நடிகராக இருந்து இயக்குநராகியிருக்கும் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கி பேசுகையில், “படத்தில் நாயகன், நாயகி ஒரு தவறு செய்து விடுகிறார்கள். அந்த சூழலில் ஒரு பாட்டு வருகிறது. எப்போதுமே ஒரு தவ்று நடந்தால் அதை என்னுடையது என்று யாருமே சொல்வதில்லை. மாறாக இன்னொருவர் மீது குற்றத்தைத் தூக்கிப் போட்டு விடும் மனோபாவம்தான் நம்மிடம் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் தவறு, சரி என்பது இடத்துக்கு இடம் மாறுகிறது. இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். இங்கே மதுரையில் வெளியே போய்விட்டு கணவன் வீட்டுக்குள் வரும்போது இன்னொரு உறவினருடன் மனைவி உறவாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். உடனே அவர்கள் இரண்டு பேரின் தலையையும் வெட்டி எடுத்துக் காவல் நிலையம் கொண்டுபோகிறார்.
இதுவே எஸ்கிமோக்களின் வாழ்வில் வேறு மாதிரி இருக்கிறது. ஒரு எஸ்கிமோ வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும்போது தன் மனைவியும், விருந்தினரும் உறவு கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல் வெளியே போய்விடுகிறார்.
மறுநாள் காலையில் அந்த விருந்தினரிடம் “ஏல்லாம் நல்லபடியாக நடந்ததா../” என்கிறார். இவை இரண்டுமே உண்மைச்சம்பவங்கள். இந்த தவறும் சரியும் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. இந்த வகையில் நான் பாடலை உருவாக்கினேன்..!” என்றார்.
இந்த விஷயம் எஸ்கிமோக்களிடம் போய்ச்சேர வாய்ப்பில்லை அல்லது இங்கிருந்து யாரும் எஸ்கிமோக்களிடம் போய் இது சரியா என்று கேட்கப்போவதில்லை என்ற தைரியத்தில் மதன் கார்க்கி அடித்துவிட்ட கதையா இது என்று தெரியவில்லை.
எந்த எஸ்கிமோவாவது இதைக் கேள்விப்பட்டு ஈட்டியுடன் மந்தைவெளிக்கு மதன் கார்க்கியைத் தேடி வந்தாலும் வரலாம்.