திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்ந்லக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்
இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த சில மணிநேரங்களில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
கடைசியாக இன்று மாலை (ஆகஸ்ட் 7) 6-40க்கு வந்த செய்தியில் தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 94. இன்று மாலை 6:10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பலவேறு கட்சித் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்லாது கட்சி பாகுபாடின்றி ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் அவருக்காக இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை தமிழகத்திலும், புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் தமிழக அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு. கருணாநிதியின் உடல் இன்று இரவ 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரையில் கோபாலபுரம் இல்லத்திலும் இரவு 1 மணிமுதல் 3 மணிவரை சி.ஐ.டி. காலனி இல்லத்திலும், அதிகாலை 4 மணிமுதல் ராஜாஜி மண்டபத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தி.மு.க அறிவித்துள்ளது.