November 24, 2024
  • November 24, 2024
Breaking News
September 10, 2021

லாபம் திரைப்பட விமர்சனம்

By 0 539 Views

கலை உன்னதப் படுவதே அது மக்களுக்கானதாக ஆகும்போதுதான். நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் நூறு படங்களாவது இந்த வேலையைச் செய்தனவா என்று தெரியாது. அப்படிச் செய்திருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று நாடே முன்னேற்றம் கண்டிருக்கும். 

ஆனால், விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்தைப் போன்ற படங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். தன் ஒவ்வொரு படத்திலும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எஸ்.பி.ஜனாநாதன் கடைசியாக இயக்கி வெளி வந்திருக்கும் படம் இது. அந்த மக்களின் கலைஞனுக்கு செவ்வணக்கம் சொல்வதிலிருந்து தொடங்கும் படத்தில் நாயகன் விஜய் சேதுபதி தன் சொந்த ஊரான ‘பெருவயல்’ கிராமத்தில் வந்து இறங்குகிறார்.

இறங்கியவரை மக்கள் வரவேற்க, முதலாளிகள் கொல்லத் துரத்துகிறார்கள். இது ஏன் என்று சொல்லத் தேவையில்லை. மக்களுக்கானவர்களை முதலாளிகள் வெறுப்பது ஒன்றும் புதிதில்லையே..? அப்படிப்பட்ட விஜய் சேதுபதி வெளியூர்களுக்குச் சென்று தான் பெற்ற நவீனங்களையும், தொழில் யுக்திகளையும் வைத்து எப்படித் தன் மக்களுக்கும், அப்படியே நாட்டு மக்களுக்கான நமக்கும் உழவுக்கும், தொழிலுக்கும் உள்ள வித்தியாசங்களையும், விவசாயத்தை அடிப்படையாக வைத்தே உலகத் தொழில்கள் இயங்குவதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்.

உதாரணத்துக்குக் கரும்பு என்றால் அது சர்க்கரை ஆலைகளுக்கானது என்று மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதிலிருந்து பெறப்படும் மொலாசிஸ் போன்ற உபரிப் பொருள்கள் சர்க்கரையை விட அதிக லாபம் தரக்கூடிய தொழில்களை இயக்குகின்றன. ஆனால், சர்க்கரையை முன் நிறுத்தியே கரும்புக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதேபோல பருத்தி விவசாயிகள் நினைத்தால் உலக ஆயத்த ஆடை உற்பத்தியையே தடுமாறச் செய்ய முடியும் என்று விளக்குகிறார் ஜனநாதன்.

அதேபோல் விவசாயியின் உழைப்பு பற்றியும், அதற்குத் தர வேண்டிய ஊதியம் பற்றியும் முதலாளித்துவம் கருத்தே கொள்ளவில்லை என்பதையும் வலியுறுத்தும் அவர், விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடிய தகுதி விவசாயிகளுக்கே இருப்பதையும் முன்வைக்கிறார். அத்துடன் முதலாளிகளின் லாபம் என்பது பகல் கொள்ளை என்றே நெற்றிப் பொட்டில் அடிப்பது போலச் சொல்கிறார் அவர். அதுதான் படத்தின் அடிநாதம். 

இதன்மூலம், இந்தத் தொழில் செய்தால் இவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்று விவரித்துச் சொல்வதும், அதை அடியொற்றிச் செய்வதுமே உலக வழக்கமாக இருப்பது எவ்வளவு பெரிய வினோதம் என்பதும் புரிகிறது. 

நாயகன் விஜய் சேதுபதியே படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுக குமாருடன் இணைந்து படத்தைத் தயாரிப்பிலும் தாங்கி இருப்பது இந்தப்படைப்பின் மேலுள்ள நம்பிக்கையால் என்பதும் புலனாகிறது.

கமர்ஷியல் படங்களில் கூட இயல்பான நடிப்புடன் வெளிப்படும் விஜய் சேதுபதி இந்தப்படம் முழுவதும் ஒரு கிராமத்து இளைஞராகவே வருகிறார். இதில் அவர் பேசும் வசனங்களை விவசாய, தொழில் மற்றும் பொருளாதாரப் பாடங்களாக அப்படியே பயன்படுத்த முடியும். கூட்டுப் பண்ணை முறை விவசாயத்தின் மூலம் எல்லோருக்கும் எப்போதும் வேலையையும், அவரவர் பங்களிப்புக்கேற்ற ஊதியத்தையும் பெற முடியும் என்பதுவும் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் முக்கிய செய்தி.

சின்னக் குழந்தைகளுக்கு லாபம் பற்றிய புரிதலை நாலே வரிகளில் ஸ்லேட்டில் எழுதி அவர் விளக்குவது அற்புதம். அவரது பாத்திரப் படைப்பு பட இறுதியில் சே குவாரா போன்ற புரிதலை ஏற்படுத்துகிறது. 

ஸ்ருதிஹாசன் படத்தின் நாயகி வேடமேற்று ஆரம்பத்தில் இசைக் கலைஞராக வந்தாலும், போகப்போக விஜய் சேதுபதியின் தன்மை உணர்ந்து அவருக்கு உதவுகிறார். 

படத்தில் மட்டுமல்லாமல் பொதுவிலும் எதிரியாக வருகிறார் பெருந்தொழிலதிபராக வரும் ஜெகபதி பாபு. அவரது வாழ்க்கை முறை அந்தக்கால ஜெய்சங்கர் பட வில்லன்களை நினைவு படுத்துகிறது. 

அவரது அட்டகாசங்களுக்குத் துணை புரிந்து தங்கள் தொழில்களை வளப்படுத்திக்கொள்ளும் ஆலை அதிபர்களாக அழகன் தமிழ்மணி, சண்முகராஜன், ஓஏகே சுந்தர், வின்செண்ட் அசோகன் ஆகியோர் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கும் கூட ஜெகபதி பாபு ஒரு கட்டத்தில் வில்லனாவது எதிர்பாராத திருப்பம்.

விஜய்சேதுபதியின் நண்பர்களாக வரும் ரமேஷ்திலக், பிருத்விராஜன், ஜெயவர்மன், கலையரசன், டேனி, நிதீஷ்வீரா, தமிழ் ஆகியோர் கடைசிவரை ஒற்றுமையாக இருப்பது நிறைவு. இவர்கள் காட்டுக்குள் தலைமறைவாக இருக்கும்போது பழைய தந்தி முறையைப் பயன்படுத்துவது புதிய (பழைய) உத்தி.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்துக்கு ஏற்றவகையில் பயணிக்கின்றன. 

படத்தில் ஜனநாதனின் வசனங்கள் மிகப்பெரிய பலம். கூட்டுப்பண்ணை முறையை மக்களிடம் விவரிக்கும் அவர், அதற்கான நிலத்தை உரியவர்களிடம் இருந்து பெறும்போது இனி சாதி வேற்றுமைகளை மறந்துட்டு வர்க்கத்தால ஒன்றிணைவோம் என்பது பொன்னெழுத்துகளால் ஆன வசனம்.

அதேபோல் அடிப்படையில் இறைச்சி விற்பனையாளராக வரும் விஜய் சேதுபதி கோழி, மாடு, பன்றி என அனைத்தையும் இறைச்சி என்றே பொதுவாகக் கொண்டாலும், மாட்டை அறுத்து இந்துக்களுக்கும், பன்றியை அறுப்பதால் இஸ்லாமியர்களின் வெறுப்பையும் சம்பாதிப்பது இறைச்சியில் கூட பொதுத்தன்மை இந்த சமுதாயத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

கிளைமாக்ஸில் வில்லனுக்குத் தரும் தண்டனை மிகவும் கொடூரமாக இருக்கிறது. அதைக் கொஞ்சம் தணித்திருக்கலாம். அதேபோல் மக்களுக்கான செய்தி சொல்லும் இந்தப்படம் மக்கள் விரும்பும் வகையிலேயே இன்னும் ரசிக்க வைக்கும் திரைக்கதையுடன் இருந்திருக்கலாம்.

இருப்பினும் சமூக, சாதீய, சட்ட, பொருளாதார, வர்க்க, மத ரீதியாக அனைத்து தவறுகளையும் சாடும் ஜனநாதன் இப்போது இல்லை என்பது திரையுலகுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டம்.  

படத்தால் யாருக்கு லாபம்..?  – திரைத் துறைக்கும் மக்களுக்கும்தான்..!