May 5, 2024
  • May 5, 2024
Breaking News
July 4, 2023

கொலை படத்தின் கதையை 40 முறை மாற்றி எழுதினேன் – இயக்குனர் பாலாஜி கே.குமார்

By 0 323 Views

‘விடியும் முன்’ என்ற ஒரு மர்டர் மிஸ்டரி படத்தை ஆங்கிலப் படத்துக்கு இணையாக உருவாக்கியிருந்த இயக்குனர் பாலாஜி கே.குமார் இப்போது ‘கொலை’ என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்து இந்த மாதம் 21ஆம் தேதி தியேட்டருக்கு வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், கமல் போரா, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சங்கருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பாலாஜி குமார்.

“சிறிய வயதில் இருந்தே மர்டர் மிஸ்டரி படங்கள் மேல் எனக்கு அதீதக் காதல் உண்டு. அப்படித்தான் இந்தக் கதையையும் எழுத ஆரம்பித்தேன். 1920 களில் ஒரு நடிகை கொலை செய்யப்பட, அந்த கொலை பற்றிய பின்னணி துலங்காமல் கடைசி வரை மர்மமாகவே இருந்தது.

பல பெரிய எழுத்தாளர்களும் அந்தக் கொலை எப்படி நடந்து இருக்கும் என்பதை நிருபிக்க அவரவர்கள் வழியில் நிறைய கதைகளை எழுதி இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு நான் அது பற்றிய ஒரு புனைவை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அப்படித்தான் இந்த கதையை எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 முறை இதற்கான டிராப்டை மாற்றி மாற்றி எழுதினேன். தூங்கும் போது… சாப்பிடும் போது… வேறு செயல்களைச் செய்யும்போது என்று சதா இந்தக் கதையின் நினைவாகவே இருந்த போது சட்டென்று ஒரு ஐடியா உதிக்க அதை மும்முரமாக எழுதத் தொடங்கி, இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினேன்.

வழக்கமாக ஒரு கொலை, அதை துப்பறியும் போது நேரும் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள், கடைசியில் ஹீரோ, கொலை செய்தவனையும் அதற்கான காரணத்தையும் சரியாகக் கண்டுபிடிப்பது என்றுதான் இந்த ஜேனரில் படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படம் அதிலிருந்து சற்று மாறுபட்டதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.

கதையை எழுதி முடித்தவுடன் யாரிடம் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நண்பர் ஒருவர் விஜய் ஆண்டனியைச் சந்தித்து இந்தக் கதையை சொல்லச் சொன்னார்.

 

வித்தியாசமான கதைகளையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றவே அவரிடம் கதை சொல்லச் சென்றேன். படம் இரண்டு மணி நேரம்தான் என்றாலும் இது பல லேயர்களைக் கொண்டது. ஒவ்வொன்றையும் சரியாகப் புரிய வைத்தால்தான் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவில் நான்கரை மணி நேரம் அவரிடம் கதை சொன்னேன்.

அவர் கேட்க ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே இந்தக் கதை பற்றிப் புரிந்து கொண்டதால் நான்கரை மணி நேரத்தில் கதையை முடிக்க முடிந்தது. கதையைக் கேட்டு திருப்தியான அவர்தான் இன்ஃபினிட்டி தயாரிப்பு நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரிக்க சரியான நிறுவனம் என்று முடிவு எடுத்தார்.

அவர் சொன்னதைப் போலவே இன்ஃபினிட்டி ஃபிலிம் அட்வென்ச்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டார்கள். பத்து வருடங்களாக என்னை நம்பி என்னுடன் தொடர் பிலேயே இருக்கும் என்னுடைய தொழில்நுட்ப டீமை அப்படியே பயன்படுத்திக்கொள்ள நான் அவர்களிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லவில்லை அதேபோல் இந்த படத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுத்தார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக மிகவும் இந்தப் படத்தை நேர்த்தியாகக் கொடுத்தால் மட்டுமே இந்தக் கதைக்கான முழு நியாயமும் கிடைக்கும் என்பதால் அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம்..!” என்றவரிடம் “விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தில் சால்ட் பெப்பர் லுக் கொடுத்தது ஏன்..?” என்று கேட்டபோது,

படத்தில் அவர் டிடெக்டிவாக வருகிறார். அந்தத் துறையில் மிகுந்த அனுபவசாலியாக வரும் அவர் நாற்றபதுக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்தவர் என்கிற அளவில் அந்த சீனியாரிட்டியைக் காட்ட அப்படி ஒரு கெட்டப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அவர் ஏற்ற வேடங்களிலேயே இது மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்கும்..!” என்றார் பாலாஜி.

விஜய் ஆண்டனியுடன் ‘கொலை’ படத்தில் மீனாட்சி செளத்ரி, ரித்திகா சிங், சித்தார்த் சங்கர் பிரதான வேடமேற்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, லலிதா தனஞ்செயன், ஆர்.வி.எஸ்.அசோக் குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார்.எஸ், சித்தார்த் சங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்தில் செல்வா ஆர்.கே படத்தொகுப்பை கவனிக்க, சுகுமார் நல்லகொண்டா ஒலி வடிவமைப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, “இந்தப் படத்தில் சிஜி காட்சிகளை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவில் பாலாஜி குமார் மிகச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். அதற்காக நிறைய நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். எப்போது படத்தை முடித்துக் கொடுப்பீர்கள் என்று நாங்கள் கேட்டபோதெல்லாம் அவர் அதுவரை சிஜி செய்யப்பட்ட காட்சிகளை எங்களுக்கு திரையிட்டுக் காண்பிப்பார்.

அவர் எடுத்த போது இயல்பாக இருந்த காட்சிகள் சிஜி செய்யப்பட்டவுடன் வேறு விதமாக பிரமிக்க வைத்தது. அதைப் பார்த்தவுடன் அதில் நாங்கள் மெய் மறந்து விடுவோம். இன்னும் கேட்டால் சிஜி பற்றி இதுவரை எங்களுக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் அவரிடம் கற்றுக் கொண்டோம்.

கொலை படம் சிறப்பாக வருவதற்காக அவர் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளும் போது, நாங்களும் அவரைத் தொந்தரவு செய்யாமல், “எப்போது முடித்துக் கொடுக்கிறீர்களோ அப்போது முடித்துக் கொடுங்கள்…” என்று அவர் மேல் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தோம். எதிர்பார்த்ததைப் போலவே படம் அருமையாக வந்திருக்கிறது…” என்றவர், “இந்தப் படத்தில்தான் மீனாட்சி சவுத்ரி முதலில் அறிமுகமானார். ஆனால் இப்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக பிஸியாகிவிட்டார்..!” என்றார்.

மீனாட்சி சவுத்ரியை பற்றிய பேச்சு திரும்பியதும், “நடை உடை என்று தொழில் ரீதியாக மாடலாக இருப்பவரால் மட்டுமே அந்தப் பாத்திரத்தில் பரிமளிக்க முடியும் என்பதால் நிறைய மாடல்களை வரவழைத்துப் பார்த்தோம். ஆனால் இந்தக் கேரக்டரின் படி அந்த முகம் நமக்கு அடுத்து வீட்டு பெண் போல் இருக்க வேண்டும் என்பதாலும் மீனாட்சி சவுத்ரி அதற்கு பொருத்தமாக இருந்தார்..!” என்ற இயக்குனர் பாலாஜி, “ரித்திகா சிங்கும் ஒரு டிடெக்டிவாக வருகிறார். அவருக்கு வழிகாட்டும் அனுபவஸ்தராகதான் விஜய் ஆண்டனி கதைக்குள் வருகிறார்.

விஜய் ஆண்டனியால் சினிமாவுக்குள் வந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சித்தார்த்தை பார்த்ததும் அவரும் இந்தப் படத்துக்குள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரையும் நடிக்க வைத்தேன்..!” என்றார்.

இறுதியாக தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பை பற்றி பேசிய பாலாஜி குமார்,

“படத்துக்காக ஒரு வீட்டின் செட் போட்டோம். அந்த செட்டுக்குள் படத்தின் பல காட்சிகளை எடுக்க வேண்டி வந்ததால் காலை, மதியம், மாலை, இரவு என்றெல்லாம் வெளிச்சம் மாறி மாறி வர வேண்டும் என்று அதற்கான லைட்டிங் செய்ய ஆறு ஜெனரேட்டர்களைக் கேட்டோம். தயங்காமல் செய்து கொடுத்த தயாரிப்பாளர்கள், சில வினாடிகள் வரும் ஒரு காட்சிக்காக ஓரிடத்தில் ஒரு சாலையையே அமைத்துக் கொடுத்தார்கள்..!” என்றார்.

ஆக, இவர் கோடு போட்டதில் தயாரிப்பாளர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள். இப்படி தயாரிப்பாளர்கள் கிடைத்தால் எதையும் சாதிக்கலாம்தான்..!