August 31, 2025
  • August 31, 2025
Breaking News
May 9, 2025

கீனோ திரைப்பட விமர்சனம்

By 0 133 Views

கந்தர்வா என்ற பதின் பருவத்தைத் தொட்ட சிறுவன்தான் கதை நாயகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகாதாரா பகவத் அவனுக்குத் தந்தையாகவும், வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிடும் ரேணு சதீஷ் தாயாகவும் வருகிறார்கள்.

ஆக, அடிக்கடி தனிமைப்பட்டுவிடும் சாத்தியம் கந்தர்வாவுக்கு வாய்க்கிறது அதிலும் அவர் தனிமையில் இருக்கும் நேரங்களில் இருட்டில் கீனோ என்ற உருவம் அவர் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. 

கந்தர்வாவை அழைப்பதும், தன்னை அணைத்துக் கொள்ளச் சொல்வதுமாக அந்த உருவம் தொடர்ந்து நச்சரிக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் அச்சம் கொள்கிறார் கந்தர்வா.

இந்த லைனைக் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது..? ஏதோ ஒரு ஆவியோ அமானுஷ்யமோ அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத்தானே..? அதைக் கேள்விப்படும் அவரது தந்தை பகவத்தும் அப்படித்தான் புரிந்து கொள்கிறார்.

அதை விரட்ட ஆவி உலக வழியில் சென்று பார்த்தால அப்படி எந்த ஆவியும் கந்தர்வாவைத் தொந்தரவு செய்யவில்லை என்கிற உண்மை அவருக்குத் தெரிய வர, அப்படியானால் அந்த கீனோதான் யார் என்பதுதான் சுவாரஸ்யமான கதை. 

கேட்பதற்கு ஹாரர் படம் போல் தோன்றினாலும் இது முழுக்க முழுக்க உளவியல் திரில்லர் வகையிலான படம்.

குழந்தைகளுக்கான படங்கள் மற்றும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றவர்களுக்குப் பாடம் சொல்லும் படங்கள் அரிதாகவே தமிழில் வருகின்றன. 

அந்த வகையில் இப்படி ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து ஒரு படத்தை… பாடமாகத் தந்திருக்கும் இயக்குனர் திவாகரை பாராட்டலாம். 

இப்படி ஒரு விஷயத்தைத் தொட்டதில்  மட்டுமல்லாமல் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இத்யாதிகள் மட்டுமல்லாமல் பாடல் வரிகள் மற்றும் இசையையும் இவரே மேற்கொண்டிருப்பது நிச்சயமாக ‘தில்’ தான்..!

என்ன ஒன்று… திரைக்கதையை இன்னும் புரியும் அளவில் சுவாரஸ்யம் சேர்த்துத் தந்திருந்தால் படம் வெகுவாக மக்களைச் சென்று சேர்ந்திருக்கும். 

படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் கந்தர்வா மட்டுமல்லாமல் படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களுமே இயல்பாக நடித்திருப்பதுதான். அதற்கும் இயக்குனரை தான் பாராட்டியாக வேண்டும்.

ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவும் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது.

படத்தைத் தொய்வில்லாமல் தொகுத்திருக்கும் கிருத்திகா காந்திதான் தயாரிப்பாளர் என்பதும் சிறப்பு..!

பட்ஜெட்டில் ஒரு மசாலா அரைத்தோமா… பணத்தைப் பார்த்தோமா என்று இல்லாமல் சமுதாயத்துக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற இவர்களது முயற்சி பாஸ் மார்க்கைத் தாண்டிய மதிப்பெண் பெற்று இருக்கிறது.

கீனோ –  பெற்றோருக்குப்  பாடம்..!

– வேணுஜி