December 2, 2024
  • December 2, 2024
Breaking News
July 21, 2023

கொலை திரைப்பட விமர்சனம்

By 0 382 Views

காட்சி வடிவமான சினிமாவில் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு கதையைக் கொலை செய்பவர்களுக்கு மத்தியில் ஒரு கொலையைப் பற்றிய கதையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி அளித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார்.

முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பித்து விடும் விதம் அருமை. 

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி சென்னையில் வந்து தங்கி இருக்கும் போது கொலை செய்யப்படுகிறார். ஏன், எதற்கு என்று புலனாய்வு செய்ய காவல் அதிகாரி ரித்திகா சிங்கை களம் இறக்குகிறது போலீஸ். அவர் திறமையான அதிகாரியாக இருந்தாலும் அவரது அனுபவக் குறைவினால் அதை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழ அனுபவத்தில் மூத்தவரான விஜய் ஆண்டனியை உதவக் கேட்கிறார்கள்.

சொந்த வாழ்க்கை சோகம் காரணமாக பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கும் துப்பறிவாளரான விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் இந்த வழக்கில் ஆர்வம் கொண்டு உள்ளே வர எப்படி இந்தக் கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பது கதை.

இதுவரை பெயரில் இருந்து விஜய்யைத் தன் ரோல் மாடல் போல் வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தில் இலகுவாக அஜித்தின் இமேஜுக்கு மாறத் ‘தல’ சாய்த்து இருப்பது புரிகிறது.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து அஜித்தின் ஃபேவரிட் ஆன விநாயக் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பது வரை விஜய் ஆண்டனிக்கு இது அல்டிமேட் அவதாரம். சால்ட்  அன்ட் பெப்பர் லுக் விஜய் ஆண்டனிக்கு அருமையாகப் பொருந்தி இருப்பதும் ஒரு பிளஸ் பாயிண்ட்.

ஆனால் சொந்த வாழ்க்கை சோகத்தை தாங்கிக்கொண்டு அவர் எல்லா காட்சிகளிலும் இயல்புக்கு முரணான மெதுவான வேகத்தில் செயல்படுவது மட்டும் இடிக்கிறது.

விஜய் ஆண்டனியே மொத்தக் கதையைத் தாங்கி நின்றாலும் கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் தன் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் ரித்திகா சிங். ஆண் தன்மையுடன் கூடிய அவரது நடை, காவல் அதிகாரியான அவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.

மாடல் அழகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, அளவெடுத்து ஆர்டர் கொடுத்த சிலை போலக் கச்சிதமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் மாடல் உலகின் மாபியா போல் செயல்படும் ராதிகா, “உன் உடலில் 50 கிராம் ஏறினாலும் உன்னைத் தூக்கி எறிந்து விடுவேன்..!” என்று எச்சரிக்கும் அளவுக்கு பர்ஃபெக்ட் ஃபிட்டில் இருக்கிறார் மீனாட்சி.

அவர் புன்னகையும் நடிப்பும் கூட வெகுவாகக் கவர்கிறது.

மீனாட்சியின் காதலராக வரும் சித்தார்த் சங்கரின் தோற்றப்பொலிவு, ஹாலிவுட் நடிகர் போன்று உணரச் செய்கிறது.

மற்றும் முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருந்தாலும் ஜான் விஜய்யின் செயற்கையான நடிப்பு அலுப்பைத் தருகிறது. யாரையும் மதிக்காமல் நடக்கும் அவர் போலீசா, பொறுக்கியா என்றே தெரியவில்லை. ஓரிரு காட்சிகளில் ‘தோன்ற ‘ ராதிகா என்ற அற்புத நடிகை எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.

படத்தின் மாபெரும் பலம் படத்தின் அசாத்திய நேர்த்திதான். படம் தொடங்கிய வினாடி முதல் நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப் படம் தானா என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் காட்சிகளும் அதற்கேற்ற பின்னணி இசையும், ஒலி அமைப்பும் மந்திரத்தால் நம்மைக் கட்டிப் போட்டது போல் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், ஒவ்வொரு பிரேமையும், பிரேம் போட்டு மாட்டிய பொக்கிஷப் படங்கள் போல் இயல்புக்கு மீறிய அழகுடன் படம் பிடித்திருக்கிறார். எது செட், எது நிஜம், எது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத அசாத்தியம் இந்த படத்தில் சாத்தியம் ஆகி இருக்கிறது.

நாம் பல நூறு தடவை கேட்ட ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்வது ஒரு விஷப்பரீட்சை என்றிருக்க, அப்படி நம் நினைவில் பதிந்து விட்ட ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலை மூலத்தின் ஜீவன் குறையாமல் அதே நேரத்தில் இன்றைய ட்ரெண்டுக்கு ரீமிக்ஸ் செய்திருக்கும் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் திறமையும் ரசிக்க வைக்கிறது. (ஆனால் ஏன் அந்தப் பாடலை பாதியோடு நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை…)

பின்னணி இசையிலும் தமிழ்ப் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற ‘மெய்’ மறக்க செய்திருக்கிறது இசை. கிரிஷ்ஷின் இசைத்திறனுக்கும் நமது செவித்திறனுக்கும் சரியான போட்டிதான்.

இவ்வளவு நேர்த்தியான படத்தைக் கொடுத்திருந்தும் திரைக்கதையில் மீறப்படும் லாஜிக்குகள் சற்றே அயர்ச்சியை அங்கங்கே ஏற்படுத்துகின்றன. 

சென்னையில் இருக்கும் அல்ட்ரா மாடர்ன் அபார்ட்மெண்டில் லைலா வசிக்கும் அந்த வீட்டுக்குள் இருந்து கத்துவது, பேசுவது எல்லாம் மூடப்பட்ட கதவுக்கு வெளியே கேட்கிறது என்பதெல்லாம் நம்புவதற்கு இல்லை. அதேபோல் அவசர வழிக் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் அலாரம் எல்லாம் எப்போதோ வழக்கொழிந்து போன அவுட் ஆஃப் ட்ரெண்ட். அதில் ஐஸ் கட்டியை செருகி வைப்பதெல்லாம் ஹைதர் கால கற்பனை.

அந்தக் கதவைத் திறந்தால் ரோடுதான் என்றிருக்க, அதில் ஒரு சேப்டி கேட்டோ, ஒரு சர்வைலன்ஸ் கேமராவோ கூட இலையாம்.

அத்தனை ஃபிளாட்டுகள் கொண்ட அந்த குடியிருப்பில் மீனாட்சி வாழ்ந்த ஒரே ஒரு ஃபிளாட் மட்டுமே இருப்பது போன்ற பிரமை. 

உண்மையில் குற்றமற்றவரான முரளி சர்மா தன் உயிரை மாய்த்துக் கொள்வதில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை. விஜய் ஆண்டனியின் சொந்த வாழ்க்கை சோகம் படத்தின் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பை ஏற்படுத்தவில்லை. அதேபோல் பயங்கரமான ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிப்பதைப் போல் ஒரு போலீஸ் படையே கையில் துப்பாக்கிகளுடன் போய் ஒரு சாதாரண நிராயுதபாணி இளைஞனைக் கைது செய்வது தேவையில்லாத ட்ராமா.

செய் நேர்த்தியில் ஆங்கிலப் படங்களுக்கு சவால் விட்டிருக்கும் பாலாஜி குமார் திரைக்கதை நேர்த்தியிலும், லாஜிக்குகளிலும் அதே பாணியைக் கையாண்டு இருந்தால் கொண்டாடப்படும் படமாக ‘கொலை’ வந்திருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இருந்தாலும் ‘உயிரைக் கொடுத்து’ உழைத்திருக்கும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டலாம்…

அழகுடன் ஒரு ‘கொலை’ செய்திருப்பதில்..!

– வேணுஜி