வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாகk கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கமல் தனது பாணியில் உரையாற்றியதில் இருந்து…
“இது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம்.
வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன்.நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதை ஏன் செய்யாமல் இருக்கிறேன் என்ற குற்ற உணர்வினால் நான் அரசியலுக்கு வந்தேன்.
நான் முப்பது வருடங்களுக்கு முன்னால் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் இருபத்தைந்து வயது ஆகியிருக்கும்.
இப்போது அரசியலில் நான் 8 மாத குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன். ஆனால் சிறுபிள்ளை என நினைத்துவிடாதீர்கள். மக்களுக்காக பறந்துகொண்டிருக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது அல்ல என் வேலை.
நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு: நான் கழுகு என்பதை மக்கள்தான் சொல்லிக்கொடுத்தார்கள். தமிழகத்திற்கு என்று தனித்துவம் உள்ளது…!”