விற்று விட நினைக்கும் பூர்வீக வீட்டில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் கணேஷ் பாபு (எழுத்து, இயக்கமும் அவரே…) எவ்வாறு முனைகிறார் என்பது கதை. ஒரு வாழ்வின் போராட்டத்தையே அதற்குள் புதைத்து வைத்து அதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரனும் சகோதரியும் தங்கள் பூர்வீக வீட்டை விற்க நினைக்க, அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை.
ஆனால் வேறுவழியின்றி சம்மதித்தாலும் அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க அவருக்கு மனமில்லை. அதைக் காப்பாற்ற நினைப்பதில் ஏற்படும் விளைவுகள் அவரவர்க்கு தங்கள் கடந்த கால வாழ்க்கையை நினைக்க வைக்கின்றன.
மூன்று தோற்றங்களில் வரும் நாயகன் கணேஷ்பாபு வழக்கமாக சிரிக்கும்போது அழகாக இருப்பவர். அதேபோல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.அவருக்கு இந்தப்படத்தில் சிரிக்கும் காட்சிகளைவிட சோகக்காட்சிகளே அதிகம் இருக்கின்றன. ஆனாலும் அனைத்திலும் மனத்தில் பதிகிறார்.
நாயகி சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்த படங்களிலேயே கனமான பாத்திரம் ஏற்றிருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கும் அவருக்கு இதுபோன்ற நடிக்க நேரும் வாய்ப்புகளை வழங்கலாம்.
கீதாகைலாசம் பாத்திரம் முதல் தலைமுறையின் பிரதி(நிதி)யாக அமைந்திருக்கிறது. அது இந்தத் தலைமுறையை யோசிக்க வைக்கும் தன்மை உடையது.
செம்மலர் அன்னம் மற்றும் சிறுவன் நித்தீஷ் பாத்திரங்கள் கவர்கின்றன. கட்டில் மீது நித்தீஷ் உறங்கும் ஒரு காட்சியே படத்தின் ஜீவனை சொல்லி விடுகிறது.
ஸ்ரீகாந்த்தேவாவின் இசை பட வெளியீட்டுக்கு முன்பே முக்கியத்துவம் பெற்று விட்டது சிறப்பு. எல்லா ஆங்கிளிலும் வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு கதையின் கனத்தை முன்னிலைப் படுத்துகிறது என்றால் பி.லெனினின் படத்தொகுப்பு அதை முக்கியப் படுத்துகிறது.
வாழ்வின் அச்சாரமே அனுபவ அறிவிலும், உணர்வுகளிலும்தான் இருக்கிறது என்பதை இயக்குனராக நமக்குள் கடத்தியிருக்கிறார் கணேஷ் பாபு.
கட்டில் – தாலாட்டு..!