சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.
வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதிலிருந்து…
“ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து போய் தயாரிக்க முடிவு செய்தார். படம் ஆரம்பமானது.
எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை கூட சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லவில்லை. நினைச்சத எடுங்க, நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். என்னை இயக்கியது எல்லாமே என் நண்பர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலையில் இல்லை.
‘கௌசல்யா முருகேசன்’ என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம்தான் இந்தக் கதையை நகர்த்தி செல்லும். இதற்கான ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது.
கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம். சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார்.
வாயாடி பெத்த புள்ள பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது என்றால் அதற்கு ஜிகேபி எழுதிய, எளிமையான பாடல் வரிகளும்தான் முக்கிய காரணம்..!”
‘எல்லாமே இங்கே நான்தான்…’ என்கிற சினிமாவில் “நண்பர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை..!” என்று சொல்லும் அருண்ராஜா காமராஜ் அடக்கத்துக்கு சிறந்த உதாரணம்..!