வேலைக்காக வெளிநாட்டில் சென்று வாழ்பவர்களைப் பார்த்து, “அவர்களுக்கு என்ன..? டாலர்களில் சம்பாதித்து மேட்டிமை வாழ்வை ருசிப்பவர்கள்.!” என்று சொல்லப்படுவது உண்டு.
ஆனால் அங்கு இருக்கும் எல்லோருமே அப்படி சுகபோகத்தில் திளைப்பதில்லை – அங்கு வாழவும் வாழ்க்கை வசதிகளைப் பெறவும் எத்தனை துன்பங்களை சந்திக்க நேர்கிறது என்பதை ஒரு சில தமிழ்க் கதாபாத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் மோகன்ராஜ் விஜே.
முழுக்க ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களை முன்வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.
அங்கு தன் மனைவி மிமி லியோனார்டுடன் வசிக்கும் யுகேந்திரன் வாசுதேவன் அங்கு தங்களுக்கு ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார். அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு அந்த வீட்டைக் கட்ட கடன் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
இதற்காக இரவும் பகலுமாக, கணவனும் மனைவியும் சேர்ந்து உழைக்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு வீடு கட்ட கடன் கிடைக்காமல் போக அங்கேயும் உலவும், நல்லவன் போர்வையில் இருக்கும் ஏமாற்றுக்காரன் ஒருவன் இருக்கும் பணத்தையும் அபகரித்து விட, அவர்கள் கனவு என்னவாகிறது என்பது கதையின் ஒரு இழை.
இன்னொரு இழையில் நித்யா பாலசுப்பிரமணியனைக் காதலிக்கும் சித்தார்த் அன்பரசுவுக்கு குடியுரிமை (பிஆர்) பெறுவதற்காக கட்டணத்தைக் கட்டுவதில் பெரும் நெருக்கடி இருக்கிறது. அதைப் பெற முடியாவிட்டால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதுடன் ஊரில் இருக்கும் தங்கள் பூர்வீக வீடடை மீட்கவும், காதலியைக் கரம் பிடிக்கவும் பிஆர் பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் அதை அவரால் நிறைவேற்ற முடிந்ததா என்று இன்னொரு கதையையும் சொல்கிறார் இயக்குனர்.
இரண்டு இழைகளையும் பின்னி ஒரு திரைக்கதை நூலாகத் தொடுத்திருக்கிறார் அவர்.
ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இயல்பு மாறாமல் எடுத்துக் காட்டியிருக்கும் இயக்குனரைப் பாராட்டலாம்.
குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த யுகேந்திரன் அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழ் பெண் மிமியைக் கரம் பிடித்து வாழ்வதில் அவர்களின் வாழ்க்கை முறைகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். குறிப்பாக அவர்களின் உரையாடல் முக்கிய கவனம் பெறுகிறது.
அத்துடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சித்தார்த் அன்பரசவுக்கு அவருடன் பணிபுரியும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அஸ்வின் விஸ்வநாதனால் எத்தனை நெருக்கடி ஏற்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கடல் கடந்து சென்றாலும் தமிழர்களிடையே நிலவும் இந்த இன பேதம் ஒழிக்க முடியாதது என்பதை வலியுறுத்திச் சொல்லி இருக்கும் அவர் அதற்கான முடிவையும் சித்தார்த் எப்படி எடுக்கிறார் என்பதையும் அதிரடியாக சொல்லியிருக்கிறார்.
அது அறம் தவறிய வழியில் இருந்தாலும் அந்தக் குற்றம் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாகாமல் சித்தார்த்தின் மனசாட்சியை உறுத்துவதாக முடித்திருப்பது நன்று.
நீண்ட இடைவெளிக்கு பின் யுகேந்திரன் வாசுதேவன் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார். அவரது நடிப்புடன் உடலும் எடை கூடித் தெரிகிறது. அவரது மனைவியாக வரும் மிமி கருப்பழகியாகக் கவனம் ஈர்க்கிறார். யுகேந்திரன் உடைந்து போகும் சமயங்களில் எல்லாம் அவருக்கு உறுதுணையாக மிமி நிற்பது பாராட்டக் கூடியது.
சித்தார்த் அன்பரசு – வித்யா பாலசுப்பிரமணியம் ஜோடியும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அஸ்வின் விஸ்வநாதனின் நரித் தந்திரமும் அதுவே அவருக்கு எப்படி வினையாகிப் போகிறது என்பதுவும் கூட பொருத்தமான கற்பனை.
ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழனே யுகேந்திரனை ஏமாற்றினாலும் ஆஸ்திரேலியர்கள் இருவர் சேர்ந்து அவர் கனவை நினைவாக்குவது இருக்கும் இடத்துக்கு இயக்குனர் செலுத்தும் நன்றியாகத் தெரிகிறது.
வழக்கமான படங்களின் சினிமா சுவாரசியம் குறைவாக இருந்தாலும் இயல்பான கதையோட்டம் ரசிக்கவே செய்கிறது.
ஹெல்வின் கே எஸ் மற்றும் சஞ்சய் அரக்கலின் இசை படத்துக்குப் பொருத்தமாக ஒலிக்கிறது. வசந்த் கங்காதரனின் ஒளிப்பதிவும் படத்தின் நேர்த்தியைக் கூட்டி இருக்கிறது.
மோகன்ராஜ் விஜே வின் கதையிலும் இயக்கத்திலும் குறை ஒன்றும் இல்லை.
காழ் – வாழ் – த்தலாம்..!
– வேணுஜி