‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி.
பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்துக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதிலிருந்து…
“ராம் குமார் சாரின் நடிப்பை நாம் ஒரு சில படங்களை தவிர வேறு எதிலும் பார்த்ததில்லை. இந்த படத்தில் அவர் நடித்தது எங்களுக்கு கிடைத்த வரம். நாஞ்சில் சம்பத் சார் ஒரு தாழ்மையான மனிதர். இந்த படத்திற்கு நாங்கள் அவரை அணுகியபோது, அவர் கேட்ட முதல் விஷயம், அவருடைய மகனின் கல்லூரி கட்டணத்திற்கு பணம் கட்ட முடியுமா என்பது தான்.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் அவரைப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மோசமான அரசியல்வாதியின் கதாபாத்திரத்திற்காக நாங்கள் அவரை அணுகினோம். ஆனால் அவரைப் பற்றிய எனது கருத்துகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தன. அவர் ஒரு அற்புதமான மனிதர். இப்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அவர் நடித்து வருகிறார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.
LKG press meet
கடந்த சில ஆண்டுகளாகவே நான் நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை. அதில் எனக்கு திருப்தியே இல்லை. நிறைய பேர் கிடைக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணாத, நடிச்சி நல்லா பணம் சம்பாதி என அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அந்த நேரத்தை நான் LKG ஸ்கிரிப்ட் எழுத உபயோகித்துக் கொண்டேன்.
சென்னை வெள்ளம் முடிந்து வந்த தேர்தலில் வெறும் 57% வாக்குகள் பதிவான போது தான், இளைஞர்கள் யாருக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். LKG படத்தை பார்த்த பிறகு, அவர்கள் நிச்சயம் வெளியே வந்து வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பார்கள் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல, பார்வையாளர்களை ஏதாவது ஒன்றை பற்றி சிந்திக்க வைக்கும் படம். இது என் சொந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு படம் அல்ல, சமூகத்திற்கு ஏதாவது செய்யும் படம். பிப்ரவரி 22 அன்று படம் வெளியான ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து இந்த படத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்..!”
Related