிலேயே இருக்கும் மெலிதான சோகம் அவரது பாத்திரத்தை நியாயப்படுத்துகிறது. சிவகார்த்திகேயனைப் பற்றிய எந்த விஷயம் அவரை வெறுத்து ஒதுக்க காரணமாக வேண்டுமோ அந்த விஷயத்துக்காகவே அவர் சிவாவைக் காதலிக்க ஆரம்பித்து விடுவதும் ‘ லவ்’ வபிள்..!
அதேபோல் காதலை முறித்து கொள்வதற்கான காரணமும் நோட்டபிள்..!
பிஜு மேனனின் நடிப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும். படம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து முடிவுக்கு வரும் வரை இம்மி அளவு கூட பாத்திரத்தில் இருந்து பிசகாமல் துல்லியம் காட்டி இருக்கிறார் பிஜு.
அவர் டீமிலேயே அவரது மகன் விக்ராந்தும் இருக்க, ஒரு கட்டத்தில் அவரை நாமே சந்தேகிக்க நேர்கிறது. ஆனால் உயிரைக் கொடுத்து தன் மீதுள்ள பழியை துடைத்துக் கொள்கிறார் விக்ராந்த்.
ஆளைப் பார்த்தாலே வித்யூத் ஜம்வாலை ஜெயிக்க ஏதாவது விசேஷ சக்தி வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன உடற்கட்டு..? …அதில் என்ன விதமான பாடி லாங்குவேஜ்..!? வியக்க வைக்கிறார் வித்யூத்.
அவருக்கு சற்றும் சளைக்காத இன்னொரு வில்லனாக ஷபீர். இரண்டு பேரும் செய்வது பயங்கரவாதம் என்றாலும் இருவருக்கும் இருக்கும் பயங்கர நட்பு, ஆச்சரியப்பட வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுதீப் இளமமோன் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு ஹீரோவாகி இருக்கிறார். அவர் கண்களின் வழியே நாம் இந்தக் கதையை ரசிக்க முடிகிறது. அதற்குள் ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பும் சேர்ந்து கொள்ள படம் பரபரக்கிறது.
கெவின் குமாரின் ஆக்சன் வேற லெவல். அவருக்கு மேல் ஆக்க்ஷனை ரசிக்க வேலை பார்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். காதல் காட்சிகளிலும் தாலாட்டுகிறது அவரது இசை.
கண்ணெதிரே ஒரு தவறு நேர்ந்தால் அதை தட்டிக் கேட்காமல் இருப்பதை நார்மல் என்றும், தட்டிக் கேட்டால் அது அப்நார்மல் என்றும் சொல்கிற எதிர்மறை சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை நெற்றி பொடடில் அடித்தது போன்று புரிய வைத்து விடுகிறார் ஏ ஆர் முருகதாஸ்.
அதேபோல் ஒவ்வொரு காட்சியையும் இத்தனை பிரம்மாண்டமாக எடுக்க இவரைப் போன்ற ஒரு சில இயக்குனர்களால் மட்டுமே முடியும். அதிலும் படத்தின் ஆரம்பக் காட்சி தவிர்க்க கூடாத பிரமாண்ட ஆக்ஷன் ரகம்.
மதராசி – துப்பாக்கி 2..!
– வேணுஜி