படைத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படத்தை தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜுக்கு கட்ஸ் அதிகம் தான்.
நடிப்பில் உள்ள அதீதமான ஆர்வம் காரணமாக இந்த படத்தில் நாயகனாகவும் இருக்கும் இயக்குனர் ரங்கராஜ் “பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…” என்கிற நோக்கில் தன்னுடைய தாகத்தை எல்லாம் தானே படம் எடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு அவர் ஒரு காக்கிச்சட்டை கதையை தேர்ந்தெடுத்திருப்பதிலும் தவறில்லை. ஆனால் என்ன ஒன்று, அந்தக் கதை ஏற்கனவே பலமுறை அடித்துத் துவைக்கப்பட்டுக் கஞ்சி போட்டு அயர்ன் பண்ணி வைத்த கதைதான்.
தாய் தந்தையை இழந்த ரங்கராஜ் படித்து போலீஸ் வேலைக்கு வருகிறார். மனைவி, பெண் குழந்தை என்று சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பதால் அவர் அநியாயத்துக்கு எதிராக செயல்படுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதன் விளைவாக வில்லன் கோபத்துக்கு ஆளாகி மனைவியை பறிகொடுத்து, நடைப் பிணமாக வாழ்கிறார்.
உயிரோடு இருக்கும் பெண் குழந்தைக்காக அவர் வாழ்ந்தாக வேண்டும் என்று அவரிடம் பணி புரியும் டெல்லி கணேஷ் உந்து சக்தி கொடுப்பதுடன் மனைவியை கொன்றவனுடைய துப்பு ஒன்றையும் கொடுக்கிறார்.
வில்லனை சம்ஹாரம் செய்து விட்டு பெண் குழந்தையுடன் சொந்த ஊரில் இருக்கும் ஒரே சொந்தமான மாமா வீட்டுக்கு செல்ல தன் பெற்றோரை கொன்றவனைப் பற்றியும் ஒரு துப்பு அங்கே கிடைக்கிறது. அதற்குப்பின் என்ன என்பதுதான் மீதிக் கதை.
அப்பா விவசாயி மற்றும் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று முதல் படத்திலிருந்து இரட்டை வேடங்களில் நடித்த அசத்தியிருக்கிறார் ரங்கராஜ். அவருடைய உயரம் உடல்வாகு எல்லாமே போலீஸ் பாத்திரத்தில் எப்படி பொருந்தி இருக்கிறது அப்படியே விவசாயி பாத்திரத்திலும் பக்காவாக பொருந்தி இருக்கிறது. காதல், ஆக்சன், செண்டிமெணட் என்று எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் ரங்கராஜ்.
ஆனால் பட ரிலீசுக்கு முன்பே அவரை விட அகில உலகப் புகழ் பற்றிருக்கும் ஸ்ருதி நாராயணன், அப்பா பாத்திரத்துக்கு ஜோடியாக வருவது இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கக்கூடும்.. ஆனால் அதை விளம்பரத்தில் கவனமாக பயன்படுத்திக் கள்ள வேண்டும் ரங்கராஜ்.
தலைமை காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேசுக்கு அவர் ஏற்று இரக்கும் இஸ்லாமிய வேடம் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அவரும் வயது மூப்பு காரணமாக மூச்சு வாங்கி நடித்திருக்கிறார்.
வழக்கமாக வில்லனாக நடிக்கும் சாய் தீனாவுக்கு இதில் குணச்சித்திர வேடம். ஆனால் அதற்கும் பொருத்தமாகவே இருக்கிறார்.
இவர்களுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மா ஸ்ரீலேகா, பெண் காவர் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
கதைக்களத்திற்கு ஏற்றவாறு மனோஜ் ஒளிப்பதிவு செய்திருப்பது நல்ல விஷயம்தான்.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.
எதிர்பார்ப்புள்ள ஹீரோக்களின் படங்களே நம்பிக்கையை இழக்கும் இன்றைய சினிமாவில் தன்னம்பிக்கையை மூலதனமாக வைத்து களம் இறங்கி இருக்கும் ரங்கராஜின் கட்ஸ் வரவேற்கத்தக்கது.
– வேணுஜி