March 1, 2024
  • March 1, 2024
Breaking News
March 9, 2023

கொன்றால் பாவம் திரைப்பட விமர்சனம்

By 0 210 Views

விலங்குகளையோ பறவைகளையோ கொன்றால் அந்தப் பாவம் அவற்றை சமைத்துத் தின்றதுடன் முடிந்து போய்விடும் என்ற பொருளில் ஒரு சொல்லாடல் உண்டு. ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற பாவம்..?

… என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தில் இயக்குனர் தயாள் பத்மநாபன் சொல்ல வந்திருக்கும் செய்தி.

ஆங்கிலத்தில் மூலக்கதை பெறப்பட்டு கர்நாடகத்தில் மேடை நாடகமாக நூறு ஆண்டுகளாக வெற்றி பெற்ற இந்தக் கதையை முதலில் கன்னடத்துக்கும் பின்னர் தெலுங்குக்கும் இப்போது தமிழுக்குமாக  தயாள் பத்மநாபனே இயக்கி அளித்திருக்கிறார்.

சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் நடக்கும் கதை. அந்த கிராமத்து மக்கள் விவசாயக் கூலிகளாக இருக்க, ஊர் ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் சார்லி அவரது மனைவி ஈஸ்வரி ராவ் அவர்களது மகள் வரலட்சுமி ஆகிய மூவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

திருமண வயது தாண்டியும் வறுமை காரணமாக வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் இருக்க, அந்த வெறுமையிலேயே வாழ்ந்து வரும் வரலட்சுமி முன்கோபியாகவும் வன்மம் நிறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் ( சந்தோஷ் பிரதாப் ) தன் பயணத்துக்கு இடையில் அந்த வீட்டில் ஒரு நாள் தங்கிப் போக அனுமதி கேட்க, இவர்களும் ஒரு தயக்கத்திற்குப் பின் ஒத்துக் கொள்கிறார்கள்.

சந்தோஷ் பிரதாப் கொண்டு வந்த ஒரு சூட்கேஸில் அளவுக்கு அதிகமான பணமும், நகையும் இருக்க அதைக் கைப்பற்றி விட்டால் தங்கள் வறுமை ஒழிந்துவிடும் என்று கணக்குப் போடும் வரலட்சுமி, முதலில் சந்தோஷ் பிரதாப்பைக்  காம வலையில் வீழ்த்த முயன்று அதில் தோற்றுப் போய் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார்.

ஆரம்பத்தில் திடுக்கிடும் வருவின் பெற்றோரும் ஒரு கட்டத்தில் அதற்கு ஒத்துக்கொள்ள அதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பது பதை பதைப்பான கிளைமாக்ஸ்.

இதற்கிடையில் பக்கத்து ஊர் பெரிய மனிதரின் வீட்டில் பணம் மற்றும் நகை களவாடப்பட்ட செய்தியும் வர, யாரிடம் யார் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள் என்ற பரபரப்பும் பற்றிக் கொள்கிறது.

இப்படிப்பட்ட நல்ல படங்களாக நடித்தும் ஏன் சந்தோஷ் பிரதாப்பால் முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை என்பது புரியவில்லை. அருமையான உடற்கட்டு, தெளிவான வசன உச்சரிப்பு, அழகான குரல் வளம் என்று ஒரு முன்னணி ஹீரோவுக்கு உரிய எல்லாம் அவரிடம் இருக்கின்றன. அவரது விடா முயற்சி ஒன்றே அவரை மேல் நோக்கி உயர்த்தும் என்று நம்பலாம்.

ஹீரோவாக சந்தோஷ் இருந்தும் இந்தப் படத்தை முழுதாக தன் தோளில் வைத்து சுமந்து இருக்கிறார் வரலட்சுமி. விரகம் மேலிடும் பருவத்தைக் கொண்டிருந்தும் திருமணம் இன்னும் ஆகவில்லையே என்ற கோபத்தில் எல்லோரையும் அவர் வையும் காட்சிகள் திடுக்கிட வைக்கின்றன.

அது அப்பாவாக ஆனாலும் சரி, அம்மாவாகவே ஆனாலும் சரி… அவர்களது அந்தரங்கங்களை கூட சகட்டுமேனிக்கு ஒரு பிடி பிடிக்கிறார் வரு. 

அந்த வீட்டில் இருக்கும் கர்லா கட்டையை காட்டி, “இதை யார் பண்ணுவார்கள்..?” என்று சந்தோஷ் பிரதாப் கேட்க, “எங்க அப்பாதான்… ‘பண்றதுக்கு’ முன்னால பண்ணுவார்..!” என்கிறார் வரு. அதேபோல் “கல்யாணம் ஆகலை என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வியா..?” என்று கேட்கும் அம்மாவிடம், “உனக்கு என்ன, எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. இப்பவும் தினமும் நடந்துட்டு இருக்கு..!” என்று அம்மாவின் வாயை அவர் அடைக்கும் இடமும் திடுக்கிட வைக்கும் மிரட்டல்.

தன் மீது ஒரு கண் வைத்திருக்கும் கடன்காரனை முன்னால் வைத்துக் கொண்டு தங்கள் வளர்ப்பு நாயை திட்டுவது போல் அவரைத் திட்டி துரத்துவதும், அம்மாவிடம் தன் துயரம் பற்றிப் பேசும்போது, “பேசாம அந்த கடங்காரன் கூடவே ஓடிடலாம்னு இருக்கு..!” என்பதெல்லாம் வருவின் வெறுமை மற்றும் வன்ம குணத்தைக் காட்டும் காரணிகளாக இருக்கின்றன. 

இத்தனை வன்மம் உள்ள ஒரு பெண், வீட்டுக்கு வந்தவனைக் கொலை செய்ய முடிவு எடுக்கும் போது நமக்கு எந்தப் பதட்டமும் ஏற்படவில்லை என்பதே அந்த பாத்திரம் சரியாக படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான அத்தாட்சி.

வருவின் அப்பாவாக வரும் சார்லி நடிப்பைச் சொல்லியாக வேண்டும். தங்கள் சோகக் கதையை விரக்தியான சிரிப்பின் ஊடே சந்தோஷ் பிரதாப்பிடம் சொல்வதாகட்டும், சந்தோஷைக் கொல்ல வரு முடிவெடுத்ததும் அதைத் தவறு என்று சொல்ல திராணியற்று அதற்கு உடன்படும்போது அவர் காட்டும் முக பாவமாக ஆகட்டும், கடைசியில் ஒரு உண்மை தெரிந்து பதறிக்கொண்டு வீட்டுக்கு ஓடி வருவதாகட்டும் சார்லி நடிப்பில் சாதித்து இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

வருவின் அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ் இப்படி ஒரு மகளையும் இப்படி ஒரு கணவனையும் வைத்துக்கொண்டு அவர்களை எதிர்க்க தைரியமற்று இயலாமை ஒருபுறமும் பதட்டம் மற்றொரு புறமுமாக நடிப்பில் பின்னி இருக்கிறார்.

இந்த 4 பாத்திரங்களையும் ஒரே ஒரு வீட்டையும் வைத்துக்கொண்டு முழு நீளப் படத்தையும் எந்தவிதமான அலுப்பும் சலிப்பும் இன்றி நகர்த்திச் சென்று இருக்கும் இயக்குனர் தயாள் பத்மநாபனின் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

முன்பாதியில் விவரணமாகக் காய்களை நகர்த்தி விட்டு இரண்டாவது பாதையில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதற்றத்தை கிளைமாக்ஸ் வரை தெறிக்க விட்டிருக்கிறார்.

ஒரே இடத்தில் கதை நிற்கிறதே என்ற எண்ணம் நமக்கு எந்த இடத்திலும் ஏற்படவில்லை என்பதே இந்த படத்தின் வெற்றி.

அதற்கு முழு பலம் கொடுத்திருக்கிறது செழியனின் ஒளிப்பதிவு. அந்த சிறிய வீட்டில் ஒரு தடவை காட்சிப்படுத்திய கோணம் மறுமுறை வந்துவிட்டால் சலித்துவிடும் என்பதால் எத்தனை கோணங்கள் வைக்க முடியுமோ அத்தனை கோணத்திலும் அந்த வீட்டை சுற்றிச் சுற்றிப் படமாக்கி இருக்கிறார். 

சமீபகாலமாக தன் பின்னணி இசையால் மிரட்டிக் கொண்டிருக்கும் சாம் சி.எஸ் இந்த மிரட்டல் படத்துக்கு இசையமைத்து இருப்பது பொருத்தமே. நம் பதட்டத்தை மேலும் பல மடங்கு கூட்டுகிறது இவரது பின்னணி இசை.

துணைப் பாத்திரங்களாக வரும் புல்லாங்குழல் வியாபாரி சென்றாயன், மதுக்கடை உரிமையாளர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் பதட்டமான படத்தின் வேகத்துக்கு உதவும் ஊக்கிகள் ஆக இருக்கிறார்கள்.

படத்தின் வசனங்கள் ஆகப்பெரிய பலம். கதைக்காக வசனங்கள் எழுதப்பட்டனவா அல்லது இந்த வசனங்களுக்காக கதையை உருவாக்கினார்களா என்கிற அளவிற்கு அவை பெருந்துணை புரிகின்றன.

பிரசவம் பார்க்கும் போது தொப்புள்கொடி அறுக்க பயன்படுத்தும் ஒரு கத்தியை சென்டிமென்ட் குறியீடாக பயன்படுத்தி இருப்பதும் சிறந்த இயக்க முத்திரை.

கொன்றால் பாவம் – வென்றால்தான் ஆச்சு..!

– வேணுஜி