January 28, 2026
  • January 28, 2026
Breaking News
June 2, 2024

குற்றப் பின்னணி திரைப்பட விமர்சனம்

By 0 539 Views

தலைப்பிலேயே கதை புரிந்து போய்விடும். சில குற்றங்களும் அவற்றின் பின்னணி என்ன என்பதுவும்தான் கதை.

பழனியில் நடக்கும் கதை. அங்கு வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், படத்தொடக்கத்தில் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்றும் கெட்டப்பில் ஊருக்குள்ள இருக்கும் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்ணைக் கொலை செய்கிறார்.

இந்த கொலை வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அதே பாணியில் அங்கு வசிக்கும் தம்பதியைக் கொலை செய்கிறார்.

இந்த சம்பவங்களில் கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க போலீஸ் ஒரு பக்கம் தலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சரவணன் தனது வழக்கமான வேலையாக பால் ஊற்றுவதும் மீதி நேரங்களில் தண்ணீர் கேன் போடுவதுமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார் அப்படியே இந்த வழக்குகள் என்ன ஆகிறது என்றும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றின் பின்னணி என்ன என்பதுதான் கதையாக இருக்கும் என்பதை யாராலும் யூகித்து விட முடியும்.

‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சரவணனுக்கு ஒரு புது இமேஜை கொடுத்துவிட வில்லன் வேடத்துக்கு அவர் அப்போதே தயாராகி விட்டார். ஆனால் வில்லத்தனம் கலந்த ஹீரோ வேடம் இந்தப் படத்தில் அவருக்குப் புதுசு. ஒரு பக்கம் அப்பாவியாகவும் இன்னொரு பக்கம் கொடூரமான கொலைகளை செய்யும் வில்லனாகவும் இரண்டு முகம் காட்டி நடித்திருக்கிறார்.

அவருடன் நடித்திருக்கும் தீபாவளி தாட்சாயிணி, சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா, கராத்தே ராஜா உள்ளிட்ட கலைஞர்கள் பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவும், ‘ஜித்’தின் இசையும் படத்துக்கு என்ன தேவையோ அதைத் தந்து இருக்கின்றன.

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என்.பி.இஸ்மாயில். ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை தர வேண்டும்; அதில் நாட்டுக்கு நல்ல செய்தியையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த அவரது முடிவு பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் தன் மனைவியால் பாதிக்கப்பட்ட சரவணன் அதனால் தான் பெற்ற மகள் தவித்து போய்விடும் பாதிப்பில் இப்படித் தங்கள் உடல் சுகத்துக்காக குழந்தைகளை வெறுக்கும் பெற்றோரை பார்த்துக் கொலை செய்வதாக கதை எழுதி இருப்பதில்தான் லாஜிக் இடிக்கிறது. 

தவறு செய்தது தன் மனைவியாக இருக்கும் பட்சத்தில் அவளுக்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் விருப்பப்பட்டவனுடன் அவளை வாழ அனுமதித்து விட்டு அது போன்று நடக்கும் வேறு பெண்களையும், தம்பதியையும் சரவணன் கொலை செய்து கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மேலும் பாதிப்பை அடைவார்களே என்ற கவலையும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அவருக்கு இல்லாமல் போனால் பரவாயில்லை. ஆனால் ஒரு இயக்குனருக்கு அந்த நியாயம் தெரிய வேண்டாமா..?

அத்துடன் பால் ஊற்றும் வியாபாரம் செய்பவர் கொலை செய்யப் போகும்போதும் அதே பால் ஊற்றும் கெட்டப்பிலேயே ஏன் போகிறார்..? வேறு சைக்கிள் வேறு கேன் எடுத்துக் கொண்டு போனால்  வேறு ஆளாக ஆகிவிடுமா என்ன? இதற்கு பதிலாக வேறொரு தொழில் செய்பவராகவே போயிருக்கலாமே..? 

அத்துடன் ஊர் விட்டு வேறு ஊருக்கு வந்து ஏன் இப்படிப்பட்ட கொலைகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான எந்தக் காரணமும் படத்தில் இல்லை. 

இதுபோன்ற தவறுகளையும் லாஜிக்குகளையும் கவனித்து எடுத்து இரந்தால் நிச்சயம் கவனம் பெற்ற படமாக இருந்திருக்கும்.

குற்றப்பின்னணி – தவறும், தண்டனையும்..!