March 5, 2021
  • March 5, 2021
Breaking News
April 6, 2019

குப்பத்து ராஜா திரைப்பட விமர்சனம்

By 0 452 Views

வரிசைக்கட்டி வரும் வடசென்னைக் கதைகளில் அடுத்து வந்திருக்கும் படம்.

அங்கே ஒரு குப்பத்துக் குடியிருப்பில் வசிக்கும் ஜிவி பிரகாஷ், பார்த்திபன், பாலோக் லால்வாணி, பூனம் பஜ்வா இவர்களுக்குள் நடக்கும் காதல், மோதல், வஞ்சம், சந்தேகம் என்று பல உணர்வுகள் கலந்த வாழ்க்கைக் கதையாகக் கொடுத்திருக்கிறார் இந்தப்படம் மூலம் இயக்குநராகியிருக்கும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர்.

அந்தக் குப்பத்துக்குள் மேற்படி நடிகர்கள் தத்தம் பாத்திரங்கள் என்னவென்று நமக்குத் தெரிவிப்பதும், அவர்கள் வாழ்க்கை முறையும் முதல் பாதிக்குள் அடங்குகிறது.

எங்கெல்லாம் ஏழைகளும், அப்பாவிகளும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஒரு சுயநலவாதி இருந்து அவர்கள் வாழ்வில் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்கிற இரண்டாம் பாதியில் கண்ணீரும், ரத்தமும் கலந்து ஓடுகிறது.

அந்தக் காலத்து ஜெய்சங்கர் படங்கள் போல் வாரம் ஒரு படம் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் குப்பத்து மனிதராகவே ஆகிவிட்டார் இந்தப்படத்தில். புழுதி, சகதியில் உருண்டு புரண்டு நடித்திருப்பது மட்டுமல்லாமல் இதுவரை வந்த படங்களைவிட இதில் கேரக்டராக மாறி நடித்திருப்பதும் கூடுதலாக இருக்கிறது. அவரது எனர்ஜி லெவலும் வியக்க வைக்கிறது.

அந்தக் குப்பத்து பெரிய மனிதராக வரும் ஆர்.பார்த்திபனுக்கும் அவருக்குமான மோதலும், பின்பாதியில் அதுவே பிரிக்கமுடியாத பிணைப்புமாகி முடிவது ரசிக்க வைக்கிறது.

“நான் ஒரு தபாதான் சொல்லுவேன்… ஒவ்வொரு தபாவும் சொல்லமாட்டேன்…” என்று எம்ஜிஆர் ஸ்டைலும், ரஜினி டயலாக்குமாக வரும் பார்த்திபன் படத்தை ரசிக்க உதவி செய்கிறார். அவரது பாத்திரப்படைப்பு படத்தின் ‘யுஎஸ்பி’க்களுள் ஒன்று.

பார்த்திபனுக்கு ஈடான பெண்பால் பாத்திரம் ‘பூனம் பஜ்வா’வுக்கு. குப்பத்துக்குள் மின்னலாக திடீரென்று அறிமுகமாகி நம் மனங்களையும் ஈர்த்து குபீரென்று மறையும்போது மனதில் தைக்கிறார். அவர் யாரைக் காதலித்தார் என்பது கடைசிவரை கேள்விக்குறி.

Pallok Lalwani

Pallok Lalwani

நாயகியாக வரும் ‘பாலோக் லால்வாணி’ பாலக் பன்னீர் போன்று குளிர்ச்சியாக இருக்கிறார். அவருக்கு உண்மையில் தமிழே தெரியாது என்பதை நம்ப முடியவில்லை. அப்படியே குப்பத்தில் வசிக்கும் வாளிப்பான பெண்ணாக மாறி அம்மாவிடம் துடைப்பத்தில் அடிவாங்கி ஜிவியை விரட்டி விரட்டிக் காதலித்து, பூனம் பஜ்வாவிடம் சக்களத்திச் சண்டை போடுவது வரை பின்னி எடுக்கிறார்.

கிர்ணிப்பழம் கணக்காக வரும் மாமிச மலையான அந்த ‘சேட்’ யாரென்று கேட்கத் தோன்றுகிறது. ஏழைகளின் வாழ்வில் அடிக்கும் மார்வாடியை ஒரு வள்ளலாக காண்பிக்கிறார்களே என்று தொடக்கத்தில் ஒரு பதைபதைப்பு ஏற்படுவது உண்மை. கடைசியில் சாயம் வெளுக்கிறது.

குழந்தையைக் காணாமல் தேடும் அந்தத் தாயும் நன்றாக நடித்திருக்கிறார். அப்படியே லால்வாணியின் தாயாக வரும் வில்லியும்.

எம்.எஸ்.பாஸ்கர் பற்றிச் சொல்லாவிட்டால் தெய்வக்குத்தம் ஆகிவிடும். ஜிவியின் தந்தையாக வரும் அவர் மகனைக் குழந்தையாகவே எண்ணி கண்ணும் கருத்துமாக வளர்ப்பதும், அவர் விருப்பப்படி ஒரு பைக் வாங்கித் தருவதையே வாழ்க்கை லட்சியமாக கொண்டிருப்பதும் நெகிழ்ச்சி. நிஜக்குடிகாரன் கூட இத்தனை நேர்த்தியாக அளவெடுத்து நடிக்க முடியாது. அபாரம்..!

ஒரு சில படங்களுக்குப் பின் சிரித்து ரசிக்க வைக்கிறார் யோகிபாபு. அவர் பெயர் ‘கை சாமான்’. இப்படியே ஒவ்வொரு பாத்திரங்களின் பெயர்களும் சிரிக்க வைக்கின்றன. 

பிரேமுக்கு பிரேம் மனிதக் கூட்டமாக இருக்கிறது. எப்படித்தான் அனைவரையும் வேலை வாங்கினார்களோ..? துணை நடிகர்களுக்குக் கொடுத்த காசிலேயே தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுத்திருக்கலாம்.

படத்தின் தலைப்பிலேயே முதல் வெற்றி அமைந்து விட்டது. படம் நெடுக குப்பத்துக்குள் நடப்பதால் நாம் அங்கேயே சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. அதுவே இயக்குநருக்கு இரண்டாவது வெற்றி. எது நிஜம் எது செட் என்று தெரியாத வண்ணம் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் பாபா பாஸ்கர்.

ஒளிப்பதிவாளருக்குதான் ஒயாத வேலை. இண்டு, இடுக்கு சந்து பொந்தெல்லாம் கேமராவை வைத்து ஜனத்திரளுக்குள் படமெடுக்க நிறைய பொறுமையும், அனுபவமும் வேண்டும். அதில் வென்றிருக்கிறார் மகேஷ் முத்துசாமி. ஜிவியின் இசையிலேயே அமைந்த பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தில் – நிறத்தில்.

குப்பத்து ராஜா – பி அன்டு சி என்று இறங்கி அடிப்பான்..!