புதுமையான கதை அமைப்பை கொண்டதாலேயே இந்த படம் நம் கவனம் பெறுகிறது. எல்லாக் கதைகளிலும் அதனைத் தாங்கிச் செல்லும் நாயகனுக்கோ நாயகிக்கோ ஏற்படும் சவாலும் அந்த சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதுவும்தான் மையப்புள்ளியாக இருக்கும்.
இந்தப் படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்கிறார் சாயாசிங். நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தை ஏற்ற அளவில் சாயா சிங்கைப் பாராட்டலாம்.
ஒரு பாலியல் தொழிலாளியாக வரும் அவருக்கு முன் நிற்கும் சவால் என்னவென்றால் அவருக்கு திடீரென்று குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு மிகவும் சிக்கலான எலும்பு மஜ்ஜை நோய் ஏற்பட குழந்தையின் தந்தை அந்த எலும்பு மஜ்ஜையைத் தானம் தந்தால் மட்டுமே அது தீரும் என்ற நிலையில் குழந்தையின் உண்மையான தந்தையைக் கண்டுபிடிக்க வேண்டி நேர்கிறது.
பாலியல் தொழிலை மேற்கொண்டிருக்கும் அவருக்கு குழந்தையின் தந்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆனாலும் இரண்டு பேரின் மீது சந்தேகம் கொண்டு அவர்களுள் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.
அத்துடன் குழந்தையின் சிகிச்சைக்கு பெருமளவில் பணமும் தேவைப்பட அந்த பணத்தை அவரால் ஈடுகட்ட முடிந்ததா… குழந்தையின் உண்மையான தந்தையை அவர் கண்டுபிடித்தாரா என்பதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிக் கதை
குழந்தையின் பெயரான லில்லியையும். சாயாசிங்கின் பெயரான ராணியையும் இணைத்து லில்லிராணி என்று தலைப்பு வைத்து விட்டார் இயக்குனர்.
பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தாலும் அரைகுறை ஆடையுடன் எல்லாம் வராமல் நாகரிகமான ஆடைகளில் வந்து கவனம் ஈர்க்கிறார் சாயா சிங். அத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்ட எந்த காட்சிகளும் படத்தில் இல்லாததும் ஆறுதல். ஒரு தாயின் பரிதவிப்பான நிலையில் அந்த பாத்திரத்தின் மீது நமக்கு பரிதாபமே ஏற்படுகிறது.
தம்பி ராமையாவுக்கு என்று எப்படித்தான் இவ்வளவு கனமான வேடங்கள் கிடைக்கிறதோ..? போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் அவரது புத்திசாலித்தனமே படத்தின் திரைக்கதைக்கு உதவி செய்கிறது. சாயா சிங்கின் சந்தேகத்துக்கு ஆளான முதல் நபர் இவர்தான்.
அடுத்த நபராக அமைச்சர் ஒருவரின் மகனாக வரும் துஷ்யந்த்தும் நன்றாக நடித்திருக்கிறார். அவரை ‘தம்பி ‘ என்று ஒரு இடத்தில் சாயா சிங் அழைக்க, வெறுத்துப் போகிறாரே அந்தக் கட்டம் அற்புதம். அவர் குடித்தே பழக்கம் இல்லாதவர் போலிருக்கிறது. குடித்துவிட்டு நடிக்கும் காட்சியில் தடுமாறுகிறார்.
அமைச்சராக வரும் ஜெயபிரகாஷ் ஏதோ ஏழரை கூட்டி விடுவார் என்று பார்த்தால் எதிர்பாராத உதவி செய்த சாயா சிங்கை மகிழ்விக்கிறார்.
சிவதர்ஷனின் ஒளிப்பதிவு நிறைவு. ஜெர்வி ஜோஷ்வா இசையில் பாடல்கள் ஓகே. சேரனின் பின்னணி இசை அமைதியான காட்சியில் கூட அதீத உணர்வை தருகிறது
புதுமையான கதையைக் கொண்டு விஷ்ணுராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படம் வழக்கமான சினிமாவில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. நடிகர் நடிகைகளிடம் நடிப்பை வாங்குவதில் இன்னும் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும் அவர்.
லில்லி ராணி – வரவேற்கலாம்..!