December 12, 2024
  • December 12, 2024
Breaking News
March 11, 2023

அகிலன் திரைப்பட விமர்சனம்

By 0 695 Views

மக்கள் இயக்குனராக இருந்து மறக்க இயலாத மாபெரும் படங்களைத் தந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் பள்ளியிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் ஒன்றே போதும் இந்தப் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் திறமையைப் புரிந்து கொள்வதற்கு.

ஏற்கனவே பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க ஆக்சன் பாதையில் பயணிக்க வைத்திருந்த கல்யாண், இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு முரட்டு முகத்தைக் காட்ட வைத்திருக்கிறார்.

இத்தனை முரட்டுத்தனமான ஜெயம் ரவியை இதற்கு நாம் பார்த்ததில்லை. யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்யும் அளவுக்கு மனதும், முகமும் இறுகிப்போன வேடத்தில் அகிலன் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி இதில் கப்பல் கடத்தலில் கில்லாடியாக வருகிறார்.

கடல் கடத்தலில் ராஜாவாக விளங்கும் தருண் அரோராவின் கீழ் சில குட்டி தாதாக்கள் இருக்க அவர்களில் ஒருவர்தான் ஹரிஷ் பெராடி. அவரது கையாளாக வரும் ஜெயம் ரவிக்கு துறைமுக கடத்தலில் அதிகாரிகளை எப்படி சமாளிப்பது, வேண்டாதவர்களை எப்படிப் போட்டுத் தள்ளுவது, எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி எப்படிக் கடத்தலை திட்டமிட்டு வெற்றி பெறச் செய்வது என்று அத்தனை விஷயங்களும் அத்துப்படி.

ஆனாலும் அவர் ஹரிஷ் பெராடிக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றால் இல்லை – அவருக்கு மட்டுமல்ல உடன் இருக்கும் யாருக்குமே அவர் விசுவாசமானவராக இல்லை. அவரது ஒரே சாஃப்ட் கார்னராக வருகிறார் நாயகி ப்ரியா பவானி சங்கர். அவர் அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அவரையும் தனது கடத்தல் தொழிலுக்கு உளவு பார்க்கவே உருவாக்கி இருக்கிறார் ரவி என்பது புலனாகிறது. கையாளாக இருந்த இடத்திலிருந்து எப்படி மேலே மேலே உயர்ந்து சமுத்திர ராஜாவாகிறார் ரவி என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

எதற்கு அப்படி ராஜாவாக வேண்டும் என்கிற காரணம்தான் படத்தின் அடி நாதம்.

திரட்டு உடம்பும், முரட்டுப் பார்வையும் ஜெயம் ரவியின் கரியரில் புத்தம் புது ஐட்டம். அந்தக் கல்லுக்குள் காதல் அளவில் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஃப்ளாஷ் பேக்கில் வரும் இன்னொரு முகம் இதற்கு நேர் எதிராக இருப்பதும் நடிப்பின் வேறு பரிமாணத்தை காட்டவைக்கும் உத்தி என்பதைப் புரிந்து அற்புதமாக நடித்திருக்கிறார் ரவி.

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு அவருக்கு வாய்த்திருக்கும் அற்புத வேடம் இது.

குண்டர்களைப் புரட்டி எடுக்கும் இன்ஸ்பெக்டர் பிரியா பவானி சங்கர், “அந்த அகிலன தூக்கிட்டு வாங்க..!” என்று காவலர்களுக்கு ஆர்டர் போட்டு அதன் விளைவாக அகிலனை காவல் நிலையத்துக்குள் தள்ளி வரும் போலீஸ்காரர்கள், இன்ஸ்பெக்டர் அறைக்குள் அவரை உள்ளே தள்ளி கதவை சாத்துவதும், உள்ளே ரவியை பிரியா கும்முவார் என்று எதிர்பார்த்தால், அங்கே நாம் எதிர்பாராத ஆச்சரியமாக பிரியா பவானி சங்கரை ரவி கட்டிப்பிடித்து காதல் புரிவதும் கூட காட்சி அமைப்பில் புது ஐட்டம் தான்.

ஆனால் இந்தக் காதலுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க முடியாததாலோ என்னவோ பல காட்சிகளில் லாஜிக்கைப் புறந்தள்ளிவிட்டு ஜெயம் ரவியுடன் ஏதேதோ வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் பிரியா.

இன்னொரு நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரனுக்கும் சொல்லிக் கொள்ளும்படி பெரிய வேலை இல்லை.

போலீஸ் துறையில் ரவிக்கு வில்லனாக வரும் நல்ல காவல் அதிகாரி சிராக் ஜானியும் இன்னொரு நாயகன் போல் இருக்கிறார். அவரது நடிப்பும் பரபரப்பானது.

படம் முழுவதும் ஆறடிக்குக் குறைவில்லாத முரட்டு உடம்புக்காரர்கள் வளைய வரும் இந்த படம், இதுவரை நாம் அறிந்திடாத கடல் பிரதேச காட்சிகள் மற்றும் துறைமுகத்தின் பார்த்திராத நடைமுறைகள் அளவிலும் மிரட்டுகிறது.

அத்தனை பிரம்மாண்டமான சரக்கு கப்பல்கள், அவற்றில் கண்டெய்னர்களை ஏற்றும் உத்திகள், அவற்றுக்கான நடைமுறைகள், நீள நீளமான கண்டைனர் லாரிகள், அவை சாரி சாரியாக துறைமுகத்துக்குள் வருவதும் போவதுமான விவரணம் என்று ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவில் காட்சிகளை எடுத்திருக்கும் கல்யாண கிருஷ்ணனை தாராளமாக ஹாலிவுட் தத்து எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு ஒத்திசைவாக வேலை பார்த்திருக்கும் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷத்தையும் அவர் உடன் அழைத்துச் செல்லலாம். மார்வலஸ்..!

தனக்கு துரோகம் இழைத்த காரணத்துக்காக ஜெயம் ரவியை மண்டி போட வைத்து ஹரிஷ் பெராடி அடிப்பதும், அந்த ஒரே காட்சியிலேயே ஹரிஷ் பெராடியை பின்னுக்குத் தள்ளி அவருக்கு மேலே இருக்கும் சமுத்திரராஜா தருண் அரோராவிடம் ஜெயம் ரவி டீல் பேசி ஒரு அசைன்மென்ட் பெறும் காட்சி அசர வைக்கிறது.

துறைமுகத்தில் ஜெயம் ரவி திட்டமிட்டு ஏற்படுத்தும் கன்டெய்னர்களின் டிராபிக் ஜாம் காட்சியும் மலைக்க வைக்கிறது. இப்படி காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக லைவ் லொகேஷனில் இப்படி ஒரு படத்தைத் தமிழில் சமீபத்தில் பார்க்கவில்லை.

முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்ந்தாலும் என்ன காரணத்துக்காக ஜெயம் ரவி இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என்ற கேள்விக்கு விடை இல்லாமல் போகிறது. 

இரண்டாம் பாதியில் அதற்குக் காரணத்தை வலுவாக வைத்திருந்தாலும் இதன் ஒரு முன்னோட்டத்தையாவது முன்பாதியில் ஓட்டி இருந்தால் நாம் படத்துடன் ஐக்கியமாக முடிந்திருக்கும்.

இருந்தாலும் படம் முழுவதும் திரையில் இருந்து கண்களை அப்படி இப்படி நகர விடாமல் நம்மைக் கட்டிப்போட்டு கடல் மற்றும் கடல் சார்ந்த இன்னொரு அனுபவத்தை நமக்குப் புரிய வைத்திருக்கும் விதத்தில் தமிழில் ‘பெஞ்ச் மார்க்’காகி இருக்கிறது இந்தப் படம்.

கப்பலோட்டிய அகிலன்..!

– வேணுஜி