சென்னை, காவேரி மருத்துவமனையில் வயது முதிர்ந்த மூதாட்டிக்கு உலகின் முதல் புரட்சிகர டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்றுசிகிச்சை..!
கடுமையாக கால்சியம் படிந்த இதய ஈரிதழ் வால்வு பிரச்சனைக்கு புதுமையான டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை உத்தி: வேறு பாதுகாப்பான சிகிச்சை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை!
சென்னை, அக்டோபர் 6, 2025 – அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் எனப் பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட 83 வயது மூதாட்டிக்கு, மார்பைத் திறக்காமல், தொடைசிரை வழியாகவே இதய வால்வை மாற்றி (TMVR), சென்னையின் காவேரி மருத்துவமனை ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை, மருத்துவ உலகில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்த மூதாட்டிக்கு பல இணைநோய்கள் இருந்தன. கடுமையான ‘மைட்ரல் ஆனுலர் கால்சிஃபிகேஷன்’ (MAC) பாதிப்பால் அவரது இதய வால்வு செயலிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். ஏற்கனவே இருமுறை புற்றுநோய்க்காக கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்ததால், திறந்த இதய அறுவை சிகிச்சை என்பது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறிவிட்டனர். இதனால், சிகிச்சைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் இந்த மூதாட்டி இருந்தார்.
கடுமையான கால்சியம் படிந்த இதய ஈரிதழ் வால்வு (MAC) என்பது, நமது இதயத்தில் உள்ள மைட்ரல் (ஈரிதழ்) வால்வு, திறந்து மூடும் ஒரு கதவு போன்று இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், MAC பாதிப்பில், இந்தக் கதவின் சட்டம் பாறை போல இறுகி, சுண்ணாம்பு பூசி அடைத்தது போல் ஆகிவிடுகிறது. இதனால் மூச்சுத்திணறல், கடும் சோர்வு, இதய செயலிழப்பு என நோயாளிகள் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பாறை போன்று இறுகிய இந்தப் பகுதியில் புதிய வால்வைப் பொருத்துவது என்பது, உடைந்த சுவரில் கதவை மாட்டுவது போன்றது; அது விரிசல், இரத்தக் கசிவு மற்றும் புதிய வால்வின் செயலிழப்பு என ஆபத்தில் முடியலாம்; இதனாலேயே கதீட்டர் அடிப்படையிலான வழக்கமான அறுவை சிகிச்சைகள் இத்தகைய பாதிப்புள்ள நபர்களுக்கு பாதுகாப்பாற்றதாக கருதப்படுகின்றன.
காவேரி மருத்துவமனையின் டிரான்ஸ்கதீட்டர் இதய வால்வு சிகிச்சைகள் மையத்தின் இயக்குனர் டாக்டர் அனந்தராமன் கூறியதாவது: “உலகளவில் இந்த வகையினத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சிகிச்சை என்ற பெருமையை இது பெறுகிறது. உலகெங்கிலும் இதே போன்ற அதிக ஆபத்துள்ள எண்ணற்ற நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது”.
முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர். சி. சுந்தர், முதுநிலை இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். அருண்குமார் கிருஷ்ணசாமி மற்றும் ஒட்டுமொத்த பிற பணியாளர்களை உள்ளடக்கிய இதய சிகிச்சைக் குழு உறுப்பினர்களுக்கு இந்த வெற்றிகர சாதனைக்காக தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
“இந்தச் சவால்களை எதிர்கொள்ள முதன்முறையாக ஒரு டிரான்ஸ்-கதீட்டர் உத்தியை நாங்கள் உருவாக்கினோம். ஒரு சிறப்பு வெளிப்புற உறை கொண்ட செயற்கை வால்வைத் தயாரித்த நாங்கள், அதை மிகத் துல்லியமாக, மார்பைத் திறக்காமல், தொடை சிரை வழியாகவே செலுத்தி, பாறை போன்று இறுகிய அந்தப் பகுதியில் கசிவு ஏற்படாதவாறு பாதுகாப்பாகப் பொருத்தினோம்.
இதற்கு முன், இது போன்ற சிக்கலான சிகிச்சைகள் திறந்த இதய அறுவை சிகிச்சை மூலமே செய்யப்பட்டன. ஆனால் நாங்கள், ஒரு சிறு துளை வழியாகவே இந்த புதிய சாதனையை நிகழ்த்தினோம். இந்த புரட்சிகர சிகிச்சைக்கு பிறகு நோயாளி ஒரே வாரத்தில் நலமுடன் வீடு திரும்பினார்.” என்று அவர் விளக்கமளித்தார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்: “இந்த மைல்கல் சாதனை புதுமையான சிகிச்சை உத்திகள், தைரியம் மற்றும் எங்கள் மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலனாகும். குணமளிக்கும் சிகிச்சைக்கான வேறு வாய்ப்புகள் இல்லாத ஒரு வயது முதிர்ந்த நோயாளிக்கு உலகில் முதன்முறையாக இத்தகைய சிக்கலான சிகிச்சை செயல்முறையை செய்திருப்பது எங்கள் மருத்துவமனைக்கு பெருமிதம் அளிக்கிறது.
உயிரை காப்பாற்றியிருக்கும் இந்த வெற்றிகர சிகிச்சையின் மூலம் உலக மருத்துவ வரைபடத்தில் இந்தியா தனது இடத்தை மீண்டும் ஒருமுறை வலுவாக நிலைநாட்டியிருக்கிறது,” என்றார்.
உடல்நலம் தேறிய இந்த மூதாட்டி, மருத்துவர்களின் பின்தொடர் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறார். இந்தச் சாதனை, இனி இது போன்ற அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கும் ஒரு புதிய சிகிச்சை முறையின் மூலம் தீர்வை வழங்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், நிரூபிக்கப்பட்ட கருத்தாக்கமாகவும் திகழ்கிறது.