November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 6, 2023

குலசாமி திரைப்பட விமர்சனம்

By 0 414 Views

பாலியல் குற்றவாளிகளுக்கு சினிமாக்காரர்கள் தரும் தண்டனை மரண தண்டனை மட்டுமே. இதனை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி.

ஆட்டோ ஓட்டுனராக வரும் நாயகன் விமலின் தங்கை கீர்த்தனா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவராக விரும்பிய விமல் அதற்கு போதிய பணமின்றி தவிக்க அந்த கிராமத்து மக்களே சேர்ந்து விமலின் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள்.

இத்தனைப் பாடுபட்டு தங்கையை மருத்துவராக முயன்றும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கீர்த்தனா இறக்க, அதில் ஈடுபட்ட குற்றவாளி கோர்ட்டிலேயே வைத்து கொடூரமாக கொல்லப்படுகிறார். 

கொலையாளிக்கும் விமலுக்கும் இருக்கும் பொருத்தங்களை வைத்து அவர்தான் கொலையாளி என்று காவல்துறை வழக்கை முடிக்க நினைக்க, அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கும் கூட பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்க, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைக் கொல்வது யார் என்கிற கேள்விக்கு விடையாக வருகிறது இந்த திரில்லர் திரைப்படம்.

ஆட்டோ ஓட்டுநர் ‘சூரசங்கு’ என்கிற வேடத்தில் வரும் விமலுக்கு படம் முழுவதும் ஆட்டோ டிரைவர் காஸ்டியூம்தான். கிராமத்து ஃபிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் அவர் பிற உடைகள் அணிந்து வந்திருக்கிறார்.

பாசமான அண்ணன் கேரக்டருக்கு பாந்தமாக இருக்கும் விமலுக்கு காதல் மட்டும் காத தூரம் ஓடி விடுகிறது. அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாகக் காட்ட வேண்டும் என்கிற இயக்குனரின் விருப்பம் நியாயமானதுதான். ஆனால் எந்நேரமும் குடிபோதையில் இருக்கும் அவரால் எப்படி அப்படி பறந்து பறந்து சண்டையிட முடிகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

தன்யா ஹோப்புக்கு பேர் வாங்க ஹோப் இல்லாத வழக்கமான நாயகி வேடம். ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவர் விமலைப் பார்த்து இளக்காரமாகப் பேசுவதும் பின்னர் அவருடைய கதையைக் கேட்டு கண்கள் கலங்கி காதலிப்பதுவுமாக படு யூஷுவல் வேடம். தன்யா ஹோப்புக்கு நடிக்க ஸ்கோப்புள்ள வேடங்களைக் கொடுங்கப்பா…

மருத்துவக் கல்லூரி பேராசிரியராகவும், மாணவிகளை பெரிய மனிதர்களுக்கு சப்ளை செய்பவராகவும் வரும் வினோதினி, உண்மையில் இப்படி இரட்டை வேடமிட்ட ஒரு நிஜ கேரக்டரை நினைவுபடுத்துகிறார்.

அவரால் பாதிக்கப்படும் மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் லாவண்யா மாணிக்கத்துக்கு ரசிக்கத்தக்க முகமும், நடிப்பும்.

விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா பாதிப் படத்தில் ‘டெட் பாடி’ ஆகவே வருவது பரிதாபம். பிளாஷ்பேக்கில் அந்தக் குறையைத் தீர்த்து கலகலப்பாக வருகிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், அவ்வப்போது வந்து போஸ் கொடுத்துவிட்டு போவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 

பிற படங்களில் சின்ன கேரக்டர் என்றாலும் நம்மை சிரிக்க வைத்து விடும் இயக்குநர் ஷரவணஷக்தி, தானே இயக்கிய இந்தப் படத்தில் தனக்கென்று ஒரு உருப்படியான கேரக்டரைப் படைத்துக் கொள்ள முடியவில்லை என்பது சோகம்.

அவரது மகன் சூர்யாவுக்குக் கூட ஒரு வில்லன் கேரக்டர்தான் அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கரும்,  இசையமைப்பாளர் வி.எம்.மகாலிங்கமும் ஓகே என்ற அளவுக்கு வேலை பார்த்திருக்கிறார்கள். 

நடிகர் விஜய் சேதுபதி வசனங்களை எழுதி இருக்கிறார் என்று டைட்டில் போடுகிறார்கள். “இவனையெல்லாம் நூறு தடவை தூக்குல போடுவேன்…” என்று ஒரு வசனம் வருகிறது. ஒரு தடவை தூக்கில் போட்டாலே ஒரு மனிதன் இறந்து விடுவான் எனும் போது மீதி 99 தடவை எதற்காக தூக்கில் போட வேண்டும் என்று புரியவில்லை.

படம் முழுக்க நிலவும் லாஜிக் மீறல்களைத் தவிர்த்து இருக்கலாம். என்னதான் தங்கையின் ‘டெட் பாடி’ என்றாலும் அது வைக்கப்பட்டிருக்கும் அனாடமி அறைக்கு தினமும் வந்து போவதற்கு அவரது அண்ணனுக்கு அனுமதி இருக்கிறதா என்ன..?

தினமும் தங்கையை (டெட் பாடியைப்) பார்க்க டாண் என்று வந்து விடுவாராம் விமல். அதை பெருமையாக வேறு மருத்துவக் கல்லூரியிலேயே சொல்கிறார்கள்.

சமீபத்தில்தான் இப்படி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் ஒரு படத்தைப் பார்த்தோம்.

அந்த வகையில்…

குலசாமி – இன்னொரு பகாசூரன்..!