March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • நெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்
October 20, 2018

நெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்

By 0 1111 Views

“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார். 

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்க்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
.
நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அதனைப் பெற்று செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் அவற்றை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின்போது 4 கிலோவாகத் திரும்பப் பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார்.

இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தியதன் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் .

இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கிய சிற்பி.

உணவே நஞ்சாகிப் போன உலகில் தனது அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டால் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரம்பரிய உணவு முறைக்கு மாற்றிக்காட்டிய பெருமகன் ஆவார்.

இவரது சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருது, மற்றும் தமிழக அரசு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், தனது விழிப்புணர்வுப் பயணத்தை துணிவோடும் நம்பிக்கையுடன் தொடர்ந்து வருகிறார். 

சாதாரண ஏழை விவசாயி மகனாகப் பிறந்து தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து ஏழ்மை வாழ்க்கை நிலையிலேயே தனது அர்ப்பணிப்பு மிக்க சேவையைத் தொடர்வதை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட 
கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் என பலரும் நேரில் சந்தித்தும் ,நிதி அளித்தும் உதவியதால் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளின் மருத்துவ சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவது நம்பிக்கையளிக்கிறது என்பதை நன்றியுடன் நினைவு கூற விரும்புகிறேன்.

இதனைத் தங்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் அனைவரின் பிரார்த்தனைகளும் ஜெயராமன் நோயிலிருந்து மீண்டு வர வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் காத்திருப்போம். 

தற்போது அவர்கீழ்கண்ட முகவரியில் தங்கி சிசிச்சை பெற்று வருகிறார்.

முகவரி :
சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை
செல் : 9952787998..”